ஆசாமி திரை விமர்சனம்


போலிச் சாமியார்களைப் பற்றிய கதைதான் ஆசாமி. அன்பானந்தா சுவாமி ஊரில் உள்ள அனைவருக்கும் அருள் வாக்கு சொல்லி வருகிறார். அப்போது ஒரு தம்பதியர் அவரை பார்க்க வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என சாமியிடம் முறையிடுகிறார்கள். அதற்கு சாமியார், உங்களுக்கு தெய்வத்தின் அருளால் ஒரு குழந்தை கிடைக்கும். அது ஒரு தெய்வக் குழந்தை. அதை அம்பாளின் அருளோடு நன்றாக
வளர்த்து வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறார். 


அதேபோல், ஒரு பஸ் விபத்தில், பஸ்ஸில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட, ஒரு குழந்தை மட்டும் சாலையோரம் அனாதையாக கிடக்கிறது. அதை பார்க்கும் அந்த தம்பதி அந்த குழந்தையை மீட்டு, வளர்த்து வருகிறார்கள். பின் அந்த குழந்தை வளர்ந்து பெரியவளாகியபின், அன்பானந்தா ஆசிரமத்திலேயே விடப்படுகிறாள். தெய்வ அருள் கொண்ட இந்த பெண்ணுக்கு நடக்கப்போகும் நிகழ்வுகள் அவளுக்கு முன்கூட்டியே தெரியவர, அதிலிருந்து மக்களை காப்பாற்றி வருகிறாள்.


மற்றொரு புறம், அன்பானந்தா சாமியின் ஆசிரமத்தில் சீடராக இருக்கும் ஐந்து பேரில் ஒருவருக்கு அமைச்சரிடமிருந்து திடீர் போன் வருகிறது. வருமானவரித்துறை சோதனையிலிருந்து தப்பிக்க, கருப்பு பணத்தை அவர்களது ஆசிரமத்தில் வைக்க அமைச்சர் கோருகிறார். சீடரும் ஒப்புக்கொள்ள பணத்தை ஆசிரமத்தில் கொண்டு வைக்கிறார் அமைச்சர். அதை கையாடல் செய்யும் 5 சீடர்களும் பீராநந்தி, சிரிப்பானந்தா, போஜானந்தா, பாம்பானந்தா, கமிஷானந்தா என ஐந்து போலி சாமியார்களாக உருவெடுக்கிறார்கள். 


அதன்பின், விபச்சாரம், நிலமோசடி, ஆபாச படம் எடுத்து குடும்பப் பெண்களை மிரட்டுவது என அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் போலீசார் இவர்களை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். மறுபக்கம் இவர்கள் செய்யும் மோசடிகளை கவனிக்கும் தெய்வக்குழந்தையான பிரியங்காவும் இவர்களை ஒழித்துக்கட்ட நினைக்கிறாள். 


முடிவில், போலி சாமியார்கள் போலீசாரின் பிடியில் சிக்கினார்களா? அல்லது தெய்வக் குழந்தையின் கோபத்திற்கு சாம்பலானார்களா? என்பதே மீதிக்கதை. 


நீண்ட காலத்திற்கு பிறகு ஷகிலா நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். போலி சாமியாராக பியரோடு காட்சி தருகிறார். அவருடன் சேர்ந்து போலி சாமியார்களாக வரும் சந்தானபாரதி, பாண்டு, அனுமோகன், நெல்லை சிவா ஆகியோரும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்கள். சிரிப்பை மட்டும் வரவழைக்க முயற்சித்திருக்கிறார்கள்.


டி.வாசுதேவன் ஒளிப்பதிவு காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். சிவசங்கர் மாஸ்டர் நடனத்தில் அமைந்த ஒரு அம்மன் பாடல் ஆடி மாத பக்தர்களுக்கு ஒரு பக்தி பரவசமூட்டும் பாடலாக அமையும் என்று சொல்லலாம்.  


ஜெயக்குமார் இசையில் ‘உலகாளும் ஓங்காரி’ பாடல் மட்டும் ரசிக்கும் ரகம். பின்னணி இசையில் பரவசம் இல்லை. 


இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் போலி சாமியார்களை பற்றிய விழிப்புணர்வு படத்தை கொடுத்திருக்கிறார். போலி சாமியார்களை சட்டம் விட்டாலும் சாமி விடாது என்ற கருவை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கும் அவருக்கு பாராட்டுக்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget