ஒளரங்கசீப் பாலிவுட் சினிமா விமர்சனம்


அந்த காலத்து உத்தமபுத்திரன், நாடோடி மன்னன் தொடங்கி எண்பதில் வெளிவந்த பில்லா, தூங்காதே தம்பி தூங்காதே படங்களின் சாயலில் அமைந்துள்ள படம் ‘ஓளரங்கசீப்‘.  அண்ணன் தம்பி என இரண்டு அர்ஜுன் கபூர், ரியல் எஸ்டேட்டில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் தந்தை ஜாக்கி ஷெரப்பிடம் தவறான முறையில் வளரும் அஜய்,  தாய் தன்வீ அஸ்மியிடம் நெறியுடன் வளரும் விஷால். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் அவர்களின்
தயாரிப்பின் பழைய படங்களான த்ரீஷுல், தீவார் படங்களை நினைவுபடுத்துகிறது. பதவி பணம், பாசம் இவற்றோடு பயணித்துள்ள நீண்ட நாடகம்.

வளர்ந்து வரும் குர்கான் நகரத்தின் ஏ.சீ.பி. பிருத்விராஜ் சுகுமாரனிடமிருந்து கதை தொடங்குகிறது.  இவரது தந்தை அனுபம்கேர், சித்தப்பா ரிஷிகபூர், ரிஷிகபூரின் மகன், மருமகன் என குடும்பத்தில் எல்லோரும் காவல்துறை அதிகாரிகள். தவறான என்கவுண்டர் செய்ததற்காக தனது வேலையை ரிஸைன் செய்கிறார் அனுபம் கேர்.  முழுக்க முழுக்க சித்தப்பா ரிஷிகபூரையே பார்த்து வளர்கிறார் பிருத்விராஜ். மரணப் படுக்கையில் அனுபம்கேர் பிருத்விராஜிடம் தனக்கும் நைனிடாலிலுள்ள தன்வீ அஸ்மிக்கும் ஏற்பட்ட பந்தத்தைக் கூறி கண்மூடுகிறார்.

நைனீடால் செல்லும் பிருத்விராஜ் தன் சித்தி குடும்பத்தின் மீது சினம் கொள்ள, அவர்கள் அனுபம்கேர் மீது வைத்துள்ள அன்பைப் பார்த்து தணிகிறார். மாபியாவிலும்,  கடத்தலிலும் மன்னனான ஜாக்கிஷெரோப், மனைவியாக தன்வீ அஸ்மி. ஜாக்கிஷெரோபின் குணங்கள் பிடிக்காமல் அவரைப் பற்றி போலீஸுக்கு தகவல் அளித்து,  பிறகு அனுபம் கேருடன் இணைகிறார்.

ஜாக்கிஷெரோபைப் பிடிக்க அண்ணன் அர்ஜுன் கபூரை கடத்தி அவர் இடத்தில் தம்பியை ஆள்மாறாட்டம் செய்யும் ரிஷிகபூர், பிருத்விராஜ்.  ஜாக்கிஷெரோப் தனது இரண்டாவது மனைவி அம்ரீதா சிங் விரித்த மாய வலையில் மாட்டியிருப்பதை உணரும்  அர்ஜுன் கபூர். சட்டத்தை நிலை நாட்டுவதாகக் கூறி பிருத்விராஜை ஏமாற்றி, பணம் சேர்க்க ரிஷிகபூர் போடும் நரித்தந்திரம். இந்த யுத்தத்தில் ஜாக்கிஷெரோப், ரிஷிகபூர், அமிர்தா சிங், கதாநாயகி ஷாஷா அகா என அனைவரும் கொல்லப்பட்டு, கடைசியில் அண்ணன் தம்பி எப்படி இணைந்தார்கள்?? என்பது தான் பரணிலிருந்து தூசி தட்டி எடுக்கப்பட்ட கதையின் க்ளைமாக்ஸ். 

பாடல்களும், பின்னணி இசையும் கொஞ்சமும் மனதில் பதியவில்லை.  மிகவும் பழைய கதை, அதை சுவாரசியமின்றி இழுத்துச் செல்லும் திரைக்கதை.  வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகத்திலும் இரட்டையர்கள் ஒருவரை ஒருவர் எதிரில் பார்த்துக் கொள்ளும் அளவுக்குத் தான் கிராபிக்ஸ் அமைந்துள்ளது.  

படத்தில் திருப்திதரும் விஷயம் நடிகர்களின் நடிப்புதான். மகாபாரதத்தில் வரும் சகுனி போல் டி.சி.பி. ரவிகாந்தாக வரும் ரிஷிகபூர் அரிமா போல் கர்ஜிக்கிறார். 

மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழிலும் கனா கண்டேன், சத்தம் போடாதே, மொழி முதலிய படங்களால் நல்ல நடிகர் என்று முத்திரையைப் பதித்த பிருத்விராஜ், இந்தப் படத்தின் மூலம் இந்தியிலும் வலுவான தடம் பதித்துள்ளார். நீச்சல் உடையில் வலம் வரும் ஷாஷா அகா படத்தில் வருகிறார் இறக்கிறார். இவரது உப்பு சப்பற்ற நடிப்பினால் இறக்கும் காட்சியில் கூட அனுதாபம் ஏற்படவில்லை. இரட்டை வேடத்தில் அர்ஜுன் கபூர் அமர்களம்!!  என்று சொல்ல முடியாது சுமார் ரகம் தான். 

இதை யதார்த்தமான படமென்று கூற முடியாது. மசாலா படத்திற்கான அடிப்படை விறுவிறுப்பும் இல்லை. 

மொத்தத்தில் ஓளரங்கசீப் புளித்துப் போன மாங்காய் தொக்கு – அருவை, இழுவை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget