ராஞ்சனா பாலிவுட் சினிமா விமர்சனம்


லெதர் ஜாக்கெட் அணிந்து, கிடாருடன் ரயிலிலிருந்து இறங்கி, காதல் வசனங்கள் பேசி,  கதாநாயகியை கவர்ந்து செல்லும் கதாநாயகன் தான் வழக்கமான பாலிவுட் காதல் படங்களின் ஹீரோ. அமைதியாக அல்லது அமர்க்களமாக, சுட்டியாக அல்லது சாந்தமாக சித்தரிக்கப்பட்டவர்கள் தான் இந்தக் காதல் படங்களின் கதாநாயகிகள். ‘ மாடர்ன் டிரஸ் அணிந்து உலக நாடுகள் சுற்றி பாட்டுப் பாடினால் தான் அது காதல் படம் ‘ என்று பாலிவுட்டில் வரையறுக்கப்பட்டது
போல்,  கடந்த சில வருடங்களில் வெளிவந்த படங்கள் அமைந்திருந்தன. இந்த எல்லைக் கோட்டைத் தாண்டி சாதாரண ஏழைக் குடும்பத்தை சேர்ந்த கதாநாயகனும் எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் தன்மையாக முடிவெடுக்கும் கதாநாயகியை வைத்து ஒரு அழகிய காதல் படம் உருவாக்கலாம் என்று ராஞ்சனா மெய்ப்பித்துள்ளது. 

பனாரஸில் கதைக்களம்,  கோவில் புரோகிதரின் மகன் குந்தனாக தனுஷ், கல்லூரி ஆசிரியர் மகள் ஜோயாவாக சோனம் கபூர். சிறு வயதில் தனுஷுக்கு சோனம் மீதிருந்த பிடிப்பு, டீனேஜில் காதலாக மாறுகிறது. தனுஷின் மீது சோனமும் காதலில் விழ பின் பெற்றோர்களால் அறிவுறுத்தப்பட்டு டில்லிக்கு அனுப்பப்படுகிறார். 

பலவருடம் கழித்து பனாரஸிர்க்கு தன் காதலி சோனமை பார்க்க வரும் தனுஷிடம், நம் காதல் வெரும் ஈர்ப்புதான் அது அறியாமையின் பிரதிபலிப்பு என்கிறார் சோனம். காதலில்லாத போதும் சோனம், தனுஷிடம் சினேகமாகப் பழகுகிறார். இவர் விருப்பமின்றி நடக்கவிருந்த திருமணத்தை தனுஷ் நிறுத்த உதவ, நன்றியுடன் தான் அபை டியோல் மீது கொண்டிருந்த காதலைப் பற்றி கூறுகிறார். இதைக் கேட்டு மனமுடைந்து வெறுப்படைகிறார் தனுஷ். இதன்பின் இக்கதாபாத்திரங்கள் வாழ்க்கையில் அடையும் மாற்றங்களென்?? சோனம் தனுஷ் இணைந்தார்களா என்பது தான் மீதி கதை. 

முதல் பாதி முழுவதும் காதல், இசை என்று பயணிக்கும் படம், இரண்டாம் பாதியில் அரசியலில் தடம் மாறப்பட்டு கொஞ்சம் குண்டு குழிகளை ஏறிக் கடக்கிறது. படத்தின் கதையை ‘லேசா லேசா’ படத்துடன் ஒப்பிடலாம்.  ஆனால் ராஞ்சனா வேறுபடுவதென்னவோ ஏ.ஆர் ரஹ்மானின் அற்புத இசையிலும், நடிகர்களின் யதார்த்த நடிப்பிலும் தான்.  

கவர்ச்சிக்கு மட்டும் அழகுப்பதுமையாக வரும் நாயகியாக இல்லாமல் அரசியல் மீதும் முரண்பட்ட சிந்தனை மீதும் பற்று கொண்ட ஜோயாவாக சோனம் கபூர் கனகச்சிதமாக பொருந்தியுள்ளார்.  பள்ளி காலத்து பெண்ணாக இவர் குட்டி படத்து ஜெயாபச்சனை நினைவு கூறுகிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் அபை டியோல் ஈர்க்கிறார். 

ஆங்காங்கே எதிர்பாரா மாற்றங்களுடன் தடம் மாறும் ஹிமான்ஷு ஷர்மாவின் திரைக்கதை பிழையற்றது எனக் கூற அரிதாயினும் ரசிக்கத்தக்கதாய் அமைந்துள்ளது. படம் முழுக்க இசைப்புயலின் இசை ஆஹா ஓஹோ ரகம்தான்.  ஹோலிப்பண்டிகையில் படமாக்கப்பட்டுள்ள ராஞ்சனா பாடலிலும் பனாரஸியா பாடலிலும் நட்ராஜ் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு சபாஷ் போட வைக்கிறது.  

விக்ரம், சூர்யா, அஜித்திற்கு கிடைக்காத ஒரு அரங்கேற்றம் தனுஷிற்கு பாலிவுட்டில் கிடைத்துள்ளது.  சரியான கதைக்களத்தால் பாலிவுட்டில் உரிய ஆடுகளத்தை தனுஷ் கண்டுள்ளார் என்றால் அது மிகையல்ல.  

மொத்தத்தில்: முதல்பாதியில் யதார்த்தமாகச் செல்லும் படம், இரண்டாம் பாதியில் சில நம்பத்தகாத அரசியல் மாற்றங்களையும் காண்கிறது. மேடு பள்ளங்களைக் கடந்தாலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையினால் மிகைப்படுத்தப் படாத கதாபாத்திரங்களின் நடிப்பினால் இனிய பயணத்தை மேற்கொண்ட அனுபவம் தருகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget