சாதி, மதம், உள்ளூர்க்காரன், வெளியூர்க்காரன் என்ற வேறுபாடுகள் பார்க்கும் அந்த கிராமத்துக்கு புதிதாக வந்து சேருகிறார், வேந்தன். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அரசிக்கும் காதல் மலர்கிறது. இதற்கு பஞ்சாயத்து தலைவர் பாபு வில்லனாக குறுக்கே வருகிறார். வேந்தனை தன் அடியாட்கள் மூலம் அடித்து உதைத்து, ரெயில் தண்டவாளத்தில் வீச ஏற்பாடு செய்கிறார். தண்டவாளத்தில் வீசப்பட்ட வேந்தனை தெனாலி காப்பாற்றுகிறார்.
உயிர் பிழைத்த வேந்தன் ஊரில் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக இருக்கிறார்.
அவருடைய தாயும், தந்தையும் சென்னையில் இருந்து மகனை தேடி கிராமத்துக்கு வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவர் பாபுவை சந்தித்து, ‘‘என் மகனுக்கு ஏதாவது விபரீதம் நடந்தால், உன்னை சும்மா விட மாட்டோம்’’ என்று மிரட்டுகிறார்கள்.
தலைமறைவாக இருந்த வேந்தன் வெளியில் வந்தாரா, அவருடைய காதல் ஜெயித்ததா, இல்லையா? என்பது கதை.
கதாநாயகன் வேந்தன் இளமையும், சுறுசுறுப்பும் மிகுந்த நாயகன். இவருக்கும், அரசிக்குமான காதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. அரசி, வட்ட முகம். மப்பும் மந்தாரமுமான உடற்கட்டு.
வில்லனாக வரும் பாபு, பொருத்தமான தேர்வு. நெல்லை சிவா, பாவா லட்சுமணன், தெனாலி ஆகியோர் கலகலப்பூட்டுகிறார்கள்.
அந்த கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலும் ஒரு கதாபாத்திரமாகி இருக்கிறது.
பாடல்கள் அத்தனையிலும், பழைய பல்லவி. படப்பிடிப்பு ‘பளிச்’ என்று இருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இணை இசை, பாடல்கள், தயாரிப்பு, டைரக்ஷன்: ராஜசூரியன். கதை மெதுவாக நகர்கிறது. சில இடங்களில் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன.
சாதி வேறுபாடுகளுக்கு எதிரான வசனங்கள் துடிப்பாக இருக்கிறது. படத்தின் உச்சக்கட்ட காட்சியை யூகிக்க முடியாதபடி அமைத்து இருப்பது, பாராட்டுக்குரியது.