தனுஷின், "மாப்பிள்ளை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா, ஆரம்பத்தில் சில சறுக்கல்களுக்கு பின்னர் ஓ.கே. ஓ.கே. படத்தின் மூலம் பிரபலமானார். விஜய், ஜெயம் ரவி, சிம்பு என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் இப்போது ஒரே சமயத்தில் கையில் 7 படங்களுடன் ஓய்வின்றி நடித்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் சின்ன குஷ்பு என்ற அடைமொழியுடன் வலம் வந்து கொண்டிருக்கும்
ஹன்சிகா நம்மோடு பகிர்ந்து கொண்ட சில தகவல்கள்...
* குழந்தைகளை தத்தெடுக்கும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம், என் ரத்தத்திலேயே ஊறியது. அதனால், நான் சுயமாக சம்பாதிக்க தொடங்கியதிலிருந்து, என் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும், படிக்க வசதியில்லாத சிறுவர், சிறுமியரை தத்தெடுத்து வருகிறேன். இதில், எனக்கு மிகுந்த சந்தோஷம் கிடைக்கிறது.
* கொழுகொழு உடம்பை, திடீரென்று "ஸ்லிம்மாக மாற்றியதேன்?
சில டைரக்டர்கள் எடை குறைக்க வேண்டும் என்கின்றனர். சிலரோ, வெயிட் போட வேண்டும் என்கின்றனர். ஆனால், இந்த பிரச்னையை தவிர்க்க, ஒரு நடுநிலையான உடம்பை பராமரித்து வருகிறேன்; இதை ஸ்லிம் என்று சொல்ல முடியாது.
* ஒரே நேரத்தில், அரை டஜன் படங்களில் எப்படி நடிக்க முடிகிறது?
ரொம்ப கஷ்டம் தான். இருந்தாலும், கால்ஷீட் பிரச்னை ஏற்படாத வகையில், கவனமாக பார்த்துக் கொள்கிறேன். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டுமல்லவா.
* தற்போதைய தமிழ் சினிமாவில், உங்களுக்கு போட்டி நடிகை யார்?
எனக்கு யாரும் போட்டி இல்லை; எனக்கு, நான் மட்டுமே போட்டி. அதனால், முந்தைய படத்தை விட, அடுத்த படத்தில், இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று, ஒவ்வொரு கேரக்டரையும், சவாலாக எண்ணி நடிக்கிறேன்.
* சினிமாவில் உங்கள் ரோல் மாடல் யார்?
அப்படி யாரும் இல்லை. ஆனால், எல்லா படங்களையும் பார்ப்பேன். அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வேன். மற்றபடி, நடிப்பை என் பாணியில் மட்டுமே வெளிப்படுத்துகிறேன்.