தந்தைக்கு மகன் உபதேசம் என்று புராணங்களில் படித்திருக்கிறோம்! தாதா தந்தைக்கு "சாதாரண"மானவன் - மாணவன் - மகன் பாடம் புகட்டும் கதை தான் "பாரி" படம் மொத்தமும்! தாதா கம் பொதுப்பணித்துறை காண்டிராக்டர் வில்லன் சக்திவேல், இவரது ஒரே மகன் ராகுல்.
பள்ளி இறுதியாண்டு படிக்கும் இவருக்கு, அந்த ஊருக்கு மாற்றலாகி வரும் பொதுப்பணித்துறை பொறியாளர் மகள் பீனா மீது காதல்! முதலில் ராகுலின் காதலை ஏற்க மறுக்கும் பீனா, ஒரு பட்சாதாபத்தில், ஒரு கட்டத்தில் ராகுலின் காதலை ஏற்றுக் கொள்கிறார். பள்ளி முடிந்து கல்லூரியிலும் தொடரும் இவர்களது காதல், மற்றொரு சந்தர்பத்தில் ராகுலின் அப்பாவுக்கு தெரிய வருகிறது. அதேநேரம் ஒரு காண்டிராக்ட் ஏலம் தொடர்பாக பீனா அப்பாவுக்கும், ராகுல் அப்பாவுக்கும் மோதல் முற்றுகிறது! அப்பாக்களின் மோதலை மீறி பிள்ளைகளின் காதல் கை கூடியதா...? காதல் முறிந்ததா...? என்பதை "பாரி" படத்தின் மீதிக்கதை சொல்கிறது!
அறிமுக நாயகர் ராகுல் இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார். ராகுல், அப்பா மீது கோபமும், அம்மா மீது பாசமும் கொள்ள சரியான காரணங்கள் காட்சியாக்கப்பட்டிருப்பதும், அதில் சரியாக ராகுல் பொருந்தி நடித்திருப்பதும் படத்தின் பெரிய பலம்! காதலி பீனாவை யாராவது அதட்டினால் கூட அடித்து துவைக்கும் ஹீரோ, காதலியை தன் தந்தை தீர்த்து கட்டி விட்டார் என தெரிந்தும், ரியாக்ஷ்னை உடனடியாக காட்டாமல் உருமாறுவது "பாரி" கதைக்கு வேண்டுமானால் ஓ.கே. நிஜத்திற்கு லாஜிக் இல்லாமல் இருப்பது பலவீனம்! ஆனாலும் புதுமுகம் எனும் குறை தெரியாமல் தனது முன் வழுக்கையை தானே கமெண்ட் அடித்துக் கொண்டு கலக்கலாக நடித்திருக்கிறார் ராகுல்!
புதுமுக நாயகி பீனாவும் பிரமாதம்! கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் தங்களது பஜனை கோஷ்டியில் உடன் வருவது தன் காதலர்தான் என்பது தெரிந்ததும், மகிழ்ச்சி மற்றும் மனபயத்துடன் அந்த காட்சிகளில் மாறி மாறி ரியாக்ஷ்ன் காட்டியிருக்கும் பீனா, சீனியர் நடிகைகளையே மிஞ்சி விடுகிறார். பேஷ் பேஷ்! காண்டிராக்டர் கம் வில்லனாக, ஹீரோயின் அப்பாக வரும் சக்திவேல், மனைவியை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு, பெட் அருகிலேயே சரக்கும், சைடீஸ்மாக இருப்பதிலேயே அவர் எவ்வளவு கொடூரமானவர் என்பதை நிருபித்து விடுகிறார். அதேமாதிரி நாயகியின் அப்பாவாக பொறியாளராக வரும் டேவிட் எனும் பாஸ்கர் யதார்த்தமாக ரொம்பவும் பக்குவமாக பேசுவதில் இருந்தே அவரது பாத்திரத்தையும் ரசிகர்களுக்கு புரிய வைத்துவிடுகிறார் இயக்குநர் ரஜினி! இதேமாதிரி சரஸ்வதி, தாந்தரூவி, பிரபாகரன், தமிழ், சுரேஷ், சங்கர் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது இப்படத்தின் பலம்!
ரோபின் என்.சாமுவேலின் ஒளிப்பதிவு, அருள்தேவின் இசை உள்ளிட்ட பக்க பலங்களுடன் பக்காவான கதையை பாரி படமாக எழுதி, இயக்ககியிருக்கும் புதியவர் ரஜினி, யதார்த்தம் எனும் பெயரில் அரசு கலைக்கல்லூரியில் மது, போதை, சண்டை , சச்சரவு என கல்லூரி வளாகத்திற்குள்ளேயே நடக்கும் அநியாயங்களை அப்படியே படம் பிடிக்கிறேன் பேர்வழி... என அடிக்கடி காட்டியிருப்பது சுத்தபோர்! ஆனாலும் அதை அழகாக மறைத்து மறக்க செய்கிறது படத்தின் காட்சிகள். குறிப்பாக அரவாணியாக மாறுபவர்களின் அவலங்களையும், பணத்திற்காக கொலை பண்ணும் கொலைக்காரர்களின் கொடூரங்களையும் அழகாக பதிவு செய்திருப்பதில் பாரி பாதி கவனம் ஈர்த்து விடுகிறது!
மொத்தத்தில் புதியவர் ரஜினியின் இயக்கத்தில், "பாரி" ரசிகர்களால் சொல்ல முடியாது "சாரி!"