அதிரடி போலீஸ் அடிச்சு துவைக்கிற போலீஸ் என எத்தனையோ போலீஸ் கதைகளை பார்த்துவிட்ட இந்தி சினிமாவில் முதன் முறையாக அழுகிற போலீஸ் TALAASH படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்திலேயே ஒரு விபத்து நிகழ்கிறது. அது சம்பந்தமாக துப்பு துலக்குவதற்காக வருகிறார் போலீஸ் அதிகாரியான அமீர்கான். கடைசியில் யார் அதற்கு காரணம் என்பதை க்ளைமேக்ஸில் தெரிந்து கொள்கிறார் அமீர்கான். அவர் மட்டுமல்ல… நாமும்தான்.
வேகமாக வரும் கார் சாலை தடுப்பையும் மீறி கடலுக்குள் பாயும் காட்சியுடன் படம் துவங்குகிறது. முதல் காட்சியிலேயே நிமிர்ந்து உட்கார வெச்சிட்டாங்களே… என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே திரைக்கதையில் பெரும் தள்ளாட்டம். ஆனாலும் படம் மெல்ல நகருகிறது. அமீர்கானின் பையன் படகு சவாரியின் போது இறந்துவிடுவது கொஞ்சம் ஷாக்கிங்கான காட்சி. காரில் இருந்து தவறி விழுந்து சாலையில் அடிபட்டுக் கிடக்கும் கரீனா கபூரை அவருடன் காரில் வந்தவர்கள் அப்படியே விட்டுச் செல்லும் காட்சி நம்மை ரொம்பவே அதிர வைக்கிற காட்சி. அப்போது கரீனா கபூரின் தலையில் இருந்து ரத்தம் வழிய, கண்களில் இருந்து கண்ணீரும் வழிகிறது. அப்போது அவர் பார்க்கிற பார்வையில் தெரிகிறது ஓராயிரம் அர்த்தங்கள்.
அமீர்கான் விறைப்பான போலீஸ் அதிகாரியாக இல்லை. அவரது மகன் படகு விபத்தில் இறந்து போய்விட்டான். மனைவியோ எப்போதும் மகனையே நினைத்துக் கொண்டே இருக்கிறாள். இதனால் பெரும்பாலும் வீட்டுப் பிரச்சினையைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். எனினும் கரீனா கபூரின் (?) உதவியுடன் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கிறார்.
அமீர்கானின் மனைவியாக ராணி முகர்ஜி. எப்படித்தான் இவங்க எல்லாம் வயசாக ஆக அழகாகிக் கொண்டே போகிறாங்களோ…! மகனை இழந்த ஏக்கத்தில் வாடும் அம்மா கேரக்டர் என்பதால், படம் முழுக்க கவலை தோய்ந்த முகத்துடனேயே வலம் வருகிறார். இவர் சேலை கட்டியிருக்கும் ஸ்டைலே பார்ப்பவர்களுக்கு ஒருவித கிக்கை உருவாக்கிவிடுகிறது.
கரீனா கபூர் பாலியல் தொழில் செய்பவராக வருகிறார். இவர் விபத்தில் சிக்கிக் கொள்ளும் காட்சியில் கரீனாவுக்காக உருகாத மனமும் உருகிவிடும்.
படத்தின் துவக்கத்தில் வரும் பாடலும் கடைசியில் வரும் பாடலும் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன. பின்னணி இசை சில இடங்களில் மிரட்டல், பல இடங்களில் ரீங்காரம்!
படத்தை இயக்கியிருக்கிறார் ரீமா. ஜிவ்வென வேகத்தில் நகர வேண்டிய படத்தை அவ்வப்போது வேகம் அதிகரித்தும் சில இடங்களில் ரொம்பவே மெதுவாகவும் நகர்த்தியிருக்கிறார். காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் TALAASH சபாஷ் போட வைத்திருக்கும்!