நகைச்சுவை கலந்த காதல் கதைகளை எடுத்து வெற்றி பெற்றிருக்கும் படவரிசையில் அடுத்தப் படம் இது. லாஜிக் மட்டும் பார்க்கவில்லை யெனில் முழு நேர நகைச்சுவைப் படமாக பார்த்துவிட்டு வெளியே வரலாம். சங்கர் தாதாவும், ‘கஜினி’ வில்லன் பிரதீப் ராவத்தும் ராயபுரத்தின் பிரபல தாதாக்கள். கட்டப்பஞ்சாயத்து, கொலை என சகல வசதிகளுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். சங்கர் தாதாவின் அடியாள் ஒருவரை பிரதீப்பின் மகன் கொலை செய்துவிடுகிறான்.
இதனால் கோப்ப்படும் சங்கர்தாதா, பிரதீப்பின் மகனை தீர்த்துக் கட்டுகிறார்.
மகனை பறிகொடுத்த பிரதீப், சங்கர்தாதாவுக்கு அந்த வலியைக் கொடுக்க சங்கரின் தங்கையான ஹீரோயினை கொலை செய்யத் திட்டம் போடுகிறார். முன்னெச்சரிக்கையாக, லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் தனது தங்கையை பாதுகாப்பிற்காக சென்னை அழைத்து வந்து தன்னுடன் வைத்து பாதுகாத்து வருகிறார் சங்கர்.
இந்நிலையில் வீட்டில் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் ஹீரோவை அவரது தந்தை சங்கர் தாதாவிடம் கொண்டு போய் வேலைக்கு சேர்த்துவிடுகிறார். பெரிய தாதாவாகத் திகழும் சங்கரின் அலுவலகத்தில் அன்றாடம் வசூலாகும் மாமூல் பணத்தை எண்ணும் வேலை ஹீரோவுக்கு கிடைக்கிறது.
இங்கு வந்து மாட்டிக்கொள்ளும் ஹீரோ, ஹீரோயினை சந்தித்துவிட இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? சங்கர், பிரதீப் மோதலில் ஜெயித்தது யார் என்பதை காமெடி கலந்து கலகலப்பூட்டியிருக்கிறார்கள்.
படத்தின் ஹீரோவான வினய் ரொம்பவும் கஷ்டப்படாமல் வெகு இயல்பாக தனக்கு தோன்றியதை நடித்துக் காண்பித்திருக்கிறார். போலீஸாக வேஷம் போடுவதில் துவங்கி, அம்மாவிடம் கொஞ்சுவது, சங்கரிடம் பயமில்லாமல் பேசுவது, ஹீரோயினிடம் வழிவது, சந்தானத்தை அவ்வப்போது வாரிவிடுவது என்று அத்தனை தில்லுமுல்லுகளையும் கச்சிதமாகச் செய்திருக்கிறார் வினய்.
ஹீரோயின் லண்டனில் இருந்து தருவிக்கப்பட்ட ஷர்மிளா. இதுதான் முதல் படம் என்றாலும் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.
படத்தில் குறிப்பிட்டு மூன்று பேரை சொல்லவேண்டும். பிரபு, சந்தானம், மன்சூர் அலிகான். தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸிலும் சக்கைப் போடு போடும் பிரபு இதிலும் அப்படியே. கொலை செய்யத் தயங்காத வில்லன். பாசமிக்க அண்ணன். டெக்னாலஜி தெரியாத தலைவன். அப்பாவி என்று அனைத்திலும் பிரபுவாகவே நடித்திருக்கிறார்.
சந்தானம் வழக்கம்போல படத்தினை காப்பாற்றி கொடுத்திருக்கிறார். அதில் சந்தேகமில்லை. வினய்யுடன் இணைந்து சாரி என்ற அய்யர் வேடத்தில் இவர் அள்ளி விடும் பஞ்ச் வசனங்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. நல்ல பிளாட்பார்ம் கிடைத்தால் எந்த இடத்திலும் புகுந்து விளையாடலாம் என்பதற்கு கஞ்சா கருப்பு-சந்தானத்தின் காமெடி ஒரு நல்ல உதாரணம்.
இதுவரையிலும் கழுத்தை அறுபது டிகிரி கோணத்திலும், உடலை எண்பது டிகிரி கோணத்திலும் திருப்பிக் கொண்டு ஒரு வினோதமான உடல் மொழியைக் காட்டி நடிக்கும் மன்சூரலிகான் இந்தப் படத்தில் ஈஸிசேரில் அமர்ந்திருக்கும் நோயாளியாக அற்புதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஒரு வசனமில்லை. கோபமில்லை. விழி உருட்டல் இல்லை. ஆனால் பேச முடியாத தனது இயலாமையை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார் மன்சூர் அலிகான்.
கஞ்சா கருப்பு, பாண்டியராஜன், பிரதீப் ராவத் மூவரும் தங்களது கதாபாத்திரத்திற்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
படத்தின் பிற்பாதியில் படத்தின் வேகத்திற்கு தடையாக இருப்பது பாடல்கள்தான். பாடல்களைவிட பாடல் காட்சிகள் ரசனையோடுதான் எடுக்கப்பட்டுள்ளன. தனது இடுப்பை மட்டுமே ஆட்டியிருக்கும் ஷர்மிளாவுக்கு சுட்டுப் போட்டாலும் டான்ஸ் வரவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
டி.கண்ணனின் ஒளிப்பதிவில் வெளிநாட்டு லொகேஷன்களை படமாக்கியவிதம் அசத்தல். படத்தின் வேகத்திற்கு எடிட்டரின் கத்திரிக்கோல் கடுமையாக உழைத்திருக்கிறது எனலாம்.
இசையமைப்பாளர் பிரவீண் மணியின் உழைப்பிற்கேற்ற பலன் கிடைத்ததா என்று தெரியவில்லை. பாடல்கள் எதுவும் மனதில் நிற்காமல் போனது வருத்தம்தான்.
மசாலாவில் நல்ல மசாலாவாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து படமெடுத்திருக்கும் மாதேஷின் இந்தப் படம் சிறந்த பொழுதுபோக்கைத் தருகிறது என்பது மட்டுமே உண்மை.