ஒரு கர்ப்பிணியால் ஐந்தாவது மாதமே, குழந்தையின் அசைவை நன்றாக உணரமுடியும். அப்போதில் இருந்து ஏழாவது மாதம் வரை பனிக்குட நீரில் விஸ்தாரமாக நீச்சலடிக்கும் குழந்தை, கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதால், பின்னாளில் இடநெருக்கடி காரணமாக கை, கால்களை மட்டும் சிறிது-சிறிதாக அசைக்கும். ஐந்தாவது மாதத்தில் குழந்தை உதைத்ததற்கும், இப்போது உதைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால், சிலர் இதனை புரிந்து கொண்டு, குழந்தை அசைவு
அவ்வளவாக இல்லை' என்று டாக்டர்களிடம் கவலையோடு வருவார்கள். பயப்பட வேண்டாம்.
ஒன்பதாம் மாதத்தில் குழந்தையின் துடிப்பு குறைவாக இருக்கும். டோன்ட் வொர்ரி...அதாவது கடைசி மாதத்தில் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து முறை துடித்தாலே போதும். அதுவும் இல்லை என்று தோன்றினால், சிறிதுநேரம் இடதுபுறமாக ஒருக்களித்து படுத்து, குழந்தையின் துடிப்பை கணக்கிடலாம்.
அப்போதும் குறைவாக இருப்பதாக மனசுக்கு பட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்வது நல்லது. ஒருவேளை குழந்தையை தொப்புள் கொடி சுத்தியிருக்கலாம்! கர்ப்பமான ஆறு முதல் எட்டாம் மாதத்திற்குள் டி.டி எனப்படும் `டெட்டனஸ் டாக்ஸாய்டு' தடுப்பூசியை, இரண்டு முறை போட வேண்டும்.
இது அந்த பெண்ணுக்கு கருப்பையில் புண் வருவதை தவிர்ப்பதோடு, பிரசவ நேரத்தில் தாய்-சேய்க்குமான கிருமிதொற்றை தடுப்பதாகவும் அமையும். இரண்டு தடுப்பூசியும் முடிந்தபிறகு, `அல்ட்ரா ஸ்கேனிங்' செய்வது நல்லது.
இது பிரசவ நேரத்தில் வரும் எத்தனையோ பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து தடுப்பதற்கு உதவும். இதுதவிர `வயிற்றில் குழந்தை சரியான நிலையில் தான் இருக்கிறதா?' என்பதை சந்தேகமின்றி தெரிந்துகொள்ளவும், ஸ்கேனிங் பயன்படும்.