நகைச்சுவை நடிகையாக 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கோவை சரளா தற்போது சின்னத்திரையில் பாசப்பறவைகள் நிகழ்ச்சியை நாகரீக உடையில் தொகுத்து வழங்குகிறார். விஜய் டிவி வழங்கிய விருதில் ரசிகர்களினால் சிறந்த நகைச்சுவை நடிகையாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அந்த மகிழ்ச்சியோடு இருந்த கோவை சரளா தனது பயணம் பற்றி நம்மிடையே
பகிர்ந்து கொண்டார்.
‘முந்தானை முடிச்சு' படத்தில் அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, 500 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். சின்னத்திரையில் சீரியல், ரியாலிட்டி ஷோ என புதிய பொறுப்புகள் கிடைக்கிறது. இரண்டுமே பேலன்ஸ் ஆக போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் எனக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக, பெண்கள். நான் எந்தப் படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறேனோ, அந்தப் பெயரில் செல்லமாக அழைக்கிறார்கள். தெலுங்குப் படங்களில் எனக்கான முக்கியத்துவமும், மரியாதையும் கிடைக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, காமெடி செய்வதே ஹீரோயினுக்கு நிகரானதுதான். ஒவ்வொரு படத்திலும் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆகவே ஹீரோயினாக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. மனோரமா ஆச்சி, நான் தவிர இப்பொழுது நிறைய பேர் காமெடி செய்கிறார்கள். இருவருக்குப் பிறகு யார் என்று இன்னும் தெரியவில்லை.
தமிழில் புதுப்புது காமெடி நடிகைகள் வர வேண்டும். அப்போதுதான் நடிப்பில் போட்டி இருக்கும். ரசிகர்களுக்கும் வித்தியாசமான காமெடி கிடைக்கும். இப்பொழுது சின்னத்திரையில் சீரியல் வாய்ப்புகளும் வருகின்றன. கேம்ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறேன். ரசிகர்களிடையே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
திருமண பந்தத்தின் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அதேபோல் அக்கறையும் இல்லை. யாரோ ஒருவர், என்னிடம் இருந்து தப்பித்து, பிழைத்துப் போகட்டும் என்ற நல்ல எண்ணம்தான் காரணம். உறவினர்களின் வாரிசுகள் எனக்கும் வாரிசுகள்தான். அவர்களுக்காக என்னை நான் அர்ப்பணித்து வாழ்வதில் தனி சுகம் காண்கிறேன். அவர்களை வளர்த்து ஆளாக்கி வருகிறேன்.
நான் சாமியாராகப்போவதாக பத்திரிக்கையில் எழுதிவிட்டார்கள். சாமியாராகித்தான் நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை. யார் வாழ்க்கையையும் கெடுக்காமல், என்னால் முடிந்தவரை உதவுகிறேன். யாரைப்பற்றியும் அவதூறு பேசுவதில்லை, ஏமாற்றுவதில்லை. என் மனசாட்சிக்குப் பயந்து நடக்கிறேன்.