“சார் க்ளைமேக்ஸ்ல ஒரு சீன் வெச்சிருக்கேன் பாருங்க… அத பார்த்துட்டு எந்த ரசிகனும் கண் கலங்காம வெளிய வர முடியாது… அது மட்டுமில்ல சார்… இந்த படம் தமிழ் சினிமாவை அப்படியே புரட்டிப் போடுது பாருங்களேன்…” இப்படிச் சொல்லிவிட்டு கதையை ஆரம்பிக்கும் இயக்குநரிடம் கதை கேட்கும் தயாரிப்பாளர் இந்த படத்தை எடுப்பதன் மூலம் மேலும் தமிழ் சினிமாவின் முன்னேற்ற பாதையில் வழி நடக்கலாம் என்று நினைத்து படத்தைத் துவக்குவார். எடுத்தவரைக்கும் பார்க்கலாம் என்று பார்த்தால்
எடுத்ததைப் பார்த்து ஜீரணிக்க முடியாமல் வேறு தயாரிப்பாளர் தலையில் கட்டிவிட்டு எஸ்ஸாவார்… அப்புறம் படம் ரிலீஸ் ஆகி… இது மயிலுவுக்கு ரொம்பவே பொருந்தும்.
பகுத்தறிவு பேசும் கிராமத்து இளைஞன்னிடம் அடிக்கடி வம்பு இழுக்கிறார் கூலி வேலை பார்க்கும் ஷம்மு. இருவருக்குள்ளும் காதல் வருகிறது. பகுத்தறிவு பேசுபவன் திடீரென கோடங்கி ஆக்கப்படுகிறான். ஆனாலும் ஊர் கட்டுப்பாடுகளை மீறி நள்ளிரவில் ஊரை விட்டு ஓடி போகிறது ஜோடி. மீண்டும் அவன் இயல்பு நிலைக்கு திரும்பினாரான என்பதை கிராமத்து சூழலில் சொல்கிறார் இயக்குநர்.
படத்தின் பெரிய மைனசே திரைக்கதைதான். படத்தில் வருகிற கேரக்டர்களில் யார் யாரோ தண்ணி அடிக்கிறார்கள் என்று பார்த்தால் படத்தின் திரைக்கதையே தண்ணி அடித்துவிட்டது போலும். ஆட்டம் என்றால் ஆட்டம் அப்படி ஒரு தள்ளாட்டம்.
படத்தின் துவக்க காட்சியிலேயே ஹீரோவும் ஹீரோயினும் ஊரை விட்டு ஓடி வருகிறார்கள். அவர்கள் ஓடி வருவதையும், பேருந்தையும் மாற்றி மாற்றிக் காட்டி படத்தின் துவக்கத்திலேயே நம் தலையில் தண்ணி தெளித்து விடுகிறார்கள். போகப் போக சரியாகும் என்று பார்த்தால். முதல் கோணலே முடிவு வரை என்று முடிவு செய்து விட்டுதான் படத்தை உருவாக்கியிருப்பார்கள் போலிருக்கிறது.
படத்தின் ஹீரோ ஸ்ரீ பார்ப்பதற்கு அப்பாவியாக தெரிகிறார். ஆனால் இவர் மேல் சாமி வந்துவிட்டால் அவ்வளவுதான். ரணகளமாக்கிவிடுகிறார். இரண்டு ரூபாய் கொடுக்காமல் சந்தையில் ஒருவன் டபாய்த்துக் கொண்டு போக அவனை விரட்டி விரட்டி அடிப்பது… அட இதுக்கெல்லாமா சண்டைக்காட்சி வைப்பாங்க என்று கேட்க வைக்கிறது.
தோழராக வரும் விதார்த், ஹீரோவுக்கு வேண்டியவரான கதாபாத்திரத்தில் வருகிறார். படம் இறுதி வரைக்கும் வரும் கேரக்டர்.
ஷம்மு, சில வருடங்களுக்கு முன்பு இவரை திரையில் பார்த்தது. சமீபகாலமாக பார்க்க முடியவில்லை. ஒருவேளை பார்க்கலாம் என்றிருந்தால் கூட, இந்தப் படத்திற்கு பிறகு… வாய்ப்பே இல்லை…
கஞ்சா கருப்பாவது கொஞ்சம் ஆறுதலாக இருப்பார் என்று பார்த்தால் மனுஷன் சதா தண்ணியப் போட்டுட்டு படம் பார்க்கிற நம்ம உயிரையும் சேர்த்தே எடுக்கிறார்.
இயக்குநர் சாமி இருக்குன்னு சொல்ல வர்றாரா? இல்ல இல்லன்னு சொல்கிறாரா? என்பது பற்றிய குழப்பம் படத்தின் கடைசி வரைக்கும் நீடிக்கிறது. இயக்குநருக்கே அந்த குழப்பம் இருந்திருக்கும் போலிருக்கிறது. க்ளைமேக்ஸில் அதை தெளிவு படுத்தினாலும், படம் பார்த்த ஒரு கிறக்கத்திலேயே இருக்கும் எத்தனை பேருக்கு அது புரிந்திருக்குமோ… ஆச்சரியம்தான்.
ஒரே ஆறுதல் இசைஞானியின் இசைதான். பின்னணி இசையிலும் பாடல்களிலும் சொகமாகவே வாசிச்சிருக்காரு இசை ஞானி.
டிஆரை பின்பற்றுவது என்ற முடிவோடு இருக்கிறார் இந்த படத்தின் இயக்குநர் ஜீவன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், ஒளிப்பதிவு, இயக்கம் அத்தனையும் ஒன்று சேர செய்திருக்கிறார் ஜீவன். இத்தனை பணிகளா அத்தனையையும் பார்ப்பது சிரமம்தான். ஆனால் இதில் எல்லாம் சரியிருந்தும், திரைக்கதை சொதப்பியிருப்பதால் மயிலு நோஞ்சானாகிவிட்டது.