சமீபகாலமாக வெற்றிப்பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதில் முன்னணி ஹீரோக்கள் ஆர்வமாகி வருகின்றனர். அந்த வகையில், விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது கமல் எடுத்து வருகிறார். அதேபோல், பில்லா படத்தின் 2ம் பாகத்தில் அஜீத் நடித்தார், சிங்கம்-2வில் சூர்யா நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் இப்போது அர்ஜூனும் இணைகிறார். தான் இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் தான் இயக்கி, நடிப்பதோடு, தயாரிக்கவும் செய்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது.
இதுபற்றி அர்ஜூன் விடுத்துள்ள செய்தியில், நான் இதுவரை பத்து படங்கள் இயக்கி நடித்திருக்கிறேன். அதில் ஜெய்ஹிந்த் மெகா ஹிட் படம். இதன் இரண்டாம் பாகமாக ஜெய்ஹிந்த்-2வை இயக்குகிறேன். இப்படத்தில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கலாமின் கனவுக்கு ஒரு வடிவம் கொடுக்கிறேன். எனது முந்தைய படங்களின் பாதிப்பு துளியும் இல்லாத அளவுக்கு கதை பண்ணியிருப்பதோடு, எனது கெட்டப்பையும் முற்றிலுமாக மாற்றி நடிக்கிறேன். இந்த படத்தில் முன்று பேர் மூன்று காதல் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த சுர்வின் சாவ்லா நாயகியாக நடிக்கிறார். தவிர, மேலும் சில இளவட்ட நடிகர்- நடிகைகளும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கோபி கிருஷ்ணா வசனம் எழுதுகிறார். வேணு ஒளிப்பதிவு செய்ய, கேகே படத்தொகுப்பு செய்கிறார். சென்னை, மும்பை, டில்லி போன்ற நகரங்களிலும், சில வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கப்பட உள்ளது என்கிறார்.