கோ கோவா கான் பாலிவுட் சினிமா விமர்சனம்


ஒரு படத்தை அல்லது பல படங்களை கிண்டலடிக்கும் ஸ்பூஃப் படங்கள் சமீபத்திய இந்தியன் சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. தமிழ் படங்களை, நாயக நாயகிகளை நையாண்டி செய்த `தமிழ் படம்`  இதற்கொரு நல்ல உதாரணம்.  மனித ரத்தத்தை இறையாய் பருகும் ஸோம்பீஸ்களை கிண்டலடித்துள்ள படம் தான் "கோ கோவா கான்".  
நடிகர் சைப் அலிகானின் தயாரிப்பில், ராஜ்-டி.கே (ராஜ் நிடி மொரு-கிருஷ்ணன் டி.கே) என இரு இயக்குனர்களின் கூட்டணியில் வெளிவந்துள்ள படம்.  ஒரே வீட்டில் சிகரெட் குடியுடன் குடித்தனம் செய்யும் மூன்று நண்பர்கள். ஆபீசிலே சக பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொள்ள முனையும் ஒரு நண்பனுக்கு வேலை போகிறது, காதலுக்காக கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கும் மற்றொரு நண்பனை ஏமாற்றும் காதலியின் துரோகம்.  வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என இவ்விரு பிறவிகளும் யோசிக்க, வீட்டிற்குள் நுழையும் மூன்றாவது நண்பன் தனது வேலை விஷயமாக கோவா செல்லவிருக்கும் செய்தியை உறைக்கிறான். அவ்வளவுதான் பணிப் பயணம் உல்லாசப் பயணமாய் மாறுகிறது.

கோவாவிற்குச் சென்று கூத்தடிக்கும் நண்பர்களுக்கு அருகாமையில் உள்ள தனித்தீவில் ரஷ்யன் மாபியா நடத்தும் பார்ட்டியைப் பற்றித் தெரிய வர, இவர்கள் பயணம் தீவை நோக்கி நகர்கிறது.  தீவில் வினோத போதை மாத்திரை எடுத்துக் கொள்ளும் அனைவரும் காலை எழுந்து பார்க்கையில் ஸோம்பீஸ் என்கிற ரத்தக் காட்டேரிகளாக மாற, அவர்களிடம் மாட்டிக் கொள்ளும் மூன்று நண்பர்கள் கூடவே குளு குளு நாயகி. ‘ஐ கில் டெட் பீபிள்‘ என்று கூறி பெரிய துப்பாக்கிகளுடன் வந்திறங்கும் போரிஸின் (ஸைப் அலிகான்) துணையால் இந்த நால்வரும் எப்படி தீவிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை. 

‘டெல்லி பெல்லி‘ பட வெற்றியின் தாக்கம், இரட்டைப் பொருளல்ல நேரடியாக கொச்சைப்படுத்தும் கெட்ட வார்த்தை நெடி படம் முழுவதும் திணித்துக் கிடக்க, பாட்டி முதல் பேத்தி வரை ஒருவரையும் பாரபட்சம் பார்க்காமல் திட்டும் வசனங்கள் முதற்பாதி முழுவதும், ஸைப் அலிகானின் வருகைக்குப் பின் ஸோம்பீஸின் வேட்டை என்று திகிலாக சூடுபிடிக்கும் என எண்ணினால் அதுவும் முதல்பாதியின் பிரதிபலிப்பாக இருப்பது ஏமாற்றம்.

கோவாவின் அழகையும் மறக்கடிக்கச் செய்யும் கதாநாயகி பூஜா குப்தாவின் அழகு.  கவர்ச்சிகரமான உடை அணிந்தும் கலாசாரம் கெடாமல், பெண்மைக்குரிய வரையறை மீறாமல் இவர் நடித்துள்ள விதம் சபாஷ்.  வசனகர்த்தா மற்றும் படத்தின் நாயகன் என டபுள் ரோலில் குனால் கேமு, வெகுளித்தனமான பார்வையுடன் விஷமத்தனம் செய்யும் வீர்தாஸ், ‘த்ரீ இடியட்ஸ்‘ ஓமி வைத்யாவை நினைவூட்டும் ஆனந்த் திவாரியும் மனதில் பதிகின்றனர். சச்சின் ஜிட்காரின் பின்னணியும், அறிந்தாம் கதக்கின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

போதைப் பவுடர் (கோக்கைன்) மேலே பட்டவுடன் ‘ஸாம்பீஸ்கள்‘ ஸ்தம்பித்துப் போவது, இல்லாத கோக்கு மாக்குத்தனம் எல்லாம் செய்து கடைசியில் நர்யகர்கள் நன்நெறி பேசுவது தான்  செம்ம காமெடி. தயாரிப்பாளர் என்பதால் ஸைப் அலிகானுக்கு சிறப்புத் தோற்றத்தைத் தாண்டி கொஞ்சம் அதிகமான ரோல் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர் பட்டறையில் இவர் மட்டும் முதுமையாகத் தோன்றுகிறார். 

ஹாலிவுட்டில் ‘வேகஸ்‘ நகரமென்றாலே கப்பல், காஸினோ, சூது இவைகளைச் சுற்றியே படத்தின் களம் அமைந்திருக்கும். நம் நாட்டில் ‘கோவா‘ என்ற ஊர் வந்தாலே இயக்குனர்கள் மது, மாது, போதை போன்ற லாகிரி வஸ்துக்களை மையப் பொருளாக எடுத்துக் கொள்கின்றனர்.  இந்தப் படமும் இதற்கொரு விதிவிலக்கல்ல. என்ன.. இந்த அம்சங்களுடன் ஸாம்பீஸை இணைத்துள்ளனர் அது தான் புதுமை. 

படம் முழுக்க விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை எனக் கூறுவது மிகை.  படத்தில் தொய்வடையும் தருணங்கள் இல்லை போரடிக்காமல் நகர்கின்றது என்று கூறலாம். 

மொத்தத்தில் கோ கோவா கான் – போய் பார்க்கலாம் ஒரு முறை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget