மூல்தானி மெட்டி கூட வேர்க்குருவிற்கு சிறந்த வீட்டு மருத்துவமாகத் திகழ்கிறது. 4 டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி, 2 டேபிள் ஸ்பூன் பன்னீர், ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். பின் வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில், இந்தக் குழம்பைப் பூசி 30 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.
சந்தனப் பவுடர் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை தலா இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் 2-3 டேபிள் ஸ்பூன் பன்னீர் விட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். பின் அதனை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி உலர விட்டு, குளிர்ந்த நீரால் நன்கு அலசி விடவும்.
பஞ்சு அல்லது பருத்தித் துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, அதனை வேர்க்குரு உள்ள இடங்களின் மீது போர்த்துமாறு மூடிவிடவும். பஞ்சு அல்லது துணியிலுள்ள ஈரம் முழுவதும் உறிஞ்சும் வரை காத்திருக்கவும். இம்முறையை ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முறை செய்யவும். இல்லையெனில் வேர்க்குரு உள்ள இடத்தின் மீது குளிர்ந்த நீரை கொண்டு கழுவலாம். வேர்க்குருவின் அரிப்பிற்கும், எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும் முறை இதுவே.
ஆலமரப்பட்டை வேர்க்குருவை போக்க சிறந்த பொருளாக பயன்படுகிறது. காய்ந்த ஆலமரப் பட்டைகளை எடுத்துக் நன்கு பொடியாக அரைக்கவும். இப்பொடியை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவவும். இது வேர்க்குருவின் அரிப்பிற்கும் எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும்.