சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவின் ரீமேக்கில், ரஜினி வேடத்தில் நடிக்கிறார் சிவா. கே பாலச்சந்தர் இயக்க, ரஜினி, மாதவி ஜோடியாக நடித்து 1981-ல் ரிலீசான படம் தில்லு முல்லு. தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் நடித்திருந்தனர். க்ளைமாக்ஸில் கமல் ஹாஸன் கவுரவ வேடத்தில் தோன்றினார். சரிதாவின் தங்கை விஜி இதில் ரஜினி தங்கையாக அறிமுகமானார்.
மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் கலக்கின. தங்கங்களே தம்பிகளே பாடலில் எம்ஜிஆர், சிவாஜி, எம்ஆர் ராதா, கமல் போல அசத்தலாக இமிடேட் செய்திருப்பார் ரஜினி. கடைசியில் பில்லா ரஜினியாகவும் தோன்றுவார். இந்த படம் தற்போது ரீமேக் ஆகிறது. ரஜினி வேடத்தில் நடிக்க சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழ் படம், சென்னை 28, சரோஜா, கலகலப்பு என காமெடிப் படங்களின் மூலம் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.
சிவாவிடம் இது குறித்து கேட்ட போது, "தில்லு முல்லு ரீமேக்கில் நான் நடிக்கப் போவது உண்மைதான். சூப்பர் ஸ்டார் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வந்த பிரமாதமான படம் இது. அவர் பேரை கெடுக்காம இருக்கணுமே என்ற பயமும் உள்ளது!," என்றார்.