உலகம் சர்வதேச தொழிலாளர் தினத்தை இன்று கொண்டாடிக் கொண்டிருக்க, அஜீத்தின் ரசிகர்கள் தங்கள் 'தல'யின் பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். இன்று அஜீத்துக்கு 41 வயது பிறக்கிறது. அவர் நடிக்க வந்த 21 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில் அவர் பேசப்படுகிறார். அவரது லேட்டஸ்ட் படம் பில்லா 2 ரூ 40 கோடிக்கு விற்பனையாகிறது.
அஜீத் இந்த நிலைக்கு வர பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தமிழில் அமராவதியில் அவர் அறிமுகமானார் (அவரது முதல் படம் தெலுங்கில்தான் வந்தது. பெயப் பிரேம புஸ்தகம்).
இந்தப் படத்துக்குப் பிறகு, அவர் ரூ 5 லட்சம் சம்பளம் வாங்கவே ஆண்டுக்கணக்கில் ஆனது. பல படங்களில் அவர் நடிப்பார். ஆனால் ஒழுங்கான சம்பளம் கூட அவருக்குத் தரப்பட்டதில்லை.
இயல்பில் கோபக்காரராக, உணர்ச்சிவசப்படுபவராக அவர் இருந்தாலும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தனது முறைக்காக அவர் காத்திருந்தார். அஜீத்துக்கும் ஒரு ரசிகர்கள் வட்டம் உண்டு, அவர் ஒரு Saleable Hero தான் என்பதை காதல் கோட்டை மெய்ப்பித்தது. அதன் பிறகும் தோல்விகள் தொடர்ந்தன.
காதல் கோட்டையில் ஒரு புதிய அஜீத்தாக வெளிவந்தார். தொடர்ந்து அமர்க்களம் அமோகமாக ஓடி, அவருக்கு திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய திருப்புமுனையைத் தந்தது.
ஷாலினியை மனைவியாக கைப்பிடித்த பிறகு, வந்த முதல் படம் முகவரி சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதற்கடுத்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வந்தது. அதுவும் பெரிய ஹிட் படமானது.
ஆஞ்சநேயா, ஜனா போன்ற படங்கள் வெளியான காலகட்டம்தான் அஜீத்தின் வாழ்க்கையில் மோசமான தருணங்கள் எனலாம். அன்றைக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தேவையற்ற வாதத்தை மீடியா ஆரம்பித்துவைக்க, ஏன் நான் வரக்கூடாதா அந்த இடத்துக்கு என கேட்டபடி வந்தார் அஜீத். தொடர்ந்து ஓயாத பரபரப்பு, சர்ச்சை, அஜீத்தின் பேட்டிகள்... அதன் பிறகு கொஞ்சநாள் அமைதி.
அதற்கடுத்து சில தோல்விகள் வந்தாலும் அஜீத் படங்களுக்கென ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கவே செய்தது. பரமசிவன் வெளியானது. அதில் அஜீத்தின் வெளித் தோற்றம் மட்டுமல்ல, அவர் மனதளவிலும் ஏக மாற்றங்கள்.
அதிகம் பேசுவதை அடியோடு குறைத்துக் கொண்டார். அப்போதுதான் பில்லா படத்துக்கு பூஜை போட்டார்கள். அந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்படி பெரிய திருப்புமுனையைத் தந்ததோ, அது போன்ற திருப்பு முனையை அஜீத்துக்கும் தந்தது.
அந்தப் படத்துக்குப் பிறகு அஜீத்தின் கேரியர்கிராப் அடியோடு மாறிப் போனது. ரஜினியின் அத்யந்த சீடராகவே மாறிவிட்ட அஜீத், படங்களை ஒப்புக் கொள்ளும் விதம், புரமோட் பண்ணும் விதம், பேசும் முறை என அனைத்திலுமே புதிய பாணியைக் கடைப்பிடிக்கிறார்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த மாதிரி, கடந்த ஆண்டு தனது பிறந்த நாளின்போது, ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டதாக அறிவித்தார் அஜீத். அப்படி அறிவித்த பிறகே மங்காத்தா படத்தை வெளியிட்டார். என்ன ஆச்சர்யம்... கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படம் மங்காத்தாதான்.
மன்றங்களைக் கலைத்தாலும் ரசிகர்கள் மனதில் தான் நிலைத்திருப்பதைப் புரிந்து கொண்ட அஜீத், உண்மையான ரசிகர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.
இந்த ஆண்டு அவருக்கு 41வது பிறந்த நாள். மன்றங்களில் இல்லாவிட்டாலும், மக்களுக்கு நல்லது செய்யும் நிகழ்ச்சிகளை சத்தமின்றி செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
"தாராளமாக நல்லது செய்யுங்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையை பாதிக்குமாறு செய்ய வேண்டாம். நஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு பொதுச் சேவை செய்ய வேண்டாம். யாருக்கும் தீங்கு செய்யாமல், முடிந்த உதவியை மட்டும் செய்யுங்கள். நீங்களும் நல்லா இருப்பீங்க, மத்தவங்களும் நல்லாருப்பாங்க".