ஆரம்பம் விமர்சனம்

படம்: ஆரம்பம்
நடிப்பு : அஜீத், நயன்தாரா, தாப்சி, ராணா
இயக்குனர்: விஷ்ணுவர்தன்
தயாரிப்பாளர்: A. M. ரத்னம், A. ரகுராம் 
பதாகை: ஸ்ரீ சூர்யா மூவிஸ்
இசை: யுவன் சங்கர் ராஜா

பொதுவாகவே ‘தல’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்வதில்லை. ஆழ்வார், ஆஞ்சநேயா, ஏகன் போன்ற கடந்தகால கசப்பான அனுபவங்கள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. இளையதளபதி படம் எப்போதாவது ஊற்றிக்கொள்ளும் என்றால், தல படம் எப்போதாவது ஹிட்டடிக்கும். ஆனால் இப்போது வரை தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய ஓபனிங் அஜித்திற்கு இருக்கிறது. ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கவே செய்கிறது. வெளிநாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

அஜித்- நயன்தாரா, ஆர்யா- நயன்தாரா இரண்டு கூட்டணியுமே சமகால தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வளம் வந்த கூட்டணிகள். இந்த மூன்றுபேரும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்..? மூன்று மணிநேர ஆக்சன் பேக். இறுதிவரை தொய்வில்லாமல் அட்டகாசமாக செல்கிறது.தயங்காமல் சொல்லலாம், தல-க்கு இன்னொரு மங்காத்தா..!
ஹாலிவுட் படத்தை சுட்ட மாதிரியும் இருக்கணும்… சுடாத மாதிரியும் தெரியனும். இது விஷ்ணுவரதனுக்கு கைவந்த கலையாச்சே… SWORDFISH படத்தை அப்படியே எடுத்தால், ‘அய்யய்யோ இது அட்ட காப்பியாச்சே..’ என சொல்லிவிடுவார்கள் என்பதால் அங்கங்கே சுட்டிருக்கிறார். அதே கதைக்களம். ஹாலிவுட் பிஸ்ஸாவுடன் நம்மூர் கரம் மசாலாவை தூவி காரம் சாரமாக பரிமாறியிருக்கிறார்.

நம்மூர் அரசியல்வாதிகள் கோடிகோடியாக ஊழல் செய்து சுவிஸ் பேங்கில் போட்டிருக்கும் பணத்தை எடுத்து இந்தியன் ரிசர்வ் பேங்க்-க்கு கொடுப்பதுதான் படத்தின் ஒன் லைன். அதற்காக இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட, அதேநேரத்தில் பட வெளியீட்டுக்கு பிரச்சனை வராத ஊழலாக இருக்கவேண்டும் என யோசித்திருக் -கிறார்கள். வாஜ்பாய் காலத்தில் நடந்த சவப்பெட்டி ஊழலை கொஞ்சம் மாற்றி ‘புல்லட் புரூவ் ஜாக்கெட்’ வாங்கியதில் நடந்த ஊழலாக மாற்றியிருக்கிறார்கள்.

இதில் எங்கே SWORDFISH வருகிறது..? சுவிஸ்பேங்க் அக்கவுண்டை ஹேக் செய்து பணப் பரிமாற்றம் செய்வதாக திரைக்கதை அமைக்கும்போது இந்தப்பெயர் அடிப்பட்டிருக்கலாம். அயன் படத்தில் சூர்யாவிடம் ஒரு இயக்குனர் பேங்க் ராப்பரி சீன் வர்ற மாதிரி படம் சொல்லு என்பார். அவர் சொன்ன பட்டியலில் இந்தப் படமும் வரும். அதுமாதிரி ஒரு டிஸ்கஸனில் இந்தப் படம் சிக்கியிருக்கும்.

தொடக்கத்தில் மும்பையில் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகி சின்னாபின்னாமாகிறது. அதற்கு காரணம் கைது செய்து வைத்துள்ள தீவிரவாதி துரானிதான் என்று மும்பை போலிசாக வரும் கிசோர் அறிந்து அவரது நெட்வொர்க்கை கண்டுபிடித்து அழிக்க அலைகிறார். இன்னொருபுறம் அஜித், நயன்தாராவுடன் சேர்ந்து இந்த நெட்வொர்க்கின் மேல்மட்ட அரசியல் தொடர்புகளை குறிவைத்து வேட்டையாடுகிறார். இடைவேளைவரை யார் வில்லன், யார் ஹீரோ என்று வரும் குழப்பத்திற்கு இடைவேளைக்குப் பின் தெளிவு கிடைக்கிறது.

ஆர்யாவின் கிளாஸ்மெட் நயன்தாராவும், டாப்சியும். கல்லூரியில் படிக்கும்போது ஆர்யா செம பிரில்லியண்ட். கம்ப்யூட்டரில் அனைத்தும் அத்துப்படி. கம்ப்யூட்டரை ஹேக் செய்து யுனிவர்சிட்டி மார்க்ஷீட்டில் கைவைக்கும் அளவுக்கு புத்திசாலி. அப்படி உதவப்போய் டாப்சியின் கடைக்கண் பார்வையில் சிக்குகிறார். கல்லூரி மாணவராக ஆர்யா வரும் கெட்டப் செம.. தமிழ் சினிமாவில் புதிய யுத்தி. திரையில் பாருங்கள்,ஆர்யா கலக்கியிருப்பார்.

ஆர்யாவின் ஹேக்கர் மூளையைத்தான் பிற்பாடு நயன்தாரா மூலம் அஜித் பயன்படுத்திக் கொள்வார். அதற்கு டாப்சியை வைத்து பிளாக் மெயில் செய்து அந்தக் காரியத்தை சாதிப்பார்.அஜித் பின்புலம் எதுவும் தெரியாமல் அவரை போலீசில் ஆர்யா சிக்கவைக்க, வேறு வழியில்லாமல் அந்த பிளாஸ்பேக்கை ஆர்யாவிடம் அவிழ்க்கிறார் நயன்தாரா..

அஜித் வழக்கம்போல இதிலும் ஒரு நேர்மையான அஸிஸ்டண்ட் கமிஷ்னர். அதுதவிர ஆன்டி டெர்ரரிசம் ஸ்குவாடு (ATS) -ல் ‘பாம் எக்ஸ்பெர்ட்’ ஆகவும் இருக்கிறார். மும்பையில் தீவிரவாதிகள் பாம் வைத்தால் அதை செயலிழக்கச் செய்வது இதன் வேலை. அப்படி ஒரு தாக்குதலில் அவரின் சக ‘பாம் எக்ஸ்பெர்ட்’டும் உயிர் நண்பனுமாகிய ராணா (திரிஷா கூட சுத்துறதா சொல்றாங்களே.அவரேதான் ) பலியாகிறார்.இவரின் தங்கைதான் நயன்தாரா.


பழைய பதிவுகளை தேட