டயல் எ‌ம் ஃபார் மர்டர் ஹாலிவுட் திரை விமர்சனம்!


1954ல் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் டயல் எம் ஃபார் மர்டர் படத்தை இயக்கினார். அவ‌ரின் முக்கியமான மற்றப் படங்களைப் போல இதுவும் தனது த்‌ரில்லை இன்னமும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. படத்தின் சிறப்பைப் பற்றி பார்க்கும்
முன் அதன் மூலத்தைப் பார்க்கலாம். 


ஃப்ரெ‌ட்ரிக் நாட் என்ற இங்கிலாந்து நாடக ஆசி‌ரிய‌ரின் நாடகம்தான் டயல் எம் ஃபார் மர்டர். அரங்கில் நடத்தப்பட்டு வந்த இந்த நாடகத்தை ஹிட்ச்காக் படமாக்கினார். நாடகத்தில் ஒரேயொரு அரங்கு மட்டுமே உண்டு. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் வீட்டின் வரவேற்பறை. ஹிட்ச்காக் வரவேற்பறை தவிர்த்து ஒரு ஹோட்டலின் பார்ட்டி அரங்கு, நீதிமன்ற காட்சி, தெரு என சிலவற்றை படத்தில் சேர்த்திருப்பார். ஆனால் இவை சில நிமிடங்களில் கடந்துவிடக் கூடியவை.


ஹிட்ச்காக் படங்கள் குற்றத்துடன் குற்றம் நடந்த சூழ்நிலை, குற்றவாளிகளின் குற்றத்துக்கு பின்னான மனநிலை ஆகியவற்றை ஆராய்கிறது. இந்த பேருண்மையை கண்டறிந்ததால் அவரது படங்களின் பிற அம்சங்கள் குறித்து தமிழில் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. ஹிட்ச்காக் நீண்ட காட்சிகளின் மீது ஆர்வம் கொண்டவர். அவரது படங்களில் நிகழ்வுகள் துல்லியமாக சித்த‌ரிக்கப்பட்டிருக்கும். ஒரு கார் வருகிறது என்றால் அது வரும் பாதை, எங்கு எப்படி திரும்புகிறது என்பதையெல்லாம் வி‌ரிவாக காண்பித்திருப்பார். கதை நடக்கும் இடத்தை இதன் மூலம் பார்வையாளனுக்கு தெ‌ள்ளத் தெ‌ளிவாக உணர்த்திவிடுவார். அதேபோல் படத்தின் சிக்கலான நிகழ்வுகளையும் வி‌ரிவாக‌த் தெ‌ளிவுப்படுத்துவதில் வல்லவர். ஒருமுறை குரோசாவாவிடம் அப்பாஸ் கியரஸ்தமி, உங்கப் படத்தையும், ஹிட்ச்காக்கின் படத்தையும்தான் மக்கள் தேடிச் சென்றுப் பார்க்கிறார்கள் என்றார். பார்வையாளன் ஹிட்ச்காக்கைத் தேடிச் செல்ல, அவரது படத்திலுள்ள சுவாரஸியத்துடன் இந்த தெ‌ளிவாக பு‌ரிய வைக்கும் யுக்திக்கும் பெ‌ரிய பங்குண்டு.


டயல் எம் ஃபார் மர்டர் படத்தில் ஐந்து பிரதான பாத்திரங்கள் வருகின்றன. பணக்கா‌ரியான மார்கட் மே‌ரி வெ‌ண்டிஸ், அவளது கணவன் - முன்னாள் டென்னிஸ் வீரர் டோனி வெ‌ண்டிஸ், க்ரைம் கதை எழுத்தாளர் மார்க் ஹாலிடே, டோனியின் முன்னாள் காலே‌ஜ்மெட் அலெக்ஸாண்டர் ஸ்வான், இன்ஸ்பெக்டர் ஹப்பர்ட். 


லண்டனில் வசிக்கும் மார்கட்டுக்கு அமெ‌ரிக்காவின் க்ரைம் எழுத்தாளர் மார்க்குடன் காதல் ஏற்படுகிறது. இருவரும் கடிதங்கள் ப‌ரிமாறிக் கொள்கிறார்கள். அதில் ஒரேயொரு கடிதத்தை மட்டும் வைத்துவிட்டு மற்ற கடிதங்களை மார்கட் எ‌ரித்துவிடுகிறாள். ஒருமுறை அந்தக் கடிதம் இருக்கும் அவளது கைப்பை காணாமல் போகிறது. சில நாட்கள் கழித்து பை கிடைத்துவிடுகிறது. ஆனால் அந்தக் கடிதம் மட்டும் களவுப் போயிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மர்ம நப‌ரிடமிருந்து அந்தக் கடிதம் தொடர்பாக அவளுக்கு இரு பிளாக்மெயில் கடிதங்கள் வருகின்றன. ஆனால் அந்த கடிதத்தின் முகவ‌ரியை வைத்து அவளால் அது யார் என்று கண்டு பிடிக்க முடியாமல் போகிறது. கட்...
 இது நிகழ்வுகளாக படத்தில் வரவில்லை. மார்கட்டின் அழைப்பின் பே‌ரில் அவளது வீட்டிற்கு மார்க் வரும்போது அவர்களின் உரையாடல் வழி இந்தக் கதை சொல்லப்படுகிறது.


மார்கட்டின் காதலை அறிந்து கொள்ளும் டோனி - அவன்தான் அவளின் கடிதத்தை எடுத்தது - அவளை சந்தேகம் இல்லாமல் கொலை செய்ய திட்டமிடுகிறான். அதற்கு ஒரு கொலைகாரனையும் ஏற்பாடு செய்கிறான். எப்படி கொலை நிகழ வேண்டும் என்ற திட்டமிடல்தான் படத்தின் பிரதானப் பகுதி. 


டோனி, மார்க்கை அழைத்துக் கொண்டு இரவு பார்ட்டிக்கு செல்ல வேண்டும். அதற்குமுன் மார்கட்டின் வீட்டுச் சாவியை அவளது கைப்பையிலிருந்து எடுத்து கதவுக்கு வெளியே இருக்கும் படிக்கட்டின் கார்பெட்டுக்கு அடியில் டோனி அந்தக் கீயை வைத்துவிடுவார். கொலையாள் அதனை எடுத்து கதவைத் திறந்து ஜன்னல் கர்டனுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும். அதன் அருகில்தான் ஃபோன் வைக்கப்பட்டிருக்கும். இரவு பதினொரு மணிக்கு பார்ட்டியிலிருக்கும் டோனி வீட்டிற்கு போன் செய்வார். ஃபோன் சத்தம் கேட்கும். மார்கட் படுக்கையிலிருந்து எழுந்து போ‌ன் இருக்கும் இடத்திற்கு வருவாள். போனை எடுக்கும்வரை காத்திருந்து அவளது கழுத்தில் துணியை போட்டு கொலை செய்ய வேண்டும். பிறகு போனில் சின்னதாக விசில் சத்தம் செய்தால் எல்லாம் சுபம் என்பதை டோனி அறிந்து கொள்வார். 


வேலை முடிந்ததும் கொலையாளி திருட்டுக்கு முயன்ற தோற்றத்தை தரும்படி பொருட்களை கலைத்துப் போட்டு ஜன்னல் கதவையும் திறந்து வைக்க வேண்டும். மீண்டும் கதவை பூட்டி அதே கார்பெட்டிற்கு அடியில் சாவியை ஒளித்து வைக்க வேண்டும். பார்ட்டி முடிந்து வீட்டிற்கு வரும் டோனி மார்க் முன்னிலையில் தனது சாவியால் வீட்டை திறப்பார். கார்பெட் அடியில் இருக்கும் மார்கட்டின் சாவியை யாரும் பார்க்காத நேரம் அவளின் கைப்பையில் வைத்துவிடுவார். இப்போது டோனி மீது யாரும் சந்தேகப்பட முடியாது. மார்கட்டின் இன்ஸ்சூரன்ஸ் பணமும் திரண்ட சொத்தும் டோனிக்கு கிடைக்கும்.


உலகில் பெர்ஃபக்ட் க்ரைம்கள் நடக்கின்றன. ஆனால் திரைப்படத்தில் அது சாத்தியமில்லை. குற்றவாளியை கண்டுபிடித்து தண்டித்தாக வேண்டும். அதனால் திரைப்படத்தில் பெர்ஃபக்ட் இன்வெஸ்டிகேஷன்தான் உண்டு. இந்தப் படத்திலும் அப்படியே. டோனியின் பிளான் எதிர்பாராதவிதமாக கொலாப்ஸ் ஆகிறது. மார்கட்டுக்குப் பதில் கொலைகாரன் இறந்துவிடுகிறான். தற்செயலாக நடந்த அந்த கொலையை வேண்டுமென்றே மார்கட் செய்ததாக டோனி மாற்றிவிடுவதும், அதனை இன்ஸ்பெக்டர் படிப்படியாக அணுகி உண்மையை கொண்டு வருவதும் நம்மை மறந்து பார்க்கத் தூண்டுபவை.


பொதுவாக ஒரு க்ரைம் த்‌ரில்லர் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சஸ்பென்ஸ் திருப்பங்களை கொண்டிருக்கும். அந்த முடிச்சை நோக்கி கதை பாய்ந்து செல்வதாக திரைக்கதை உருவாக்கப்படும். இதன் காரணமாக அந்த சஸ்பென்ஸ் காட்சியை பார்த்த பின் படத்தின் மீதான சுவாரஸியம் குறைந்துவிடும். இரண்டாவது முறை பாக்கும் ஆவல் எழுவதில்லை. ஹிட்ச்காக்கின் படங்கள் சஸ்பென்ஸ் ஏ‌ரியாவை நோக்கி‌ப் பாய்ந்து செல்பவையல்ல. மேலும் நிகழ்வுகளை மறைத்து, கிளைமாக்ஸில் அதனை வெளிப்படுத்தி மலிவான பதற்றத்தை உருவாக்குவதில்லை. இதனால் அவரது படங்கள் ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் புதிய அனுபவத்தை தருகிறது.
டயல் எம் ஃபார் மர்டர் படத்தின் முக்கிய அம்சம் கொலைக்கு எப்படி டோனி திட்டமிடுகிறார் என்பது. ஹிட்ச்காக் இதில் மட்டும் கவனத்தை குவிக்காமல் ஒவ்வொரு காட்சியிலும் சுவாரஸியத்தை கொண்டு வருகிறார். உதாரணமாக கொலைகாரனை அவர் தேர்வு செய்யும்விதம். பணம் தந்து ஒரு கொலைகாரனை கொலை செய்ய சம்மதிக்க வைக்கலாம். ஆனால் இதில் டோனி தனது முன்னாள் கல்லூரி சக மாணவனும், தற்போதைய ஃபிராடுமான ஒருவனை வீட்டிற்கு வரவழைத்து மனைவியின் கதையைச் சொல்லி, அவளை‌க் கொலை செய்ய கன்வின்ஸ் செய்கிறான். அவன் முடியாது எனும் போது டோனி அவனுக்கு எதிராக உருவாக்கும் லா‌ஜிக்குகள் நம்மை ஆச்ச‌ரியத்தில் தள்ளக் கூடியவை. 


மார்கட்டுக்கு டோனி ஃபோன் செய்ததும் அவள் தூக்கத்தில் இருந்து எழுந்து ஃபோன் இருக்கும் இடத்துக்கு வருவாள். அங்கு மறைந்திருக்கும் ஸ்வான் அவளை கொலை செய்வான். இதுதான் பிளான். இதனை டோனி விளக்கிக் கொண்டிருக்கும் போது அவனுக்கு ஃபோன் வரும். எடுத்து பேசுவார். உடனே ஸ்வான் மறுநாள் தான் என்ன செய்ய வேண்டும் என்று சைகையால் டோனியிடம் கேட்டுக் கொண்டே ஒத்திகை பார்ப்பான். ஹிட்ச்காக் போன்ற ஒரு ‌ஜினியஸால் மட்டுமே இப்படியொரு கற்பனை சாத்தியமாகும். இந்தக் காட்சியால் எப்படி கொலை நடக்கப் போகிறது என்பது பார்வையாளன் மனதில் ஆழப் பதிந்து போகிறது. மறுநாள் ஒத்திகை நிஜமாகப் போகும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் போது யாரும் எதிர்பாராத வகையில் ஸ்வான் பலியாக, டோனி அளவுக்கு பார்வையாளனும் அதிர்ந்து போகிறான்.


அவுட்டோருக்கு செல்லாமல் இன்டோ‌ரிலேயே இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சில விநாடிகள் மட்டுமே வெளிப்புற காட்சி வருகிறது. கோர்ட் காட்சியையும்கூட மார்கட், நீதிபதி இருவ‌ரின் க்ளோஸப் காட்சியுடன் ஹிட்ச்காக் முடித்துக் கொள்கிறார். இந்த க்ளோசப்பையும் கூட அழுத்தமான வண்ணங்களால் கனவுக் காட்சியைப் போல் மாற்றியிருப்பார். 


டயல் எம் ஃபார் மர்டர் கதாபாத்திரங்களின் மீது கசப்போ, சிம்‌‌ப்பதியோ ஏற்படுத்தும் படமல்ல. கொலைக்கான திட்டம், அதற்கானை ஆளை‌‌த் தேர்வு செய்தல், திட்டம் கொலாப்ஸ் ஆவது, அதனை மீண்டும் டோனி மார்கட்டுக்கு எதிராக திருப்புவது, கடைசியில் உண்மை வெளிப்படுதல் என முழுக்க க்ரைமின் நுட்பமான அறிவின் மீதே இப்படம் பயணிக்கிறது. இதனால் காட்சிகளில் கதையை விளக்காமல் வசனங்களின் வாயிலாகவே அனைத்தும் சொல்லப்படுகின்றன. இந்த இடத்தில் ஹிட்ச்காக்கின் ‌ரியர் விண்டோ, ரோப் படங்களை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். இப்படங்களும் டயல் எம் ஃபார் மர்டர் போலவே முழுக்க இ‌ண்டோ‌ரிலேயே எடுக்கப்பட்டவை.


மற்ற த்‌ரில்லர் படங்களிலிருந்து ஹிட்ச்காக் மாறுபடும் இடங்கள் அவரது ஆளுமையை அறிந்து கொள்ள உதவும். அது இன்னொருமுறை... இன்னொரு கட்டுரையில்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget