இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார் விஜய். விடுமுறைக்கு மும்பை வருகிறார். இங்கு அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள் இரயில் நிலையத்தில் இவருக்காக காத்திருக்கிறார்கள். இரயில் தாமதமானதால் பதற்றம் அடைகிறார்கள். பின்னர் விஜய் வந்தவுடன் அவரை நேராக திருமணத்திற்கு பெண் பார்க்க இராணுவ உடையிலேயே அழைத்து செல்கிறார்கள்.
அங்கு பெண்ணாக காஜல் அகர்வால் அறிமுகமாகிறார். புடவையை கட்டி குடும்பபாங்காக தெரிகிறார் காஜல். இவரை பார்த்துவிட்டு செல்லும் வழியிலேயே விஜய் பெண் வீட்டாருக்கு போன் செய்து பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்கிறார்.
குடும்பபாங்காக இருப்பதால் காஜலை வேண்டாம் என்று சொன்ன விஜய் மறுநாள் தனது நண்பர் மும்பை எஸ்.ஐ.ஆன சத்யனுடன் பெண்கள் கல்லூரிக்கு பாதுகாப்புக்காக செல்கிறார். அங்கு குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெருகிறார் காஜல். இதை கண்ட விஜய், காஜல் மீது காதல் வசப்படுகிறார்.
ஒரு நாள் சத்யனுடன் பேருந்தில் பயணம் செல்கிறார் விஜய். அப்பொழுது பயணி ஒருவர் தனது பர்சை காணவில்லை என்று கூச்சலிடுகிறார். இதனால் பேருந்தை வழியில் நிறுத்தி விஜய் மற்றும் சத்யன் பயணிகள் அனைவரையும் சோதனையிடுகிறார்கள். அப்பொழுது திருடனை கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால் பேருந்தில் இருந்து மற்றொரு பயணி பயந்து ஓடுகிறார். அதை கண்ட விஜய் அவரை துரத்தி பிடித்து விசாரிக்கிறார். அப்பொழுது அவர் வந்த பேருந்து வெடித்து சிதறுகிறது. இதனால் விஜய் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைக்கிறார். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கும் இவரை விஜய் பிடித்து தனது வீட்டில் அடைத்து வைக்கிறார். இவரிடம் இருந்து மற்ற உண்மைகளை ஆராய்கிறார். இதற்கு பின்னனியில் யார் யார் இருக்கிறார்கள் என்று விஜய் கண்டுபிடிக்கிறார்.
அதில் மும்பையில் 12 இடங்களில் குண்டு வைக்க திட்டம் தீட்டியது தெரியவருகிறது. இதனை தடுக்க தனது இராணுவ நண்பர்கள் உதவியோடு முறியடிக்கிறார். இதை அறிந்த தீவிரவாதி தலைவன் விஜயையும் அவரது நண்பர்களையும் அழிக்க களம் இறங்குகிறார். இதில் இருந்து விஜய் தப்பித்தாரா? அல்லது அவர்களை அழித்தாரா? காஜல் அகர்வாலை கரம் பிடித்தாரா? என்பது மீதி கதை.
இது விஜய் படங்களில் முற்றிலும் மாறுபட்ட படம். இராணுவ கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தனது உடல் அமைப்பை மாற்றி அருமையாக பொருந்தி உள்ளார். படம் முழுவதும் ஒரு இராணுவ வீரரின் தியாகத்தையும் துணிச்சலையும் தனது வசனங்களால் ரசிகர்களிடம் அழுத்தமாக பதிய செய்கிறார். குறிப்பாக ஆயிரம் பேரை கொல்வதற்காக ஒரு தீவிரவாதியே உயிரை கொடுக்கிறான். ஒரு நாட்டை காப்பாற்றுவதற்காக உயிரை கொடுக்க நாம் ஏன் துணிய கூடாது என்ற வசனம் சிந்திக்க வைக்க கூடியது.
காஜல் அகர்வால் முந்தைய படங்களை விட துப்பாக்கியில் சற்று தூக்கலாகவே இருக்கிறார். மும்பை கதைக்கு ஏற்ப வில்லனாக வித்யுத் ஜம்வால் பொருந்திருக்கிறார். இறுதிக் காட்சியில் விஜய்யுடன் இவர் போடும் சண்டைக் காட்சி அழகு. சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்து. ஹரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக விஜய் பாடிய கூகுல்... கூகுல்... பாடல் முனுமுனுக்க செய்கிறது. இப்படத்தில் நாட்டை வெறுத்து இருக்கும் இளைஞர்களை, தீவிரவாதிகள் எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை இயக்குனர் முருகதாஸ் காண்பித்து இருக்கிறார். விஜயையும் இந்தி பேச வைத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் இந்தப்படம் முற்றிலும் மாறுபட்ட படம்.
மொத்தத்தில் துப்பாக்கி விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு.