40 வயதிற்கு மேலும் ரன்பீர் கபூருடன் மாதுரி தீக்ஷித் போட்ட குத்தாட்டம்தான் பாலிவுட் பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபோன்று தமிழ் சினிமா உலகில் ஒரு பாடலுக்கு ஆடும் கலாச்சாரம் கடந்த 20 ஆண்டுகளாகவே பிரபலமடைந்து வருகிறது. சிக்குபுக்கு ரயிலே ஆடிய கவுதமி தொடங்கி எதிர்நீச்சலில் தனுஷ் உடன் குத்தாட்டம் போட்ட நயன்தாரா வரை பல நடிகைகள் குத்துப்பாடலுக்கு ஆடி அந்த பாடலை சூப்பர் ஹிட் ஆகியுள்ளனர்.
நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களுக்கும் ஒற்றைப் பாடலுக்கு ஆடி ரசிகர்களை கவர்கின்றனர். சில படங்கள் அந்த ஒரு பாடலுக்காக சூப்பர் ஹிட் ஆனதாகவும் சரித்திரம் உண்டு. மார்க்கெட் போன நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு ஆட வருவது அந்தக் காலம். மார்க்கெட் இருக்கும் போதே குத்துப்பாடலுக்கு ஆடி வசூல் செய்வது இந்தக் காலமாகிவிட்டது. அந்த வரிசையில் ஹிட் ஆன குத்துப்பாடல்களை பாருங்களேன்.
"லாலாக்கு டோல் டப்பிமா"... இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமோ தெரியாதோ ஆனால் சூரியனில் குடுமியோடு ஆடிய பிரபுதேவா இந்தப் பாடலை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார். அவரும் சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்ந்தார்.
"சின்ன ரசாவே சித்தெரும்பு என்னை கடிக்குது" என்று வால்டர் வெற்றிவேல் படத்தில் பிரபு தேவா உடன் சுகன்யா போட்ட குத்தாட்டம் படத்தின் வெற்றிக்கே காரணமாக அமைந்ததாம்.
ரஜினி, கமல் என சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த கவுதமி முதன் முறையாக ஜென்டில்மேன் படத்தில் பிரபு தேவா உடன் ஆடிய பாடல் "சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே..." அவர் ஆடினாரோ இல்லை நடந்தாரோ அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
"ஆள் தோட்ட பூபதி நானடா" என்று யூத் படத்தில் விஜய் உடன் செம குத்தாட்டம் போட்டிருப்பார் சிம்ரன். அதுதான் அந்தப் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.
சரக்கு வச்சிருக்கேன்... என்று ஷாஜகான் படத்தில் விஜய் உடன் சேர்ந்து ஆட்டம் போட்டார் மீனா. இதில் விஜய் உடன் ஹீரோயினாக நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தீர்ந்தது மீனாவிற்கு பாடலும் ஹிட்தான்.
தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதித்தரட்டுமா?... என நெஞ்சினிலே படத்தில் விஜய் உடன் குத்தாட்டம் போட்டார் ரோஜா. பாடல்வரிகள் அவருக்கு எழுதப்பட்டதில்லை என்று கூறப்பட்டாலும் குத்தாட்டம் என்னவோ ஹிட் ஆனது உண்மை.
வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்று சித்திரம் பேசுதடி படத்தில் குத்தாட்டம் போட்ட மாளவிகாவிற்கு அதன்பின்னர்தான் ரசிகர்கள் வட்டம் அதிகமானது. அந்தப் பாடலை பாடிய கானா பாடகரும் பிரபலமானார்.
ரஜினியுடன் சந்திரமுகியில் ஜோடி சேர்ந்த நயன்தாரா பின்னர் உடனடியாக சரியான வாய்ப்புகள் அமையாத காரணத்தால் சிவாஜி, சிவகாசி போன்ற படங்களில் குத்தாட்டம் போட்டார். காவிரி ஆறும்... பாடலும், கோடம்பாக்கம் ஏரியா... பாடலும் ஹிட் அடித்தது.
எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் நயன்தாரா போட்ட குத்தாட்டம் செம கொண்டாட்டமாய் அமைந்ததாக கூறுகின்றனர் ரசிகர்கள்.