ஹீரோ ஜெ.கே சைக்கோ. பெண்களை மனரீதியாக துன்புறுத்துபவர். அவர்களை ஏமாற்றி காதல் வலையில் விழ வைப்பார். பிறகு தனக்கு உயிருக்கு ஆபத்தான நோய் இருப்பதாக கூறி இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள வைப்பார். பின் நோயிலிருந்து குணமாகிவிட்டதாக நாடகம் ஆடுவார். அந்தப் பெண் கணவனுடன் வாழவும் முடியாமல் இவரை மறக்கவும் முடியாமல் தவிப்பதை ரசிப்பார். இப்படி அவர் வலையில் விழுந்து மன அழுத்தத்தில் வாழும் பெண்கள் பலர்.
தனது இந்த வேலையை மனநலமருத்துவ மாணவியான உன்னி மாயாவிடமும் காட்டுகிறார். ஜெ.கே பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளும் அவர், ஜெ.கேவை சைக்கோத்தனத்திலிருந்து காப்பாற்றினாரா, இல்லையா என்பது மீதி கதை.
பெண்களால் பாதிக்கப்படும் ஒருவன் சைக்கோவாக மாறி பெண்களை பழிவாங்குவது ‘சிவப்பு ரோஜா‘ காலத்திலிருந்து வரும் கதைதான். ஆனால் இதில் பெண்களின் மனதை துன்புறுத்துகிறார் என்ற புது விஷயத்தை சொல்கிறார்கள். பலாத்காரம், கொலை என்ற இரண்டு விஷயங்கள் தவிர மற்றதெல்லாம் இதே பாணியிலான படங்களின் கதைதான். சிரிப்பு, அழுகை, வேதனை, விரக்தி, வஞ்சம் என அத்தனை உணர்வுகளையும் காட்டி நடித்திருக்கிறார் ஜெ.கே. ஆனால் சில இடங்களில் தான் சைக்கோ என்பதையே மறந்து பக்கம் பக்கமாக வசனம் பேசி ஆடியன்சுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விடுகிறார்.
உன்னி மாயா நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். சைக்கோவை காதலித்துவிட்ட தருணங்களை நினைத்து கண்ணீர் வடித்தாலும் அவரை நோயாளியாக கருதி காப்பாற்ற நினைப்பதும், அவரது வலையில் விழாமல் தப்பிப்பதுமாக நிறைவாக செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சைக்கோவிடம் ஏமாறும் பெண்ணாக வரும் சரிதா தாசும் நடிப்பில் குறைவைக்க வில்லை.
இசையும் ஜெ.கேதான். சாதாரண காட்சிகளில்கூட திகில் இசை கொடுத்து பயமுறுத்துகிறார். மோகனராமின் ஒளிப்பதிவு சுமார் ரகம். ஹீரோவின் தந்தை எலி ஜோசியம் பார்க்கும் அந்த கிராமத்து எபிசோட் அழகு. நான்கு கால் குழந்தை பிறப்பதும் அதற்காக அண்ணன் உழைப்பதும், அம்மாவின் தவறான நடத்தையும் யதார்த்தம். பெண்களை மயக்க ஜெ.கே போடும் திட்டங்களும்,
அதை முறிடியக்க உன்னி மாயா எடுக்கும் நடவடிக்கைகளும் விறுவிறு திரைக்கதை. மற்றபடி காட்சிக்கு காட்சி இரண்டு மூன்று கேரக்டர்கள் மட்டுமே வந்து கொண்டிருப்பது, காட்சிகள் நிறைந்திருக்க வேண்டிய படத்தில் வசனங்கள் நிறைந்திருப்பது என்று சலிப்பு தட்டும் வகையறா படம் முழுக்க நிறைந்திருக்கிறது.