ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த வாரம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூப்பிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு மலையாளத்தில்
ஒரு படம் தயாராக உள்ளது. அந்த படத்துக்கு 'கிரிக்கெட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மலையாள படத் தயாரிப்பாளர்கள் சாஜி கைலாஸ், ஏ.கே.சாஜன் இருவரும் சேர்ந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள். கதை- வசனத்தை சாஜன் எழுதுகிறார்.
இதற்கான முதல் கட்ட பணிகள் முடிந்துவிட்டன. கிரிக்கெட் கதை பற்றி படத்தயாரிப்பாளர் சாஜி கைலாஸ் கூறியதாவது:-
இந்த படம் கேரள இளைஞன் ஒருவனின் கிரிக்கெட் வாழ்க்கை பற்றியது. கேரளாவில் ஒரு பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டில் ஆல்- ரவுண்டராக இருக்கும் ஒரு வாலிபன் கடின உழைப்பால் உச்சத்துக்கு வருகிறான். புகழ்பெற்ற பிறகு பேராசை காரணமாக அவன் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறான். இதனால் வாழ்க்கையில் கடை மட்டத்துக்கு தள்ளப்படுகிறான். இதைத்தான் படமாக தயாரிக்கப் போகிறோம்.
ஸ்ரீசாந்தின் இந்த செயலால், ரோல் மாடலாக இருக்க வேண்டிய அவர், தன்னைத்தானே அழித்துக் கொண்டுள்ளார். இதற்கு பேராசையே காரணமாகும். இதற்கு வேறு யாரையும் குறை சொல்ல முடியாது. ஸ்ரீசாந்த் மட்டுமே இதற்கு பொறுப்பு. இன்றைய இளைஞர்கள் தங்கள் லட்சியத்தை நிறை வேற்ற இப்படி மாறி விடுகிறார்கள்.
இந்த செய்தியை கிரிக்கெட் படத்தில் வலுவாக சொல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.