வழமையான தமிழ் படங்களிலிருந்து, வரிக்கு வரி வேறுபடுவதான ஒரு படம் பார்க்க வேண்டுமோ? இந்தப் படத்தைப் பாருங்கள். படத்தின் கதையைப் பற்றி விலாவாரியாக இங்கு சொல்வது சரியில்லை. படம் மைக் (Chiwetel Ejiofor) என்ற, ஜி-யுட்ஸு என அழைக்கப்படும் தற்பாதுகாப்பு கலையக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கைப் பற்றிச் சொல்கின்றது. வாழ்க்கையில் நேர்மையையும், கண்ணியத்தையும் நூறுவீதம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதர் மைக். நேர்மை சோறு போடுவதில்லை
என்பதால், அவரது பயிற்சி மையமும், தனிப்பட்ட பொருளாதாரமும் வறுமைக் கோட்டைத் தட்டி நிற்கின்றது. இவரது திறமையை பாவித்து சண்டைப் போட்டிகளில் பங்குபெற்றால் நிறையப் பணம் உழைக்கலாம். என்றாலும், போட்டிகளில் பணத்திற்காக போட்டியிடுவது கலையை இழிவுபடுத்துவது போலாகும் என்ற இவரது கோட்பாடினால், அதற்கு இவர் தயாரில்லை. இன்னொரு பக்கத்தில், இவர் போட்டிகளில் பங்குபற்றினால் அதிக ரசிகர்கள் கவரப்படுவார்கள், அதனால் அந்தப் போட்டிகளில் இருந்து கிடைக்கும் வருமானம் உயரும் என்பதான நிலமை அந்தப் போட்டிகளை நடத்துபவர்களிற்கு. எனவே, மைக்கை சதி செய்து, போட்டிகளில் பங்குபற்றும்படியான நிலைமைக்கு தள்ளுவதற்கு திட்டம் தீட்டுகின்றார்கள். அந்த சதிவலைகளையும் அதிலிருந்து மைக் மீள்கின்றாரா என்பதையும் படம் காட்டுகின்றது.
நல்லவன் ஒருவனின் வாழ்வை சதிகாரர்கள் கெடுப்பது பல தமிழ்ப் படங்களில் பார்த்ததுதான். என்றாலும், இந்தப் படத்தில் அந்த சதியாளர்கள் பின்னும் வலைகளைப் பார்க்க சும்மா வயிறு பற்றி எரிகின்றது பாருங்கோ, அப்படியான ஒரு உணர்வை எந்த ஒரு தமிழ்ப் படமும் எனக்குத் தந்ததில்லை! அதிலும் முக்கியம், மைக்கின் நல்ல குணத்தையே அவரின் பகைவனாக அவன்கள் மாற்றுவது. என்றாலும், படம் தமிழ்ப் படங்களிலிருந்து உண்மையாக வேறு படுவது, சதிகாரர்களின் வலைக்குள் விழுந்தபின் மைக்கின் நடவடிக்கைகள். எங்களது படங்களில் என்றாலோ, “பொறுத்தது போதும் பொங்கி எழு” என்று சொல்லிவிட்டு, எதிரிகளை துவம்சம் பண்ணுவார் கதாநாயகன். ம்ம்ம்… சரியாக அப்படி இல்லை இங்கே. இலகுவாக ஆக்ஸன் படமாக மாறியிருக்கக் கூடிய படம். மிகவும் கடினப் பட்டு அதை இழுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். படத்தில் பல விடயங்கள், பார்த்து முடித்த பின்னரும் கேள்வியாக இருக்கும். பெரும்பாலான பார்வையாளரிற்கு அது மனத்திருப்தியைத் தராது என்றாலும், என்னைப் பொறுத்தவரை அது ஒரு கவிதை போல இருக்கின்றது. கவிதைகளின் கருத்தை ஆட்களிற்கு ஆட்கள் வெவ்வேறாக அர்த்தம் செய்து கொள்வது போல, இந்தப் படத்தின் சில விடயங்கள் பார்வையாளரின் தீர்ப்புக்கே விடப்பட்டுள்ளன. Chwetel’ன் நடிப்பு அபாரம். யோகி போன்ற ஒரு பாத்திரத்தில், உணர்ச்சிகளை கொட்டாமல் கொட்டி நடித்திருக்கின்றார். ஒரு தடம் பார்த்துவிட்டு உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள்.