நீங்கள் தின்பண்டங்களுக்கு அடிமையானவரா? உங்களின் உடல் எடை அதிகரித்தால் ஆயுளும் 10 ஆண்டுகளுக்கு மேல் குறையும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அதிக உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினர். அதில், உடல் பருமன் என்பது புகைபிடித்தலை விட அதிக பாதிப்பைத் தருகிறது.
அதாவது ஆயுளில் சுமார் 13 ஆண்டுகளைக் குறைத்து விடுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.
''நமது சோம்பேறித் தனத்தினாலும், அவசரத்தினாலும் துரித உணவுகளைத் தேடுகிறோம். பற்றாக்குறைக்கு தின்பண்டங்களைச் சாப்பிடுகிறாம்.
நம்மைச் சுற்றியுள்ள நுகர்வோர் சமூகம், நம்மைச் சாப்பிடத் தூண்டுகிறது. அதையே நமது வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்கிறோம்'' என்று ஆய்வுக் குழுவின் தலைமைப் பேராசிரியர் டேவிட் கிங் கூறியுள்ளார்.
இவர் பிரிட்டிஷ் அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆவார். இவரின் குழுவில் உள்ள 250 இளம் அறிவியலாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
உடலின் உயரத்திற்குத் தகுந்த எடை உள்ளதா என அறியப் பயன்படும் BMI (body mass index) அட்டவணைப்படி 30 கிலோ அதிகமாக இருந்தால் ஆயுளில் 10 ஆண்டு குறையும். 40 கிலோ அதிகமாக இருந்தால் ஆயுளில் 13 ஆண்டுகளுக்கு மேல் குறையும்.
மேலும், இதய நோய்கள், நீரிழிவு மட்டுமல்லாமல் புற்றுநோய்க்குகூட உடல் பருமன் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
நிறைய நகரங்களில் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அவற்றைப் பயன்படுத்துபவர்கள் சிறிது யோசிக்க வேண்டும். நடக்க முடிந்த இடங்களுக்கு நடந்து செல்வதே நல்லது. ஏனெனில் அது ஒரு நல்ல உடல்பயிற்சியாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
''இது மிகப்பெரிய கலாச்சார மாற்றத் தேவைக்கு இட்டுச் சென்றுள்ளது. உடல் பருமன் சிக்கல் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நாம் உடனடியாகச் செயல்பட வேண்டும்'' என்று பேராசிரியர் கிங் தெரிவித்துள்ளார்.