எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டும், பெட்டிங் ராஜ், ராம்சரண். அவரிடம் தோற்கும் அஜ்மல், ராம்சரணை பழிவாங்க நினைக்கிறார். 25 லட்ச ரூபாய் பந்தயம். 30 நாட்களுக்குள் ராம்சரணிடம், தமன்னா காதலை சொல்ல வேண்டும். தயாரா என்கிறார் அஜ்மல். ஏற்கும் ராம்சரண், தமன்னாவை தொடர்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை ரகளையாக சொல்கிறது படம்.
சிரஞ்சீவியின் வாரிசு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ராம்சரண். கார் ரேஸில் பங்கேற்க, ஓடும் ரயில் மீது பறந்து வரும் அறிமுகக் காட்சியே புல்லரிக்க வைக்கிறது. அஜ்மலின் சவாலை ஏற்று, தமன்னாவை பின் தொடர்ந்து எப்படியாவது ‘ஐ லவ் யூ’ சொல்ல வைக்க படும்பாடு விறுவிறுப்பு. முகேஷ் ரிஷியின் எதிரிலேயே தமன்னாவுக்கு லெட்டர் கொடுப்பதும், அடியாட்கள் சுற்றி வளைத்த அடுத்த நிமிடம், ‘இது டி.வி ரியாலிட்டி ஷோ’ என்றபடி கிஃப்ட் அளிப்பது, த்ரில் காமெடி. பாடல், ஃபைட், காதல் என, படம் முழுவதும் ஆக்ஷன் பிளஸ் ஆவேச அவதாரம் எடுத்திருக்கிறார் ராம்சரண்.
கோடைக்கான தர்பூசணி மாதிரி, தமன்னா. அவர் வரும் காட்சிகள் குளுகுளுவென்றிருக்கிறது. பாடல் காட்சிகள் தவிர அதிக வேலை இல்லை. முதலில் வில்லன் மாதிரி வந்து, தமன்னா சொத்துக்களை காப்பாற்றவே பெட்டிங் வைக்கச் சொன்னதாகக் கூறிவிட்டு உயிர்விடும் அஜ்மல் இறுதியில் அனுதாபத்தை அள்ளுகிறார்.
ராம் சரணின் அப்பாவாக வரும் பார்த்திபனையும், தமன்னாவின் தந்தையாக நாசரையும் வீணடித்திருக்கிறார்கள். பிரம்மானந்தம் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். கோட்டா சீனிவாசராவ், ஆலி, பிரகதி எல்லாம் வழக்கம்போல். சமீர் ரெட்டியின் கேமரா, பாடல்களில் குளிர்ச்சியையும் ஆக்ஷனில் அனலையும் அள்ளி வீசுகிறது. மணி சர்மாவின் பின்னணி இசை, கலவரம். அடர்த்தியான மூங்கில் காட்டில் நடக்கும் அந்த கிளைமாக்ஸ் ஃபைட், பிரமிக்க வைக்கிறது. ஏ.ஆர்.பி.ஜெயராம் வசனம் எழுதியுள்ளார். எந்த லாஜிக்கும் இல்லாத கதை என்பதால் எதுவும் மனதில் நிற்கவில்லை. வழக்கம் போல வில்லன்கள் கத்திக்கொண்டே இருப்பதால் காது ஜவ்வு கிழியும் அபாயம் இருக்கிறது.