குரோம் பிரவுசருக்கு பாதுகாப்பு தரும் செயலிகள்

குரோம் பிரவுசரின் மிகச் சிறப்பான அம்சம், அதனை நம் விருப்பப்படி அமைத்து இயக்கக் கூடிய வசதிகளை அது தருவதுதான். குறிப்பாக,
பாதுகாப்பு தரும் பல எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், குரோம் பிரவுசருக்கென கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமான சில புரோகிராம்களை இங்கு பார்க்கலாம்.

HTTPS Everywhere : இந்த புரோகிராம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பலருக்கு இதனைப் பரிந்துரைத்திருக்கிறேன். நீங்களும் பயன்படுத்தலாம். ஏன்? காரணம் என்ன? இந்த எக்ஸ்டன்ஷன்
புரோகிராம், உங்களுக்கும் இணையத்தில் நீங்கள் தொடர்பு கொள்ளும் பிரவுசருக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் தகவல்களை மறைக் குறியாக்கம் (Encryption) செய்து அனுப்புவதுதான். எனவே, ஹேக்கர் ஒருவர் உங்களுடைய கம்ப்யூட்டர் அனுப்பும் தகவல் ஓடைக்குள் நுழைந்தாலும், அதில் அனுப்பப்படும் டேட்டா குறித்து எதுவும் அறிய முடியாது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய 

இணைய தள முகவரி: https://chrome.google.com/webstore/detail/https-everywhere/gcbommkclmclpchllfjekcdonpmejbdp

Web of Trust : நீங்கள் பார்க்கும் இணைய தளங்களை அடுத்து (சிகப்பு, பச்சை அல்லது மஞ்சள்) என்ற வண்ணத்தில் ஐகான் ஒன்றை இந்த Web of Trust எக்ஸ்டன்ஷன் புரோகிராம் காட்டும். இது அந்த தளத்தின் நம்பகத்தன்மைக்கான அளவு கோல். குறிப்பிட்ட ஓர் இணைய தளம் சரியானதா அல்லது நம் கம்ப்யூட்டருக்கு மால்வேர்களை அனுப்பி கெடுதல் விளைவிக்கும் இணைய தளமா என்பதை இந்த வண்ண ஐகான் காட்டும். ஒவ்வொரு இணையதளத்திலும், டேட்டா பல இடங்களிலிருந்தும் பெறப்படுவதால், இந்த ஐகான் மூலம் அது பாதுகாப்பானதா என்று அறிந்து கொண்டு, பின்னர் அதன் உள்ளே இறங்கலாம். இதனைப் பெற https://chrome.google.com/webstore/detail/wot-web-of-trust-website/bhmmomiinigofkjcapegjjndpbikblnp என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். 

Adblock : இது பாதுகாப்பு தருவதைக் காட்டிலும், அதிகப் பயன் தரும் ஒரு எக்ஸ்டன்ஷன் புரோகிராம் ஆகும். நாம் இணையத்தில் செல்கையில், விளம்பரங்கள் காட்டப்படுவதனை இது தடுக்கிறது. அனைத்து விளம்பரங்களும், கெடுதலை விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களைக் கொண்டிருக்காது என்றாலும், அது போன்ற விளம்பரங்கள் தடுக்கப்படுவது நமக்கு பாதுகாப்பு தானே. இணையத் தளங்கள் மட்டுமின்றி, யு ட்யூப் தளத்தில் விடியோ பைல்களைப் பார்க்கையில், குறுக்கே தலை நீட்டும் விளம்பரங்களையும் இது தடுக்கும். இதனால், ஆர்வத்துடன் படம் பார்த்துக் கொண்டிருக்கயில், 30 முதல் 60 நொடிகள் நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் வரும் தேவையற்ற விளம்பரம் தடுக்கப்படும். எனவே, இதனை நாம் நிச்சயம் பயன்படுத்தலாம். இதனைத் தரவிறக்கம் செய்திட https://chrome.google.com/webstore/detail/adblock/gighmmpiobklfepjocnamgkkbiglidom என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்தினை நாடவும். 

Ghostery மற்றும் Disconnect : இந்த இரண்டு எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான செயல்பாடுகளை நமக்குத் தருவதால், இவை இரண்டையும் இணைத்துள்ளேன். இவை நம் இணையப் பயணத்தை வேவு பார்க்கும் மால்வேர்களைக் கண்டறிந்து தடுக்கின்றன. வேவு பார்க்கும் மால்வேர் புரோகிராம்கள் பல வேலைகளை மேற்கொள்கின்றன. அவற்றில் ஒன்று, நம் தேடல்களைப் பின்பற்றி அறிந்து கொண்டு, நம்மைப் பற்றிய ஒரு புற உருவைத் தோற்றுவித்து இணைய தளத்தோடு இணைப்பதாகும். இதனால், சிறிது காலத்தில், இந்த இணையதளங்களை வடிவமைத்து பதிந்துள்ள இணைய தள உரிமையாளர்களுக்கு, நாம் விரும்பும் தளங்கள், பொருட்கள், படிக்கும் விஷயங்கள் ஆகியன முழுமையாகத் தெரிய வரும். இவற்றின் அடிப்படையில், இந்த இணையத்தில் நீங்கள் உலா வருகையில், உங்கள் விருப்பங்கள் சார்பான கூடுதலான விளம்பரங்களை உங்கள் பார்வைக்கு அனுப்ப முடியும். அந்த விளம்பரங்களை அனுப்புவதன் மூலம், இணைய தள உரிமையாளர்கள் அதிக வருமானம் பெற முடியும். Ghostery மற்றும் Disconnect எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், நம்மைப் பின்பற்றும் இத்தகைய புரோகிராம்களையும் விளம்பரங்களையும் கண்டறிந்து தடுக்கின்றன. இவற்றைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளங்கள்: https://chrome.google.com/webstore/detail/ghostery/mlomiejdfkolichcflejclcbmpeaniij மற்றும் https://chrome.google.com/webstore/detail/disconnect/jeoacafpbcihiomhlakheieifhpjdfeo.

Tunnelbear VPN (Virtual Private Network) எப்போதும் ஆபத்தினை எதிர்நோக்கி, இணையத்தில் தொடர்பு கொள்வதைக் காட்டிலும், பலர் இப்போது விரும்புவது Virtual Private Network என்னும் மெய்நிகர் வலைப்பின்னல் அமைப்பு தான். இதன் மூலம் நம்மையும், நம் டிஜிட்டல் டேட்டாவினையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். நீங்கள் எப்போதாவது, பொதுவான வை பி (ஒரு தங்கும் விடுதி, உணவு விடுதி அல்லது விமான, ரயில் நிலையம் ஆகியவற்றில் கிடைக்கும் இலவச வை பி இணைய இணைப்பு) இணைப்பினைப் பாதுகாப்பின்றி பயன்படுத்தினால், உங்கள் டேட்டா அனைத்தும் திருடு போக வாய்ப்புகள் அதிகம் உண்டு. உங்கள் அருகே அமர்ந்து கூட ஒரு திருடன், அதே இணைய வலையில் நுழைந்து, அதன் வழியே, உங்கள் கம்ப்யூட்டரிலும் நுழைந்து தகவல்களைத் திருட முடியும். இந்த இடங்களில், மிகச் சரியான மெய்நிகர் வலைப்பின்னல் ஒன்றைப் பயன்படுத்தினால், அது பாதுகாப்பினைத் தரும். இந்த வலைப்பின்னல், உங்கள் கம்ப்யூட்டருக்கும் இணைய சர்வருக்கும் இடையே தனிப்பட குகை வழிப் பாதையினை அமைத்துத் தருகிறது. மேலும், இடைப்பட்ட பரிமாற்றத்தில் மேற்கொள்ளப்படும் டேட்டாவினை மறைகுறியாக்கம் செய்கிறது. இதனால், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து டேட்டா திருட நினைப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது. மேலும், இடங்களின், நாடுகளின் அடிப்படையில், தடுக்கப்பட்டுள்ள டேட்டாவினை உங்களால் இதன் மூலம் படிக்க இயலும், உங்கள் இணைய நிர்வாகி தடுக்கும் தளங்களைக் கூடப் பார்வையிட முடியும். இந்த வகையில், மிகச் சிறந்த ஒரு மெய்நிகர் வலைப்பின்னலை Tunnel Bear எக்ஸ்டன்ஷன் புரோகிராம் தருகிறது. இதன் பயனர் இடைமுகம் மிக எளிதானது என்ற ஒன்றுக்காகவே இதனை நான் பரிந்துரை செய்கிறேன். இதனைப் பெற்றுப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: https://chrome.google.com/webstore/detail/tunnelbear-vpn/omdakjcmkglenbhjadbccaookpfjihpa

Unshorten.link : இணைய முகவரிகளைச் சுருக்கித் தரும் பழக்கம் இப்போது இணையமெங்கும் நிலவி வருகிறது. இத்தகைய லிங்க் அமைப்பு, நமக்கு எளிதாக அமைகிறது. சுருக்கித் தருவதற்கென்றே Bitly and TinyURL போன்ற சேவைகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், ஹேக்கர்கள், இதனைப் பயன்படுத்தி, இது போன்ற சுருக்கமாக அமைக்கப்பட்ட லிங்க் காட்டி, கிளிக் செய்திடத் தூண்டி, நம்மைச் சிக்க வைக்கின்றனர். இந்நிலையில் தான் Unshorten.link எக்ஸ்டன்ஷன் செயலி நமக்கு உதவுகிறது. இது, சுருக்கமான முகவரிகளை விரித்து நமக்குக் காட்டுகிறது. இதன் மூலம், அந்த சுருக்கப்பட்ட லிங்க், எந்த தளத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது என்று காட்டப்படும். சந்தேகமான தளம் என்றால், நாம் அதனைப் பார்க்கமாலேயே இருந்துவிடலாம். இதனைப் பெற நீங்கள் செல்லவேண்டிய இணைய தள முகவரி: https://chrome.google.com/webstore/detail/unshortenlink/gbobdaaeaihkghbokihkofcbndhmbdpd/related
மேலே சுட்டிக் காட்டப்பட்டவை அனைத்தும், நம் இணைய உலாவினைப் பாதுகாப்பாக வைத்திட உதவும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களே. இணையத்தில் மேலும் சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களும் கிடைக்கலாம். இவற்றைப் பதிந்து இயக்கும்போது, உங்களுக்கு இவை தேவையில்லை என்று உணர்ந்தாலோ, அல்லது அவற்றின் செயல்பாடுகளில் சந்தேகம் இருந்தாலோ, அவற்றை நீங்கள் chrome://extensions எனச் சென்று நீக்கிவிடலாம். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget