முட்டை சைவமா இல்லை அசைவமா என்று கேட்டால், பலர் அதனை சைவம் என்று சொல்வார்கள். ஏனெனில் முட்டைப் பிரியர்கள் நிறைய பேர் இந்த உலகில் உள்ளனர். சொல்லப்போனால், அசைவ உணவை விரும்பாத சைவ உணவு பிரியர்கள் கூட. முட்டையை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் முட்டை அவ்வளவு சுவையாக இருப்பதோடு, அதில் அளவுக்கு அதிகமான அளவில் உடலுக்கு தேவையான
சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும் முட்டையைப் பற்றி, ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் உள்ளன. ஏனென்றால், முட்டையின் சரியான நன்மைகள் தெரியவில்லை என்பதனாலேயே தான். மேலும் முட்டையில் எவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளதோ, அதே போன்று ஒருசில இதய நோயாளிகளுக்கு மிகுந்த ஆபத்தையும் ஏற்படுத்தும்.
எனவே இதய நோய் உள்ளவர்கள் முட்டையை சாப்பிடும் முன் யோசிக்க வேண்டும். யோசிப்பது என்ன தவிர்ப்பதே சிறந்தது. மேலும் குழந்தைகளுக்கு தினமும் 2 முட்டை கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சரி, இப்போது முட்டையைப் பற்றிய சரியான உண்மைகளைப் பற்றி பார்ப்போமா!!!
புரோட்டீன்: முட்டையில் 9 வகையான அமினோ ஆசிட்கள் உள்ளன. அத்தகைய ஆசிட்கள் தசைகளை நன்கு வலுவடையச் செய்வதோடு, பழுதடைந்துள்ள திசுக்களையும் சரிசெய்யும். மேலும் ஒவ்வொரு முட்டையிலும் 9 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது.
எடை குறைவு: முட்டையில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் ஓரளவு உள்ளது. ஆனால் முட்டையில் உள்ள பெரும்பாலான கொழுப்புகள் செறிவூட்டப்படாதவை. அதுமட்டுமின்றி ஆய்வுகள் பலவற்றில் முட்டையை வேக வைத்து சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
பளிச் கண் பார்வைக்கு: முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை கூர்மையாகும். அதுமட்டுமின்றி இது கண்புரை உண்டாவதையும் தடுக்கும்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது: முட்டையில் கோலைன் என்னும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த பொருள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே முட்டையை வளரும் குழந்தைகள் தினமும் சாப்பிட்டு வந்தால், புத்தி கூர்மையாகும்.
பெண்களுக்கு சிறந்தது: குறிப்பாக முட்டை பெண்களுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால், பால் பொருட்களில் கால்சியம் மட்டும் தான் இருக்கும். ஆனால் அந்த கால்சியம் உடலில் உறிஞ்சப்பட வேண்டுமெனில், வைட்டமின் டி வேண்டும். எனவே பெண்கள் பாலுடன், முட்டையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் முட்டை மார்பக புற்றுநோயை தடுப்பதில் சிறந்தது.
இதயத்திற்கு நல்லதா: ஹார்வார்டு பள்ளியில் நடத்திய பொது சுகாதார ஆராய்ச்சியில், முட்டையை அளவாக சாப்பிட்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முட்டை சாப்பிட்டால், தமனிகளில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கும்.
சிறந்த அழகுப்பொருள்: முட்டையில் சருமத்தை அழகாக்கவும், கூந்தலை பட்டுப் போன்று மாற்றவும் உதவும் சல்பர் நிறைய உள்ளது. உண்மையில் கூந்தலில் முட்டையை தடவி, ஊற வைத்து, பின் குளித்தால், கூந்தல் நிச்சயம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.
வைட்டமின் டி: உணவுப் பொருட்களில் வைட்டமின் டி சத்தை அதிகம் பார்க்கவே முடியாது. ஒரு சில உணவுப் பொருட்களில் மட்டுமே, இந்த சத்து இருக்கும். அதிலும் இதனை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் டி, குழந்தைகளின் எலும்புகளுக்கு வலுவைத் தரும்.
வெள்ளை மற்றும் மஞ்சள் கருப்பகுதி: முட்டையின் வெள்ளைக் கரு மிகவும் ஆரோக்கியமான பகுதி. இதில் புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கொலஸ்ட்ரால் இல்லை. ஆனால் முட்டையின் மஞ்சள் கரு குழந்தைகளுக்கு மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.
சிறந்த காலை உணவு: காலை உணவிலேயே சிறந்தது என்றால் அது முட்டை தான். ஏனெனில் இதன் செய்வது மிகவும் ஈஸியானது. மேலும் இதில் சரியான அளவில் கார்போஹைட்ரேட்களும், புரோட்டீன்களும் உள்ளன. எனவே இதனை காலை வேளையில் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.
எப்படி சமைக்க வேண்டும்: முட்டையின் ஆரோக்கியத்தை, அதனை சமைக்கும் விதத்தை வைத்து தான் சொல்ல முடியும். சொல்லப்போனால் முட்டையை வேக வைத்து சாப்பிடுவதே சிறந்த முறை. வேண்டுமெனில் இதனை அதிகமான அளவில் எண்ணெய் சேர்க்காமல், வறுத்து சாப்பிடலாம்.
எப்போது முட்டை சாப்பிட கூடாது: ஏற்கனவே இதய நோய் இருப்பவர்கள் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், முட்டை சாப்பிடக் கூடாது. ஏனெனில் முட்டையில் மஞ்சள் கருவில் அளவுக்கு அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உள்ளது. இது இதய நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது.