Hallmark என்று சொன்னால் வாழ்த்து அட்டை செய்யும் நிறுவனம் என்றுதான் பலருக்குத்தெரியும். ஆனால் அது திரைப்படங்களையும் தயாரிப்பதுண்டு. Hallmark திரைப்படங்கள் எல்லாவுமே மிகவும் மென்மையானதாகவும், அன்பு, குடும்பம், சமுகம் என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கும். அத்துடன் மனித உணர்வுகளின் வெவ்வேறு பரிணாபங்களையும் கிண்டிப்பார்ப்பதாக இருக்கும்.
The Russell Girl உம் அவ்வாறாகவே ஒரு மிகவும் மென்மையான ஒரு படம்.
சிறுவயதில் தவறுதலாக செய்த மிகவும் பாரதூரமான ஒரு பிழைக்காக பல ஆண்டுகளிற்குப் பின்பும் மனம் புளுங்கிக்கொண்டிருக்கும் இளம் பெண் Sarah (Amber Tamblyn). இவளின் வாழ்வில் இடியாக வந்து விழுகின்றது தனக்கு இரத்தப்புற்றுநோய் என்னும் செய்தி. தான் சிறுவயதில் செய்த பிழைக்கான பரிகாரம்தான் இது என்று நினைக்குகும் Sarah, நோய்க்கான வைத்தியத்தில் இறங்காது சொந்த ஊரில் இருக்கும் தனது பெற்றோரின் வீட்டிற்கு செல்கின்றாள். இவள் சம்பந்தப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய விபத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது ஊரில் இவளது முன் வீட்டுக்குடும்பம் – முக்கியமாக முன் வீட்டு அம்மா (Jennifer Ehle). தனது நோய்யைப் பற்றி எவரிடமும் கூறாமல், முன் வீட்டு அம்மாக்காரியுடன் சமரசம் செய்யமுனைகின்றாள் Sarah. ஆனால் அந்த அம்மாவோ இவளைக் கண்டாலே செத்தவீடு என்று நிற்கின்றார். Sarahவின் குற்றவுணர்வுக்கு பரிகாரம் என்ன என்பதே படத்தின் மூலக்கரு.
இந்தியப்படங்களில்தான் சென்டிமென்ற் அதிகம் என்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். படத்தின் இரு பிரதான பெண் பாத்திரங்களும் நிமிடத்திற்கு நிமிடம் கண் கலங்க வைக்கின்றார்கள். Amber Tamblyn வளர்ந்துவரும் நல்லதொரு நடிகை; Sarah பாத்திரம் இவரிற்காகவே வடிவமைக்கப்பட்டது போலவிருக்கிறது. நல்லதொரு படம் எடுக்க வில்லன் கதாபாத்திரம் தேவையில்லை என்பது Hallmark படங்களில் தெரியும்; இந்தப்படத்திலும் அவ்வாறே. படத்தில் பிடித்த இன்னொரு அம்சம் கதைவசனம் – நறுக்கென்ற வசனங்கள். உதாரணத்திற்கு: “Bad things happen to good people all the time”.
குடும்பத்தோடு பார்ப்பத்ற்கு அருமையான படம்.