இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தில் பிஸியாக பரபரப்பாக பேசப்படும் ஒரே ஸ்டார் என்றால் அது பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் தான். எடுப்பான பல்லும், துடிப்பான முகமும், தடிப்பான உருவமும், கருப்பு கண்ணாடியில், வெள்ளை உடையில் அவர் தலையை கோதி விடும் ஸ்டைலும், எப்படிப்பட்ட விமர்சனம் வந்தாலும் அதை அசால்ட்டாக எடுத்து கொள்ளும் மனபக்குவம் கொண்டவர், தனக்கு பெண் ரசிகர்கள் ரொம்ப இருக்காங்க, பேஸ்புக்கில் 5லட்சம் ரசிகர்கள் இருக்காங்க என்று
சிரிக்காமல் சொல்பவர் இந்த மனிதர்.
தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் இவர், முதன்முறையாக சந்தானத்துடன் கைகோர்த்து இருக்கிறார். பல விளம்பர படங்களை இயக்கிய மணிகண்டன் என்பவர் இவர்களை வைத்து "கண்ணா லட்டு திண்ண ஆசையா" என்ற படத்தை இயக்கி வருகிறார். ராமநாரயணன் இப்படத்தை தயாரிக்கிறார். பவர்ஸ்டார், சந்தானம் ஆகியோருடன் சேது என்ற மற்றொரு ஸ்கின் டாக்டரும் நடிக்கிறார். படத்தின் கதைப்படி இவர்கள் மூவரும் ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள். ஆனால் அந்தப்பெண் இவர்கள் மூவரில் யாரை காதலிக்கிறாள் என்பதை கலகலப்பாக சொல்ல போகிறாராம் டைரக்டர். தற்போது இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறார் பவர்ஸ்டார்.
இந்நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு ஷங்கர், விக்ரமை வைத்து இயக்கும் "ஐ" படத்தில் ஒரு முக்கிய ரோலில் சந்தானத்துடன் சேர்ந்து பவர் ஸ்டாரும் நடிக்கிறார். என்ன நம்பமுடியவில்லையா...? நம்பாவிட்டாலும் அதுதான் நிஜம்!
இதுகுறித்து பவர்ஸ்டார் நம்மிடம் கூறியதாவது, ஷங்கர் படத்தில் நடிப்பது உண்மை. எப்படி இப்படியொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது என்று கேட்டால் எல்லாம் கடவுளின் அருள் என்றார். சரி படத்தில் உங்கள் ரோல் என்ன என்று கேட்டபோது, சாரி! இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது ஷங்கர் படம், இப்போது 3 நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன். இன்னும் 2நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்றார் ரொம்ப அடக்கமாய். மேலும் தான் நடித்துள்ள "ஆனந்த தொல்லை" படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும், தீபாவளி அன்று தான் என் படம் ரிலீஸ் ஆக வேண்டும். அப்போது தான் ரசிகர்களிடம் அது ரீச்சாகும். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்றார் சிரிக்காமல்...!
எது எப்படியோ, பவர்ஸ்டார் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்!!