தமிழ்நாட்டில் சினிமா ரசிகர்களிடையே இப்பொழுது பில்லா 2 ரிலீஸ் பற்றிய பேச்சுதான். 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கவுண்டவுன் புதன்கிழமை முதலே தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் ரஜினி, கமல், விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் என்றாலே ஒருவாரத்திற்கு முன்பிருந்தே படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு கட் அவுட் வைப்பதும், கொடி, தோரணம் கட்டுவதும், களை கட்டும். இப்பொழுது அதே போன்ற காட்சிகள் அஜீத் நடிப்பில் வெளிவர
உள்ள பில்லா 2 ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு பார்க்க முடிகின்றன. கடந்த இருதினங்களுக்கு முன்பிருந்தே பல அடி உயர அஜீத் கட் அவுட்கள் ஆங்காங்கே முளைத்துள்ளன.
படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. கொடிகளும், தோரணங்களுமாய் கட்டி ரசிகக்கண்மணிகள் கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். பில்லா-2 படம் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அன்றைய தினம் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம், காவடி, என எடுத்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.
ஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள பில்லா-2 படத்தில் அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடித்துள்ளனர். சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ள இப்படம் முடிந்து மாதங்கள் சில ஆகிவிட்டன. கடந்த மே மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளால் தள்ளிக்கொண்டு போனது.
சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை துறை ஏ சான்று அளித்த நிலையில் பட ரிலீஸ் மேலும் தள்ளிபோனது. இந்த நிலையில் ஜூலை இறுதியில் பில்லா வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.
பக்கா ஆக்ஷ்ன், த்ரில்லராக அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது பில்லா-2. வருகிற ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஏற்கனவே 13ம் தேதி வெள்ளிக்கிழமை ராசி இல்லாத நாள் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் இவ்வளவு காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஜூலை 13 ம் தேதி வெள்ளிக்கிழமை பில்லா 2 ரிலீஸ் தேதியாக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நம்பிக்கையை பொய்யாக்கி வெற்றிவாகை சூடுவாரா பில்லா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.