ரஜினி ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி..., நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் கோச்சடையான் படம் ஜூலையில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா இயக்குனராக அவதரித்து இருக்கும் படம் கோச்சடையான். முதல்படத்தையே தனது அப்பா ரஜினியை வைத்து தைரியமாக இயக்கி உள்ளார். இவருக்கு பக்கபலமாக இருந்து படத்தை எடுக்க
உதவியுள்ளார் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஜாக்கி ஷெரப், ஆதி, ஷோபனா, ருக்மணி, நாசர் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
முதன்முறையாக ரஜினிகாந்த் 3டி படத்தில் நடித்து உள்ளார். அவதார் படம் போல, 3 டியில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது. இந்திய சினிமாவில் இந்த தொழில்நுட்பத்தில் வரும் முதல் படம் இது. 3டி வசதி இல்லாத அரங்குகளுக்காக 2டியிலும் இந்தப் படம் வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து படத்திற்கான 3டி தொழில்நுட்ப வேலைகளும், பிற தொழில்நுட்ப வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், இப்போது அதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார், இப்படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, 3டி மற்றும் அதற்கான தொழில்நுட்ப பணிகள் முடிக்க அதிக நாட்கள் ஆகிறது. இதற்காக ஹாலிவுட் குழுவினர் இந்தியா வந்து அந்த பணியை செய்து வருகின்றனர். எனவே கோச்சடையான் பட ரிலீஸ் தாமதமாகிறது. மேலும் ரஜினி உடல்நலம் சரியில்லாமல் போய், மீண்டும் நடித்து வெளிவர இருக்கும் படம் இது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று புரிந்து, அதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-மே மாதத்திற்குள் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் முடிந்துவிடும், இதனால் படத்தை ஜூலையில் ரிலீஸ் செய்கிறோம். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மற்றும் ஜப்பான் மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இத்தாலி மற்றும் பிரெஞ்ச் மொழியிலும் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் அது முடிவாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.