பத்து வயதில் Little Miss Sunshine படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு தெரிவானவர் Abigail Breslin! அந்த நடிப்புத்திறனை தொடர்ந்து எடுத்துச் செல்கின்றார் இந்தப் படத்திலும். வருடம் 1934; அமெரிக்காவும் the great depression என்று அழைக்கப்படும் பாரிய உலகளாவிய ரீதியிலான பொருளாதார சிக்கலில் மாட்டி தவிக்கின்றது. Kit Kittredge (Abigail Breslin) சாதாரண ஒரு சிறுமி — பத்திரிகை செய்தியாளராக வரவேண்டும் என்ற பெரிய கனாவுடன். இவள் தனது கனவை நனவாக்க தளராது முயன்று கொண்டிக்கையில்
, நாட்டின் பொருளாதாரச் சிக்கல், இவளின் வீட்டையும் தாக்குகின்றது. வாகன விற்பனையாளரான Kit’இன் அப்பாவின் வியாபாரம் படுத்துவிட, அவர் ஊரை விட்டு வேலை தேடி பெரிய நகரமான Chicago’விற்கு சென்றுவிடுகின்றார். Kit’இன் அப்பா தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருக்க, இவர்களின் வீடு மேலும் மேலும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றது. Kit’இன் தாயார் தன்னால் முடிந்த அளவு பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் இவர்களது வீடு பறிபோகும் நிலைமை அண்மித்துக் கொண்டே செல்கின்றது. தவிர ஊரில் அதிகரித்துச் செல்லும் கொள்ளைகள். இப்படியான ஒரு சூழலில் Kit எவ்வாறு தனது வாழ்க்கையை சுவாரிசயமாக கொண்டுசெல்கின்றாள் என்பது கதை.
பெரிய கனவுகளோடு வெகுளியாக இருக்கும் சிறுமி எவ்வாறு மெல்ல மெல்ல பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டு மனதால் முதிர்ச்சியடைகின்றாள் என்பதை நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கின்றார் Abigail. இவற்றின் மத்தியில் நண்பர்கள், இலகுவான களியாட்டங்கள், வீரச்செயல்கள் என்பவற்றையும் மறக்கவில்லை. Abigail தவிர, அவரின் தாயாரக வரும் Julia Ormond‘உம் படத்தின் சுமையை இலகுவாகப் பகிர்ந்து கொள்கின்றார். படத்தில் drama, நகைச்சுவை, ஒழுக்கமூட்டும் செய்திகள், சிறுவர்களிற்கான சாகசங்கள் எல்லாமே நேர்த்தியாகக் கலக்கப் பட்டுள்ளன. அத்துடன் great depression கால வாழ்க்கையையும் சுவை படக் காட்டியுள்ளார்கள். மொத்தத்தில் குடும்பத்துடன் பார்ப்பதற்கு நல்லதொரு படம்.