நேரம் சினிமா விமர்சனம்


நேரம் இரண்டு வகைப்படும். ஒண்ணு கெட்ட நேரம், இன்னொண்ணு நல்ல நேரம். கெட்ட நேரத்துக்கப்புறம், கண்டிப்பா நல்ல நேரம் வரும்…என்று கொஞ்சம் சோகமான பின்னணிக் குரலுடன் ஆரம்பமாகி அதே குரலுடன் இனிமையாக முடியும் படம்… நேரம், ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்ற ஒரு வரிக் கதையை, அழகான, அற்புதமான திரைக்கதையுடன் நம்மை  இரண்டு மணி நேரம் நகர விடாமல் உட்கார வைத்து விடுகிறார்கள்.
எங்க இருந்து கிளம்பி வர்றாங்களோ தெரியலை, இப்படிப்பட்ட  புதுப்புது இயக்குனர்கள். தமிழ் சினிமாவை படத்துக்குப் படம் வேறு ஒரு தளத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் இப்படிப்பட்ட இயக்குனர்கள். வாழ்த்துக்கள் அல்போன்ஸ் புத்ரன். தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘உண்மையான வித்தியாசம்’ இந்த படத்திலும் இருக்கிறது.
படத்தின் நாயகன் வெற்றிக்கு ‘கெட்ட நேரம்’ ஆரம்பிப்பதால்  திடீரென வேலை போய் விடுகிறது. தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் ‘வட்டி ராஜா’விடம் 50,000 ரூபாயை வட்டிக்கு கடன் வாங்குகிறார். ஓரிரு மாதங்கள் சரியாக வட்டி கட்டிய சூழ்நிலையில் ஒரு நாள் மாலை 5 மணிக்குள் வட்டி, அசலை திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வருகிறது.

அதே நாளன்று அவருடைய காதலியான வேணி (நஸ்ரியா நாசிம்), வீட்டை விட்டு வெளியேறி இவரைத் திருமணம் செய்து கொள்ள வருகிறார். மகளைக் காணாத அப்பா சரவணர் (தம்பி ராமையா) மகளை வெற்றி கடத்தி விட்டதாக காவல் துறையில் புகார் செய்து விடுகிறார். இன்ஸ்பெக்டர் மாலை 5 மணிக்குள் வேணியை ஒப்படைக்க வேண்டுமென வெற்றியிடம் போனில் மிரட்டுகிறார்.
அதே நாளன்று, வெற்றியின் மச்சான் 50,000 ரூபாய் கடன் கேட்டு வந்து, மாலை 5 மணிக்குள் வேண்டும் என்று கேட்க, அன்றைய ஒரு சில மணி நேரங்கள் வெற்றிக்கு ‘‘கெட்ட நேரமாக அமைகிறதா, இல்லை நல்ல நேரமாக அமைகிறதா” என்பதே ‘நேரம்’.

‘வெற்றி’யாக நிவின். கொஞ்சம் அப்பாவித்தனமான முகம், இவருடைய கதாபாத்திரத்திற்கு ஒரு பிளஸ் பாயின்ட். ஒருத்தனுக்கு கெட்ட நேரம் ஒண்ணு வந்தால், எப்படியெல்லாம் சுத்தி சுத்தி அடிக்கும். அந்த ஃபீலிங்சை அப்படியே அச்சு அசலா கொடுத்திருக்காரு. நம்ம எல்லாருக்கும் எப்பவாச்சும் இதை மாதிரி ஒரு நாள் , என்ன பல நாள் கூட வந்திருக்கும். அப்பலாம் இப்படித்தான் நாமளும் இருந்திருப்போமோன்னு சொல்ற அளவுக்கு ரொம்ப இயல்பா நடிச்சிருக்காரு நிவின்.

‘வேணி’ கதாபாத்திரத்தில் நஸ்ரியா நாசிம். முதல் படம் தமிழில் வெளியாவதற்குள்ளே தமிழ்ல நாலஞ்சி படம் நடிக்கிறாங்கன்னா சும்மாவா. இப்படி ஒரு கேரக்டர்ல நடிக்க கண்டிப்பா ‘மலையாள’ நடிகைகள்தான் நடிக்க முன் வருவாங்க. ஒரு பாரின் டூயட் இல்லை, கலர் கலரா டிரஸ் இல்லை, அரை குறை ஆபாச உடை இல்லை. யதார்த்தமான ஒரு ஆறேழு காட்சிகள்தான் மொத்தமே.  நஸ்ரியா, நல்ல படமா தேர்ந்தெடுத்து  நடிச்சீங்கன்னா தமிழ் சினிமால அடுத்த ‘நதியா’ நீங்கதான்.

‘சூது கவ்வும்’ படத்துல சரியான காமெடி பீஸா நடிச்ச சிம்ஹா இந்த படத்துல ஒரு மிரட்டலான ‘வட்டி ராஜா’ கேரக்டர்ல நடிச்சிருக்காரு. அதே படத்துல காலையில தூங்கி எழுந்ததும் சரக்கடிக்கிற ரமேஷ் திலக் இந்த படத்துல ‘லைட் ஹவுஸ்’னு ஒரு பிக்பாக்கெட் கேரக்டர்ல நடிச்சிருக்காரு.

நஸ்ரியா அப்பாவா தம்பி ராமையா, இன்ஸ்பெக்டர் ‘கட்ட’ ன்ற கேரக்டர்ல ஜான் விஜய், தாதா தண்டபாணியா நாசர், அந்த ‘டூயூட்’  பார்ட்டி மாணிக் கேரக்டர்ல அனந்த் நாக் இப்படி மத்த கேரக்டர்ஸ்ம் செம இன்ட்ரஸ்டிங்.

ராஜேஷ் முருகேஷன் இசையில பின்னணி இசை அட்டகாசம். ஒவ்வொரு காட்சிக்கேத்த படி வித்தியாசமான இசை நம்மள கூடவே டிராவல் பண்ண வைக்குது. பாடல்களுக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுக்கலை. ஆனாலும், அந்த ‘பிஸ்தா’ பாட்டு செம ரகளை.

ஆனந்த் சி. சந்திரன் – ஒளிப்பதிவு , மோகன மகேந்திரன் – கலை, பிரதீப் பாலார் – வசனம், படத்துக்கு நல்ல நேரத்தோடவே உழைச்சிருக்காங்க. இயக்குனரே எடிட்டரா இருந்து கச்சிதமா காட்சிகளை ‘கட்’ பண்ணியிருக்காரு…

நேரம் – எல்லா தியேட்டர்லயும் ‘நேரம்’ ஃபுல்தான்.  அதான்…ஹவுஸ்ஃபுல்….
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget