கூந்தல் என்பது ஒருவகை இறந்த பொருள். அதனால்தான் முடியை வெட்டும்போது நமக்கு வலி தெரிவதில்லை. கூந்தல் கெராட்டின் என்ற பொருளால் ஆனது. கூந்தல் வளர்ச்சிக்கு தாதுச் சத்துக்கள் மிக முக்கியம். இரும்புச் சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ், போரான், கால்சியம், தாமிரம் உட்பட நிறைய சத்துக்கள் தேவை.
இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கூந்தலுக்கும் அதன் மேல் பூச்சில் நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. கூந்தலின் ஆரோக்கியம் என்பது உள்ளே உட்கொள்ளும் உணவுகளையே பொறுத்தது. ஐ ஷேடோ தடவினால் பார்வைத் திறன் அதிகரிக்கும் என்ற மாதிரிதான் எண்ணெய் தடவினால் கூந்தல் வளரும் என்பதும்.
ஆனாலும் கூந்தலுக்கு எண்ணெய் தடவுகிறோம் அது மண்டையின் ஆரோக்கியத்துக்காக. செடிகள் வளர எப்படித் தரையை உரம் போட்டு, உழுது வைக்கிறோமோ அதே மாதிரிதான் கூந்தல் வளர மண்டையோட்டுப் பகுதியை எண்ணெய் தடவி ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது.
கூந்தலுக்கு தினசரி எண்ணெய் தடவவேண்டும் என்று அவசியமில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை தடவினால் கூடப் போதும். அதையும் ஒரே ஒரு நாள் வைத்திருந்துவிட்டு அடுத்த நாள் அலசிவிடலாம். தினசரி 50 முதல் 80 முடிகள் வரை உதிர்வது சகஜமான விஷயம்தான்.
80 முதல் 100, அதற்கு மேல் முடிகள் உதிரும்போது, அதை ஆரோக்கியமின்மையின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். உங்கள் தலைமுடியைப் பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும்.
தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பைப் பயன்படுத்துவது நல்லது. சுருட்டை முடி உள்ளவர்கள் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது.
நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்