அக்காதான் எல்லாமே. அவருக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். இனி அவருக்காக சேவை செய்ய காத்துள்ளேன் என்று காலையில் அறிக்கை வெளியிட்ட சசிகலா, நேற்று மாலையில் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் இளவரசி உள்ளிட்ட ஏகப்பட்ட பேரும் உற்சாகமாக கிளம்பிப் போயுள்ளனராம். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அதிமுகவை விட்டு நீக்கப்பட்டார் சசிகலா. அவரது குடும்பத்தினரும் கூண்டோடு நீக்கப்பட்டனர். இருப்பினும் இளவரசி மீது மட்டும் முதல்வர் ஜெயலலிதா கை வைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த நான்கு மாத காலமாக பெங்களூர் கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் சமர்த்தாக வாக்குமூலம் அளித்து வந்த சசிகலா நேற்று திடீரென ஒரு பரபரப்பு அறிக்கை விட்டார். அதில் வரிக்கு வரி அக்கா அக்கா என்று ஜெயலலிதா மீது பாச மழை பொழிந்த அவர் அக்காவுக்கு துரோகிகள், எனக்கும் துரோகிகளே, அக்காவுக்கு எதிரிகள், எனக்கும் எதிரிகளே என்று உருக்கமாக கூறியிருந்தார். அக்காவுக்கு மீண்டும் சேவை செய்வேன் என்றும் உணர்ச்சிகரமாக முடித்திருந்தார்.
இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய சசிகலா, நேற்று இரவு பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். வழக்கில் ஆஜராவதற்காக அவர் பெங்களூர் போயுள்ளார். கடந்த காலத்தைப் போல இல்லாமல், இந்த முறை புதுத் தெம்புடன் அவர் காணப்பட்டதாக விமான நிலையத்தில் சசிகலாவை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சசிகலாவுடன் இளவரசி உள்ளிட்டோரும் சென்றனர்.
வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு:
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், இன்று சசிகலா ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இருந்து பெங்களூர் ஹோட்டலில் தங்க வந்த சசிகலாவிடம், எப்போது நீங்கள் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குச் செல்வீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தபடியே ஹோட்டலுக்குள் சென்றுவிட்டார்.