The Secret Life of Bees (2008) சினிமா விமர்சனம்


Obama ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் இந்தக் காலத்தில், இந்தப் படத்தைப் பார்க்கும்போது, “வாவ்! அமெரிக்கா ஒரு நாற்பத்து ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தூரம் வந்திருக்கின்றது!” என்று வியப்படைவதைத் தவிர்க்கமுடியவில்லை. இப்படத்தின் கதை பெரும்பாலும் அன்பைத் தேடியலையும் ஒரு சிறுமியை மையமாகக் கொண்டிருந்தாலும், 1960களில் கறுப்பர்களிற்கான அடக்குமுறை அமெரிக்க மண்ணில் வேரோடி இருந்ததையும் இந்தப்படம் அழகாகவும், அவலமாகவும் காட்டுகின்றது.

நாலுவயதில் தற்செயலாக தாயைக் கொலைசெய்தவள் லில்லி (Dakota Fanning) (வாவ்!!) அந்தச் சம்பவம் பற்றிய சரியான ஞாபகம் இல்லாமல் தொடர்ச்சியான குற்ற மனப்பாங்குடன் வளர்கின்றாள். அதுபற்றி கொஞ்சமும் கவலைப் படாத கொடுமைக்கார அப்பா. லில்லிக்கு ஒரே துணை, லில்லி வீட்டு தோடம்பழ பண்ணையில் வேலை செய்யும் ஒரு கறுப்பினப் பெண் ரொசலின் (Jennifer Hudson.) 1964′ஆம் ஆண்டு அமெரிக்க கறுப்பினத்தவரின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான ஆண்டு — இந்த ஆண்டில்தான் கறுப்பர்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டமொன்று இயற்றப்பட்டது. இந்த சட்டத்தினால் மகிழ்வும் உத்வேகமும் கொள்ளும் ரொசலின் நகரத்தினுள் செல்லும்போது அங்கிருக்கும் சில இனத்துவேசக்காரர்களோடு சச்சரவுக்குள்ளாகின்றாள். சட்டம் பராளுமன்றத்தோடு நின்றுவிட, வெள்ளையர்களால் வெறித்தனமாக தாக்கப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டாலும், குற்றவாளியாகக் காவல்துறையினரால் காணப் படுகின்றாள் ரொசலின்! இதே வேளையில், 14 வயதை அடையும் லில்லி, தகப்பனோடு ரொசலினைப் பற்றி, தனது தாயைப் பற்றி என்று ஒரு பெரிய வாக்குவாததில் இறங்குகின்றாள். வாக்குவாதம் மிகுந்த வெறுப்பில் முடிய, வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுகின்றாள் லில்லி. வீட்டை விட்டு ஓடும் வழியில், ரொசலினையும் வைத்தியசாலையிலிருந்து களவாக விடுவித்துசெல்கின்றாள். ஓடுகாலியான லில்லிக்கும், ‘குற்றவாளியான’ ரொசலினிற்கும் போக்கிடமில்லாது போக, லில்லியின் தாயாரின் பழைய பெட்டியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புனித மேரியின் படமொன்றின் பின்னால் இருக்கும் நகரொன்றின் பெயரை இலக்காகக் கொண்டு தமது பயணத்தை தொடங்குகின்றனர். அந்த நகரத்தை வந்து அடையும் இருவரும், அங்கே தேன் வியாபாரம் செய்து கொண்டு, ஓரளவு பணக்காரர்களாக இருக்கும் கறுப்பின போட்ரைட் (Boatwright) சகோதரிகளைச் சந்தித்து அவர்களிடம் அடைக்கலம் புகுகின்றனர். இங்கே இவர்கள் எவ்வாறு அன்பையும் அமைதியையும் பெறுகின்றனர் என்பது கதை.

ஒரு நாவலிலிருந்து திரைக்குவந்த படமாதலால், கதையின் ஆழம் படத்தில் தெரிகின்றது. படம் சாந்தியுடன் முடிவடைகின்றது என்றாலும், லில்லி படும் மனவேதனைகளையும், கறுப்பர்களிற்கு எதிரான கொடுமைகளையும் காட்டும்போதில் படம் மனம் மனதைக் குடைகின்றது. அதற்குத் தோதாக படத்தின் நடிகைகள் குழுவும்: Dakota Fanning, Jennifer Hudson, மற்றும் மூத்த போட்ரைட் சகோதரியாக வரும் Queen Latifah மூவரும் தமது வழமையான நடித்திறனை காட்டியிருக்கின்றனர். மற்ற போட்ரைட் சகோதரிகளாக வரும் Alicia Keys, Sophie Okonedo கூட இந்தப் படத்தில் அபாரமான நடிப்பை வழங்கியிருக்கின்றனர். நல்லதொரு கதைக்கு, சிறந்த நடிகர்கள் பட்டாளமும் கிடைத்துவிட படம் இலகுவாக ‘நல்ல படம்’ என்ற வகைக்குள் சென்று விடுகின்றது. சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget