சீனு ராமசாமியின் முந்தையப் படம் தென்மேற்குப் பருவக்காற்று தேசிய விருது வாங்கியது. நீர்ப்பறவை மீனவர்கள் வாழ்க்கையை பற்றியது. நடுக்கடலில் படகில் தந்தை இறந்து கிடக்க ஆனாதையாக்கப்பட்ட சிறுவன் அழுது கொண்டிருக்கிறான் என்று படத்தைப் பற்றி சீனு ராமசாமி தந்திருக்கும் டிட்பிட் ஈழ சோகத்தை தொட்டு செல்வதாக உள்ளது. போதாததற்கு வைரமுத்து நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை என்று வார்த்தைகளில் கொக்கி போட்டிருக்கிறார். அப்படி என்னதான் படத்தில் இருக்கிறது, பார்த்துர வேண்டியதுதான் என்று சராசரி ரசிகனும் நீர்ப்பறவைக்காக ஆவல் கொண்டு காத்திருக்கிறான்.
கிறிஸ்தவ மீனவ வாழ்க்கையின் பின்னணியில் நகரக் கூடிய கதை என்பதால் பாடல்கள் அனைத்தையும் விவிலிய வார்த்தைகளை வைத்து எழுதியிருக்கிறார் கவிப்பேரரசு. சத்தியமும் ஜீவனும் நீயே என்று கிறிஸ்தவர்கள் ஏசு வை சொல்வதை இவர் சுனேனாவுக்கு எழுத, பிரச்சனை வெடித்து அந்த வரியை நீக்கியிருக்கிறார்கள்.
படத்துக்கு வசனம் ஜெயமோகன் என்று முதலில் சொன்னார்கள். பிறகு என்ன நடந்ததோ ஆடியோ விழாவில்கூட அவர் பெயரைச் சொல்லாமல், திடீரென ஞாபகம் வந்தது போல விழா நடுவில் எழுந்து, நானும் ஜெயமோகனும் சேர்ந்து வசனம் எழுதியிருக்கோம் என்றார் சீனு ராமசாமி. ஜெயமோகன் இந்தப் படம் குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை.
சுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவு ட்ரெய்லரிலேயே ஈர்க்கிறது. ரகுநந்தனின் பாடல்கள் உணர்வுகளை மீட்டக் கூடியது. மு.காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்துள்ளார்.
படத்தின் முக்கிய வேடத்துக்கு ஷபனா ஆஸ்மியை கேட்டு, மொழி தெரியாமல் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியதால் நந்திதா தாஸை நடிக்க வைத்துள்ளார். விஷ்ணு ஹீரோ. இவர்கள் தவிர சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி.பிரகாஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் படத்தை தயாரித்துள்ளது. படம் பார்த்தேன், ரொம்ப திருப்தியாக இருக்கிறது என்று உதயநிதி கூறியிருக்கிறார். சென்சார் யு சான்றிதழ் தந்துள்ளது.
முந்தையப் படத்தின் புகழ் வெளிச்சம், கவிப்பேரரசின் இலவச விளம்பரம், வரிச்சலுகைக்காக சீனு ராமசாமி சிலிர்த்து எழுந்தது என்று சூழல் நீர்ப்பறவைக்கு நூறு சதவீதம் சாதகமாக இருப்பதால் சுமாராக இருந்தாலே படம் ஹிட்டாகும் என்பதுதான் இப்போதைய நிலைமை.