ஐ.டி துறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

சந்தையில் குவிந்திருக்கும் வேலைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தகுதியான ஆட்கள்தான் கிடைப்பதில்லை. தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினைகளே இதுதான். சாப்ட்வேர், பி.பி.ஓ., மற்றும் பார்மா துறைகளில் அதிகளவிலான வேலைகள் நிறைந்துள்ளன.

எனவே, எவ்வளவு வேலைகள் காலியாக உள்ளன என்பது பிரச்சினையல்ல. ஆனால், அந்த வேலைகளுக்கான தகுதிபெற்ற ஆட்கள் இருக்கிறார்களா? என்பதுதான் பிரச்சினை. எனவே, சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, அதற்கேற்ப தனது அனைத்துவிதமான திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் திறன் பெற்றவர்களையே, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மேலும், நாள்தோறும் புதுப்புது தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால், அவற்றை கையாளும் வகையில், தனது திறன்களை வளர்த்துக்கொள்ளும் திறன்பெற்றவர்களாகவும் அந்த நபர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இன்றைய நிலையில், ஐ.டி., நிறுவனங்களைப் பொறுத்தவரை, சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்து, புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் நபருக்கே முதல் முன்னுரிமை தரப்படுகிறது. அவர்களே, முதல் தரமான ஆட்களாக கருதப்படுகிறார்கள். ஏனெனில், வாடிக்கையாளர்கள், தாங்கள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமானது, தினந்தோறும் பெருகிவரும் தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான புதிய தீர்வுகளின் மூலமான சேவையை வழங்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர்.

இப்படி எதிர்பார்க்கும் நிறுவன வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. நிறுவனப் பணியாளர்கள் தங்களின் சிறப்புத்திறன்களை, வாடிக்கையாளர் தரும் பணத்தில் மேம்படுத்திக்கொள்ள முடியாது என்ற நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள், அடிக்கடி புதிதுபுதிதாக எதிர்பார்ப்பதால், அனுபவம் வாய்ந்த பணியாளர்களே, தங்களின் திறன்களை அடிக்கடி மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, சிறந்த மனிதவளமாக திகழ விரும்பும் ஒவ்வொருவரும், விஷயங்களை புதிதாக கற்றுக்கொள்ளும் திறனைப் பெற்றிருப்பதோடு, வலிமையான சிக்கல் தீர்க்கும் திறன், சிறந்த தகவல்தொடர்பு திறன்கள் மற்றும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.

எனவே, ஒரு நிறுவனம் புதிதாக படித்து வெளிவரும் பட்டதாரிகளை பணிக்கு எடுக்கையில், அவர் ஒரு விஷயத்தை எந்தளவு விரைவாக கற்றுக்கொள்வார் என்பதில் கவனம் செலுத்தியே, அவரை பணிக்கு எடுக்கிறது. மேலும், அவரிடம் அதிக விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சில வருட அனுபவத்துடன் ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் நபரிடம், அவர் தன் துறைசார்ந்து எந்தளவிற்கு திறனும், அனுபவமும், பகுப்பாய்வு திறனும் பெற்றுள்ளார் என்று பார்க்கப்படுகிறது.

அடுத்த முக்கிய விஷயம்

தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு நிறுவனமும், கீழ்கண்ட 3 விஷயங்களில் அதிக முதலீடு செய்கின்றன. Network Security, Cloud & Mobility infrastructure and Big Data போன்றவையே அவை. இந்த மூன்று துறைகளில், ஆட்களை பணியமர்த்துவது அதிகமாக இருக்கிறது. எனவே, ஒரு Developer -ஆக சில வருட அனுபவம் உங்களுக்கு இருந்தால், மேற்கூறிய விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

உங்களை உயர்த்துவது எது?

தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் அறிவைத் தவிர, ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்துகையில், ஆழ்ந்த அறிவு, துறை நிபுணத்துவம், படைப்பாக்க சிந்தனை மற்றும் சிறந்த தகவல்தொடர்பு திறன் ஆகிய விஷயங்களுக்கும், ஒரு நிறுவனம் சமமான முக்கியத்துவம் கொடுக்கிறது. சில வருட பணி அனுபவம் உடையவர்கள், தொழில்நுட்ப திறன்களுடன், ஆழமான துறை அறிவையும் கொண்டிருந்தால் அவர் பெறக்கூடிய முக்கியத்துவம் அதிகம்.

ஒருவர் தனது துறையில் ஆழ்ந்த அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்தி, அதிலேயே ஸ்பெஷலைஸ் செய்யும் ஒருவர், ஒரு வெற்றிகரமான கன்சல்டன்டாக(consultant) மாற முடியும்.ஏனெனில், கன்சல்டன்ட் பணிக்கு நிறைய தகுதியான நபர்கள் தேவைப்படுகிறார்கள். வணிகம் சார்ந்த முடிவெடுக்கும் திறன் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு. தொழில்நுட்பத்தைப் பற்றி படிப்பதென்பது, வெறுமனே அந்த தொழில்நுட்பத்திற்காக மட்டுமல்ல. அதன்மூலமாக, வேறு பல விஷயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தொழில்நுட்ப அறிவுடன் சேர்த்து, வணிக செயல்பாட்டு அறிவையும் கொண்டிருக்க வேண்டும்.

இதுதொடர்பாக நிறுவனங்கள் சொல்வது என்னவென்றால், தொழில்நுட்ப அறிவு என்பது முக்கியமானது. ஆனால், அதேசமயம், அதனுடன் சேர்த்து, நிதி அல்லது பார்மசூடிகல் ஆகிய துறைகளின் அறிவும் இருந்தால், அது கூடுதல் தகுதியாக கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட துறைகளைப் பற்றிய கூடுதல் அறிவு இருக்கையில், ஒரு ஐ.டி., நிபுணர் தனது தொழில்நுட்பத் திறனை மிக சரியான முறையில் பயன்படுத்த முடியும்.

ஆனால், இன்றைய நிலையில், பல இளைஞர்களிடம் ஆழ்ந்த அறிவு என்பது இருப்பதில்லை. இந்த போக்கு, அவர்களின் நீடித்த வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது. படித்த நபர்களுக்கு, முறையான பயிற்சிகள் இருப்பதில்லை. ஒருவர், சிறந்த தொழில்முறை மேம்பாட்டை அடைய வேண்டுமெனில், அவர் ஆழமாக சென்று படிக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் இளைஞர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, அவர்களை பணிக்கு சேர்க்கும் நிறுவனத்தால் அனைத்து வாய்ப்புகளையும் வழங்க முடியாது. தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை, பயனுள்ள முறையில் தாங்கள்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய இளைய சமூகம், பலவிதமான கவனச் சிதறல்களால் பாதிக்கப்படுகிறது. சிற்றின்பம் சம்பந்தமான விஷயங்களுக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், பணியில் சேர்ந்த சில ஆண்டுகளுக்கு, ஊன்றி கவனித்து, துறை சம்பந்தமான ஆழமான அறிவை அவர்கள் பெற்றுக்கொண்டால், அடுத்த பல ஆண்டுகள் அவர்கள் கவலையின்றி கோலோச்ச முடியும். கற்பதற்கு ஆர்வமும், அதற்கான திறனும் இருப்பது அவசியம்.

பல முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், தங்களின் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதிகளைக் கொண்டுள்ளன மற்றும் தொழில் திறனை மேம்படுத்தும் வகையிலான கூடுதல் படிப்புகளை மேற்கொள்ள, தங்களின் பணியாளர்களை ஊக்கப்படுத்துகின்றன. இதுபோன்ற லாபக் கூறுகளை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்வது ஒருவரின் புத்திசாலித்தனமான செயலாகும்.

கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ளும் ஒருவர், தனது சக பணியாளர்களைவிட, அதிக முக்கியத்துவம் பெறுவார். உங்களின் பணியை செய்துகொண்டே, புதிய ப்ரோகிராமிங் மொழிகளைக் கற்றுக்கொள்வது அல்லது புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது என்பது, உங்களின் பேரம் பேசும் திறனை அதிகப்படுத்தும். இதன்பொருட்டு, பல ஆன்லைன் வளங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், ஐ.டி., துறையில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களின் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில், பல பயிற்சி நிறுவனங்கள், பல படிப்புகளை வழங்குகின்றன. உதாரணம், NIIT நிறுவனம், Cisco, Microsoft and Oracle போன்ற பிரிவுகளில் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.

மொழித்திறன்

மேற்கூறிய அனைத்து அம்சங்களுடன், இன்னொரு முக்கிய அம்சத்தை கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில், ஐ.டி., துறையில் பணிபுரியும் ஒரு நிபுணர், வெளிமாநிலத்தை சேர்ந்தவருடனோ அல்லது வெளிநாட்டை சேர்ந்தவருடனோ பேச வேண்டியிருக்கும். அப்போது, அவரின் மொழி மற்றும தகவல் தொடர்பு திறன் இன்றியமையாத ஒன்று. எனவே, ஒருவரை பணிக்கு எடுக்கையில், அவரின் தொழில்நுட்பத் திறன், ஆழ்ந்த அறிவு, கூடுதல் தகுதிகள் ஆகிய பலவற்றுடன், மொழித்திறனுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நல்ல மொழித்திறன் பெற்ற ஒருவரை, எளிதில் இழக்க எந்த நிறுவனமும் விரும்புவதில்லை.

மேற்கூறிய அலசல்களின் மூலம், ஐ.டி., துறை ஊழியர்கள் பல்வேறான தகுதிகளையும், திறன்களையும் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் சிறந்த பணி வாய்ப்புகளையும், நல்ல சம்பளத்தையும் பெற்று, தங்களின் துறையில் கோலோச்ச முடியும் என்பது புலனாகிறது.

பழைய பதிவுகளை தேட