ரசிகர்களும், மக்களும் காட்டிய அன்பால் தாம் பாடம் கற்றுக் கொண்டேன் என்று கூறிய நடிகர் கமல்ஹாசன், ரசிகர்கள், மக்களின் பேரன்புக்கு முன் தாம் ஒன்றுமே இல்லை என நெகிழ்ச்சியுடன் கூறினார். விஸ்வரூபம் படம் வெளியானதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இன்று பிற்பகலில் செய்தியாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
அப்போது, விஸ்வரூபம் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன், ரசிகர்கள் தங்கள் வீட்டு சாவி, பத்திரங்களை அனுப்பினர் என்றும் ரசிகர்கள் தனக்கு பணம், காசோலைகளை அனுப்பி தம்மை நெகிழச் செய்து விட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
ரசிகர்களின் அன்பை தான் என்ன செய்து தீர்ப்பேன் என்று தெரிவித்த கமல், ரசிகர்களின் அன்புக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஈடாகாது என்றார்.
தமக்குள்ள சமூக கடமையை ரசிகர்கள் அன்பால் உணர்த்தி விட்டது என்றும் தனது எஞ்சிய வாழ்நாளில் தடம் பதிக்கும் வகையில் செயலாற்றுவேன் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
ரசிகர்கள், மக்களின் பேரன்புக்கு முன் தாம் ஒன்றுமே இல்லை என நெகிழ்ச்சியடைந்த கமல், தமக்குள்ள சமூக கடமைகளை ரசிகர்களின் அன்பால் உணர்ந்துவிட்டேன் என்றார்.
மனதளவில் தமது பங்காளிகளாக ஊடகம் செயல்பட்டதற்கு நன்றி தெரிவித்த கமல், விஸ்வரூபம் படத்துக்கு தாமே எதிர்பார்க்காத வரவேற்பை ரசிகர்கள் தந்துள்ளனர் என்றும் தனது கடன்களை அடைத்தே தீருவோம் என்ற வெறியோடு ரசிகர்கள் வெற்றித் தந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சகக் கலைஞர்களின் பாராட்டு தமது முயற்சிக்கு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் சகக் கலைஞர்களின் பாராட்டு தம்மை உழைக்கும் உத்வேகத்தை கொடுக்கிறது என்றும் கமல் தெரிவித்தார்.