கலைப்புலி எஸ். தாணு, ஏ.ஆர். முருகதாஸ், விஜய், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் “துப்பாக்கி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, அடையாறு பார்க் ஹெரட்டன் ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. “துப்பாக்கி’ படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்துவிட்டு அப்படத்தில் தான் சொந்த குரலில் பாடியுள்ள கூகுள், கூகுள்.. எனும் பாடலை விழா மேடையில் நான்கு வரிகள் பாடிக் காட்டிய விஜய், இந்தப் படம் எனது ட்ரீம் புராஜக்ட் ஆகும்.
இந்தப் படத்திற்காக எங்க அப்பாவுக்குதான் நன்றி சொல்லவேண்டும். தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், கதாநாயகி காஜல் அகரவால் என இவ்வளவு பெரிய டீமை எனக்காக அமைத்துக் கொடுத்தவர் அவர்தான். அதற்காகத்தான் என் அப்பா எஸ்.ஏ.சிக்கு நன்றி சொல்கிறேன் இத்தருணத்தில்.
ஏ.ஆர். முருகதாஸுடன் ஒருபடம் பண்ண வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. அவர் “குஷி’ படத்தில் உதவியாளராக இருந்தபோதே அவரை எனக்குத் தெரியும். அவர் செய்த படங்கள் அத்தனையும் என்னை கவர்ந்தவை! ஒரு ஒரு படம் அவர் இயக்கத்தில் வெளிவரும்போதும் முருகதாஸுடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று எண்ணுவேன். அது தள்ளிப்போய், தள்ளிப்போய் “துப்பாக்கி’ படத்தில் அமைந்திருக்கிறது. முருகதாஸ் ஒரு ஃபன்டாஸ்டிக் ஸ்டோரி டெல்லர். அவர் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது ஒருநிமிடம் கூட இந்தப் பக்கம், அந்தப் பக்கம் கவனம் திரும்பாது கேட்டேன். ஒரு நிமிடம் கூட என் கவனம் வேறு எதிலும் போகவில்லை மனது மாறவில்லை. அவர் சொன்னதை அப்படியே படமாக்கி இருக்கிறார். இதுவரை இந்த மாதிரி படம் இந்த மாதிரி கேரக்டர் நான் செய்ததில்லை.
ஷூட்டிங் ஆரம்பித்த முதல்நாள் முதல் இதுவரை ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைப் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார். அதன் பலன் துப்பாக்கி படத்தின் ஒவ்வொரு சீனிலும் மேஜிக்காக பிரதிபலித்திருக்கிறது. ஒவ்வொரு உதவி இயக்குநரையும் அவர் மேடை மீது ஏற்றி இங்கு மரியாதை செய்தது அவரது உன்னத பண்பை காட்டுகிறது. அவரது இது மாதிரி பண்புகளையும் இயக்கத்தையும் பார்த்து அவரை நான் குட்டி மணிரத்னம் என்றுதான் சமீபமாக சொல்லி வருகிறேன். அதையே ஏ.ஆர்.முருகதாஸ்க்கு நிக்நேமாகவும் சூட்டியுள்ளேன்.
ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரியே ஓளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் பற்றியும் சொல்லியாக வேண்டும். அவர் தமிழே வேண்டாம் என இந்தி படவுலகில் செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும் நாங்கள் கேட்டுக் கொண்டதால் “துப்பாக்கி’யை ஒப்புக் கொண்ட அவர் தொடர்ந்து தமிழில் தரமான மெசேஜ் உள்ள கதைகள் கிடைத்தால் ஒளிப்பதிவு செய்ய தயாராக உள்ளார். நல்ல ஸ்கிரப்ருடன் நம் இயக்குநர்கள் அவரை அணுகினால் அவர் எந்தவித தயக்கம் இன்றி தமிழ்படம் செய்வார் என உறுதியாக என்னால் சொல்ல முடியும்!
தயாரிப்பாளர் தாணு சார், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் முருகதாஸ், சந்தோஷ்சிவன் மாதிரியே இந்தப்படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார்கள். கதாநாயகி காஜல் அகர்வாலும் கூட நிறைய உழைத்திருக்கிறார்.
காஜல் பற்றி சொல்வதென்றால் பெயரிலேயே ஸ்வீட் கடையை வைத்திருக்கும் அவர்தான் எனது ஸ்வீட் ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் ஃபிரண்ட். இந்த படத்துல அவ்வளவுதான்! என்று சிரித்த விஜய். மீண்டும் ஒருமுறை பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், பா.விஜய்யில் தொடங்கி தயாரிப்பாளர் தாணு, தன் தந்தை எஸ்.ஏ.சி. உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்துச் சென்றார்.
விஜய்யை விட அவரது அப்பாவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான எஸ்.ஏ.சந்திரசேகரனின் பேச்சு செம சூடாக இருந்தது. அதில் குறிப்பாக இந்தப் படத்தை முதலில் தயாரித்த நான் ஏ.ஆர். முருகதாஸை அணுகியபோது அவர் எக்குத்தப்பாய் எக்கச்சக்க சம்பளம் கேட்டார். அவர் தகுதிக்கு ஏற்ற சம்பளம்தான் அது! என்றாலும், நமக்கு தாங்காது என இப்படத்தை தாணுவிடம் தள்ளி விட்டு விட்டேன்... என்றவர்., நமக்கு டென்ஷன் இல்லாமல் ஒரு கோடி போனால் கூட ஓ.கே. டென்ஷனுடன் 10 கோடி வருகிறது என்றால்... அது ஒப்புக் கொள்ளாது! என்பதால் விட்டுக் கொடுத்தேன். இந்த துப்பாக்கி நிச்சயம் வெற்றிப்படம்! அது நிச்சயம் தாணுவிற்கு நல்ல லாபம் தரும் என்று எஸ்.ஏ.சி. பேசியது ஹைலைட்!