பாபர் மசூதி இடிப்பு கலவரத்தையடுத்து கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை இந்தி நடிகர் சஞ்சய் தத் அன்று முதல் இன்று வரை 20 ஆண்டு காலமாக சந்தித்தது பற்றிய ஒரு கண்ணோட்டம் வருமாறு:-
1993, ஏப்ரல் 19: தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சதிகாரனுக்கு உதவி செய்யும் வகையில் இந்தி நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக தீவிரவாத மற்றும் பொது பொதுஅமைதிக்கு பாதகம் விளைவிக்கும் சட்டத்தின் (தடா) கீழ் கைது செய்யப்பட்டார்.
1993, ஏப்ரல் 28: சஞ்சய் தத் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில் மதக்கலவரத்திற்கு பின்னர் தன்னுடைய குடும்பத்தினர் பல்வேறு மிரட்டல்களை சந்தித்து வந்ததால் தற்காப்பு கருதி ஆயுதம் வைத்திருந்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
1993, மே 5: சஞ்சய் தத்தின் வக்கீல் தனது கட்சிக்காரர் ஒன்றும் அறியாத அப்பாவி, அவரை தவறாக குண்டுவெடிப்பு வழக்கில் தடா சட்டத்தின் கீழ் சிக்க வைத்துள்ளதாக கூறி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதனையடுத்து ஐகோர்ட்டு சஞ்சய் தத்துக்கு ஜாமீன் வழங்கியது.
1993, நவம்பர்: தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சஞ்சய் தத் உள்பட 189 பேர் மீது 90 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
1994, ஜூலை 4: குண்டுவெடிப்பு வழக்கில் ஆதாரம் கிடைத்ததால் சஞ்சய் தத்தின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு ஆர்தர்ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
1995, அக்டோபர் 17: சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
2006, நவம்பர் 28: சஞ்சய் தத் மீது 'தடா' சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சதி பிரிவுகள் கைவிடப்பட்டன.
2007, ஜூலை 31: தடா கோர்ட்டு தீர்ப்பு கூறியது. சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புனே ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
2007, ஆகஸ்டு: சஞ்சய் தத் தன்னுடைய தீர்ப்பினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. புனே எரவாடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2013, மார்ச் 21: சஞ்சய் தத்தின் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 5 ஆண்டாக சுப்ரீம் கோர்ட்டு குறைத்தது. இதற்காக 4 வாரத்துக்குள் தடா கோர்ட்டில் சரண் அடையவேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஏற்கனவே சஞ்சய் தத் 18 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டதால் 3 1/2 வருடம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உட்படுத்தப்பட்டார்.
2013, ஏப்ரல் 13: சினிமாவில் நடிக்க வேண்டியது இருப்பதால் சரண் அடைய கூடுதல் கால அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.
2013, ஏப்ரல் 17: இந்த கோரிக்கையை ஏற்று அவருக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டது.
2013, மே 10: சஞ்சய் தத் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செய்த மறுஆய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
2013 மே 16: இதைத் தொடர்ந்து அவர் தண்டனையை அனுபவிப்பதற்காக நேற்று தடா கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.