சாப்ட்வேர் என்ஜினியராக வேலைபார்க்கிறார் ராம் சரண். இவரது மாமா பிரமானந்தம். வில்லன்களின் பிடியில் இருக்கும் தன் நண்பர்களைக் காப்பாற்றுகிறார் ராம்சரண். அப்போது நடக்கும் சண்டையில் வில்லனின் தம்பி கொல்லப்பட கொலையாளி யார் என்னும் கேள்வியுடன் விசாரணையில் இறங்குகிறது சி.பி.ஐ. ராம்சரண்தான் கொலை செய்தவர் என்பதை சி.பி.ஐ. கண்டறிந்து அவரை கைது செய்யப் போகிறது. கைது செய்யப் போன இடத்தில் என்ன நடந்தது? சிபிஐ கைது செய்யதா?
என்ன ஆனார் ராம் சரண் என்பதை வெள்ளித் திரையில் சொல்கிறது நாயக்.
ராம்சரண் வில்லன்களுடன் படுபயங்கரமாக சண்டை போடும் காட்சியில் துவங்குகிறது படம். தெலுங்கு படம்ங்கிறது சரியாத்தான் இருக்கு இப்படி மானாவாரியா முட்டி மோதிக்கிறாங்களே என்று நினைக்கிற நேரத்தில் சண்டைக் காட்சி முடிந்ததும் கொலை பற்றிய விசாரணையைத் துவக்குகிறது சி.பி.ஐ.. அது ஒரு பாதையில் பயணிக்க ராம்சரண் பிரம்மானந்தத்துடன் அடிக்கிற லூட்டி காமெடி கலாட்டாவாக பயணிக்கிறது. இடைவேளையில் சஸ்பென்ஸ் ட்ஸ்விட்டை ஓப்பன் பண்ணி அந்த முடிச்சை மெல்ல அவிழ்க்கிறார் இயக்குநர். ஆக்க்ஷ்ன் படங்களை எடுக்கும் போது இவ்வளவு காமெடியாக எடுக்க முடியுமா என்பதும் சந்தேகமே. ஆனால் ஆக்க்ஷன் படமாக இருந்தாலும் கலகலப்புடன் பரபரப்பாக படத்தை நகர்த்த முடியும் என்பதை நிருபித்திருக்கிறார் இயக்குநர் விநாயக். படத்தின் முதல் காட்சியில் துவங்கிய பரபரப்பும் துள்ளலும் படம் முடியும் வரை பயணிப்பது பிரமிக்க வைக்கிறது
தங்கள் ஊரில் இருக்கும் மருந்து கம்பெனிக்கு எதிராக மக்கள் போராடுவது, பெண்களை வைத்து விபச்சாரம் பண்ணுகிறவர்களை ராம்சரண் தட்டிக் கேட்பது, குழந்தைகளை மிரட்டி பணிய வைத்து பிச்சை எடுக்கும் தொழில் செய்பவர்கள் பற்றிய காட்சிகள் படத்தில் நாம் இன்னமும் ஒன்றிப் போக வைக்கும் அழுத்தமான காட்சிகள். அதுவும் பிச்சை எடுக்க வைப்பவர்களை அடித்து நொறுக்கி காவல்துறை கைவசம் ஒப்படைத்துவிட்டு வரும் ராம்சரணிடம் மீடியாக்காரர்கள் கேள்வி கேட்க, அதற்கு ‘எஸ்.எம்.எஸ். அது இது என்று ஏதாவது போட்டிகளை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதில்தான் உங்கள் கவனம் இருக்கிறது. பப்ளிசிட்டிக்காக வேலை செய்யாதீங்க, பப்ளிக்குக்காக வேலை செய்யுங்க, என்று சொல்லுகிற காட்சி டிவி மீடியாக்களுக்கு சாட்டையடி.
படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் செம அமர்க்களமாக இருக்கிறது. முக்கியமாக பாடல் காட்சிகளின் லொக்கேசன்ஸ். இந்த மாதிரி இடங்களில் எப்படித்தான் படப்பிடிப்பு நடத்தினார்களோ! அடேங்கப்பா! பாடல்களைப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொல்லுகின்றன அந்த லொகேசன்ஸ்.
நம்மூர்லயும் வெளிநாட்டுக்கு போயி சினிமா படப்பிடிப்பு நடத்தினோம்னு சொல்லுவாங்க. அங்க போயி ரோட்டுலயும் கடல்கரையிலயும் ஆடவிட்டு பாடல் காட்சிகளைப் படம் பிடித்துவிட்டு வருவாங்க. நாயக் படத்தின் பாடல்களைப் பார்த்து நம்ம இயக்குநர்கள் இது மாதிரி லொகேசன்ஸ்ல படம் பிடிக்கணும்னு சபதம் எடுத்தா பரவாயில்லை.
ராம்சரண் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார். பிடிக்காதவர்களுக்கு கூட இவரைப் பிடிக்கும் போலிருக்கிறது. இவரைத் திரையில் பார்த்தாலே திரையரங்கில் கைத்தட்டலும் விசிலும் அதிர்கிறது. மாஸ் ஹீரோ! ஆக்க்ஷனில் தூள் கிளப்பும் ராம்சரண் காமெடியிலும் ரகளை பண்ணுகிறார். நடனத்திலும் பிச்சி உதறுகிறார்.
இவருக்கு ஜோடியாக வருகிறார்கள் காஜல் அகர்வாலும் அமலாபாலும். இரண்டு பேரையுமே உரித்த கோழி மாதிரி ஆட விட்டிருக்கிறார்கள். காஜலாவது பரவாயில்லை. அமலாபாலின் உடையைத்தான் எக்கச்சக்கமாக குறைய விட்டு ஆட விட்டிருக்கிறார்கள்.
காஜல் அகர்வாலை ராம்சரண் காதலிக்க முயற்சிக்கும் அந்த காட்சிகள் செம காமடி. அதுவும் காஜலின் அண்ணனிடமே போய் அவரைப் பற்றிய தகவல்களை வாங்குவது காமெடியின் உச்சகட்டம். தமிழில் மொழி, சரோஜா போன்ற படங்களில் நடித்த பிரம்மானந்தம்தான் இந்த படத்தில் முக்கியமான காமெடி கேரக்டரில் வருகிறார்.
படத்தில் இவரது பெயர் ஜிலேபி. இவர் இதற்கான பெயர் காரணத்தைக் கூறுவதும், கேட்பவர்கள் ஒவ்வொருவரிடமும் தன் பெயர் சொல்லுவது எல்லாம் சிரிக்க வைக்கும் காட்சிகள். படத்தில் ராம்சரணுடன் இவர் வருகிற காட்சிகளில் செம கலகலப்பு. இவர் மட்டுமில்லாமல் ஆஷிஷ் வித்யார்த்தியுடன் வரும் உதவியாளரான அந்த ஆளும் கலகலக்க வைக்கிறார்.
காஜல் அகர்வால் அண்ணன் கேரக்டருன் வரும் அந்த வெள்ளை சட்டை குண்டான ஆசாமியும் காமெடியில் நம்மை உண்டு இல்லை என்று பண்ணுகிறார். காமெடி காட்சிகள் படத்துடனே இணைந்து வருவதால் ரொம்பவே ரசிக்க வைக்கிறது.
ஆஷிஷ் வித்தியார்த்தி சிபிஐ அதிகாரி கேரக்டரில் வருகிறார். பெரிய வில்லனான கோட்டா சீனிவாச ராவ், நல்ல அமைச்சர் வேடத்தில் நான்கைந்து காட்சிகளில் மட்டுமே வருகிறார். இருவருக்குமே பெரிய கேரக்டர்கள் இல்லை என்றாலும். ஆஷிஷ் வித்தியார்த்திக்கு மட்டும் படத்துடனே நகருகிற கேரக்டர்
பிரதிப்ராவத் மெயின் வில்லனாக வரும் அமைச்சர் கேரக்டரில் நடித்திருக்கிறார். சில காட்சிகளில் பயமுறுத்துகிறார் இவர். ஒற்றைப் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு மறைகிறார் சார்மி படத்திற்கு இசையமைத்திருக்கிறார் தமன். பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
பின்னணி இசையில்தான் தமன் நம்மை ரொம்பவே ஆச்சரியப் படுத்துகிறார். படத்தை ஹைபிட்சில் ஜிவ்வென தூக்கிக் கொண்டு போவதற்கு தமனின் பின்னணி இசை ரொம்பவே உதவியாக இருந்திருக்கிறது.
ஒளிப்பதிவு சோட்டா கே நாயுடு. பாடல்காட்சிகளில் லொகேசன்ஸ்ஸை அழகாக பிரேமுக்குள் கொண்டு வந்திருக்கிறார். படத்தில் வருகிற எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கின்றன. கவுதம் ராஜுவின் எடிட்டிங்கில் படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.
படத்தை இயக்கியிருப்பவர் விநாயக். இவர் பேரின் முதல் எழுத்தை நீக்கிவிட்டு நாயக் என்பதை படத்தின் டைட்டிலாக வைத்திருவிட்டார் போலும்.
நாயக் கேரக்டரை மத்தவங்களுக்காக போராடும் கேரக்டராக காட்டியிருக்கிறார். ஆக்க்ஷன் படம் எடுக்கிறேன் என்று வெறும் ஆக்க்ஷனை மட்டும் நம்பி இறங்காமல் காமெடியிலும் கலகலக்க வைத்திருக்கிறார் விநாயக்.
நன்றி:தமிழ் டிஜிட்டல் சினிமா