பெண் என்றால் கண்களுக்கு மைதீட்டவேண்டும். கண்களுக்கு மைபோடுவது நல்லது என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். நமது கண் இமைகளிலே எண்ணெய் உற்பத்தியாகிறது. Meibomian என்ற சுரப்பி கண் இமைகளில் ஆயிலை உற்பத்தி செய்கிறது. நாம் அடிக்கடி கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கிறோமே, அது சிரமமின்றி வழுவழுப்பாக இயங்கவும், கண்ணீரை பலப்படுத்தவும்
அந்த ஆயில் அவசியமாகிறது. கண்மையால் கண்களுக்கு அழகு கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் மையால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைப்பதாக இதுவரை எந்த ஆய்வும் கூறவில்லை.
‘பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். அது அவர்கள் பலகீனம்’ என்று சொல்வார்கள். ஒருவிதத்தில் பெண்களின் அழுகை அவர்கள் கண்களுக்கு நல்லது. துக்க அழுகை, விபத்து அழுகை, மிதமான அழுகை போன்ற ஒவ்வொன்றின்தன்மைக்கு ஏற்ப கண்ணீரின் ரசாயனதன்மை மாறும்.
கண்ணீர் வெளியேறும்போது, கண்களில் உள்ள அசுத்தமும் சேர்ந்து வெளியேறும். அழுவது மூலம் அவர்கள் அந்த சோகத்தால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விலகி, மன அமைதியையும் பெறுவார்கள். பெண்கள் அழுவதால் அவர்களுக்கு விழித்திரையில் தண்ணீர் கோர்க்கும் நோய் குறைவாக இருக்கிறது.
ஆண்கள் அழுகையை அடக்குவதால் விழித்திரையில் தண்ணீர் சேரும் ‘சி.எஸ்.ஆர்’ (சி.ஷி.ஸி.) என்ற நோய் ஆண்களை அதிகம் பாதிக்கிறது. ஆனால் பெண்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமச்சீரின்மையால் ‘சி. எஸ்.ஆர்’ பாதிப்பு ஏற்படக்கூடும்.
மாதவிலக்கு நிலைத்துபோகும் ‘மனோபாஸ்’ காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகள் தோன்றும். அப்போது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு போன்றவை இருந்தால் கண்பார்வையும் பாதிக்கப்படும். அதனால் பெண்கள் 40 வயதுக்கு பிறகு கண் அழுத்தம், வெள்ளெழுத்து, ரெட்டினா போன்றவைகளுக்கான பரிசோதனைகளை ஒவ்வொரு வருடமும் செய்துகொள்ளவேண்டும்.
கம்ப்யூட்டரில் வேலைபார்ப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற பாதிப்பு இப்போது அதிகம் ஏற்படுகிறது. கம்ப்யூட்டரை தொடர்ந்து அதிக நேரம் பார்ப்பதால் சுரப்பிகளில் இருந்து திரவம் வெளிவரும் வழி அடைபடும். அதனால் கண் உலர்ந்து, எரிச்சல், அரிப்பு ஏற்படும். 2 நிமிடம்கூட கண்களை திறக்க முடியாமல் அவதிப்படுவார்கள்.
பொதுவாகவே கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கண்பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும். இளைஞர்களும், இளம் பெண்களும் கம்ப்யூட்டர் பணிகளில் சேருவதற்கு முன்பே கண்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கண்ணாடி அணியவேண்டும். டாக்டர்கள் அறிவுறுத்தும் கால இடைவெளியில் கண்களை தொடர்ந்து பரிசோதித்துக்கொள்ளவும்வேண்டும்.
கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கண்களுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக வேலை பார்த்ததும், கம்ப்யூட்டரில் இருந்து பார்வையை விலக்கி 20 வினாடிகள், 20 அடி தூரம் தள்ளி பார்வையை செலுத்த வேண்டும். பார்ப்பது இயற்கை காட்சியாக இருந்தால் நல்லது.
இந்த ‘20க்கு 20 விதி’யை கடைபிடிப்பது கண்களுக்கு நல்லது. நீரிழிவு நோய் இருக்கும் பெண்கள் எல்லா காலகட்டத்திலும் கண்நலனின் தனிக்கவனம் செலுத்தவேண்டும். தற்போது கண் பரிசோதனை முறைகளிலும், சிகிச்சை முறைகளிலும் நவீனங்கள் புகுத்தப்பட்டிருக்கின்றன.
கண்புரை, விழித்திரை, கருவிழி மாற்றுதல் போன்ற ஆபரேஷன்களிலும் நவீன சிகிச்சைமுறைகள் கையாளப்படுகின்றன. கண்களின் ஆரோக்கியத்திற்கு இரவில் எட்டு மணிநேர தூக்கம் அவசியம். இரவில் நாம் தூங்கும் போது, சூழ்நிலையும் அதற்கு தக்கபடி வெளிச்சமின்றி அமைய வேண்டும்.
இரவில் பணிபுரிந்துவிட்டு பகலில் தூங்கும்போது தூக்கத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். மீன், பழவகைகள், கேரட், பொன்னாங்கண்ணி கீரை, குங்குமப்பூ, பாதாம் பருப்பு, வால்நட், மஞ்சள் நிற குடை மிளகாய் போன்றவை கண் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளாகும்.