காட்டுக்குள் ட்ரக்கிங் செல்லும் நண்பர்கள் குழு ஒன்றுக்கு ஏற்படும் பயங்கர அனுபவங்கள்தான் "அஸ்தமனம்" படத்தின் மொத்த கதையும். இரண்டு பெண்கள் நான்கு ஆண்கள் அடங்கிய நண்பர்கள் பட்டாளம் ஒன்று கைடு ஒருவரின் துணையுடன் காட்டுக்குள் நுழைகிறது. குறிப்பிட்ட தூரம்வரை வாகனத்தில் செல்பவர்கள் அதற்குமேல் வாகனம் செல்ல முடியாத நிலையில் நடந்தே
செல்லத் தொடங்குகின்றனர். அடர்ந்த காட்டின் உட்புறம் வெகுதூரம் சென்றபின் இரவைக் கழிக்க ஒரு இடத்தில் தங்குகின்றனர். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தால் இந்த இளமைப் பட்டாளத்தை வழி நடத்தும் கைடு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
நண்பர்களுக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. இந்த கொலையை செய்தது யார்? என்ற கேள்விக்கு விடை தெரியும் முன்பே அவர்கள் ஆதிவாசிகளால் சிறைப் பிடிக்கப் படுகின்றனர். இந்த ஆதிவாசி கூட்டத்திலிருந்து நண்பர்கள் குழு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தும் போராட்டம்தான் மீதி படம்.
ராஜேஷ்,ஷரன், கனகசபை, விக்டோரியா, வித்யா என்று படத்தில் நடித்திருக்கும் புதுமுகங்கள் அனைவரும் ஏற்றிருக்கும் பாத்திரங்களில் கனகச்சிதமாக பொருந்துகிறார்கள். பாடல்களே இல்லாத இந்தப் படத்தின் பின்னணி இசையை அமைத்திருப்பவர் சித்தார்த் விபின்.
திகில் படம் என்பதால் காட்சிகளுக்கேற்றார்போல் பயமுறுத்தும் வகையில் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றிருப்பவர் சி.ஜே.ராஜ்குமார். இசையமைப்பாளரைப் போலவே ஒளிப்பதிவாளருக்கும் நல்ல வாய்ப்புள்ள படம் எனபதால் கண்ணுக்குக் குளிர்ச்சியான அடர்ந்த காட்டின் அழகை அப்படியே தன் கேமராவில் அள்ளி அடைத்துக் கொண்டு வந்திருக்கிறார் சி.ஜே.ராஜ்குமார். குறிப்பாக சிறிய மரக்கிளை ஒன்றின்மீது வரிசையாக எறும்புகள் ஊர்ந்து செல்லும் காட்சியும், அதேபோல் நத்தை ஒன்று ஊர்ந்து செல்லும் காட்சியும் என்றென்றும் நினைவை விட்டு அகலாது.
படத்தின் கதையை ஒரு சினிமா டிக்கட்டின் பின்புறம் எழுதி விடலாம் என்றால், படத்தில் இடம் பெறும் வசனங்களை ஒரு பஸ் டிக்கட்டின் பின் பக்கத்தில் எழுதி விடலாம். அந்த அளவுக்கு குறைவான வசனங்களே படத்தில் இடம் பெற்றிருந்தாலும் பல வசனங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. ""அந்த பெரிய கேமராவைக் குடுங்க''என்று கைடு கேட்க, ""அந்த பைனாகுலரைதான் அவர் கேட்கிறார் எடுத்துக் கொடுங்க'' என்று குழுவில் ஒருவர் சொல்லும்போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது. பைனாகுலரில் கண்களை வைத்துப் பார்த்து விட்டு,""என்ன பொருளெல்லாம் தூரதூரமாகத் தெரிகிறது?'' என்று கைடு கேட்க, ""பைனாகுலரை திருப்பிப் புடிச்சுப்பார்'' என்று சொல்லும் காட்சி கலகலப்பானது.
இதேபோல் தன் தந்தை எம்.எல்.ஏ. என்று பெருமை பேசும் நண்பன் வானில் பறக்கும் ஒரு ஹெலிகேப்டரின் ஓசையைக் கேட்டு,""எங்க அப்பாதான் பார்லிமெண்ட்டுக்குப் போகிறார்'' என்று சொல்ல அதைக் கேட்க்கும் நண்பன்,""உங்க அப்பா என்ன எம்.எல்.ஏவாக இருக்கிறாரா? இல்லை எம்.பி.யாக இருக்கிறாரா?'' என்று கேட்கும் காட்சியும் ரசிக்கத் தக்கது.
படத்தில் பங்கு கொண்ட மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள்மீது இயக்குநருக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. படத்தின் துவக்கத்தில் வரும் தொழில் நுட்பக்கலைஞர்கள் ஒருவர் பெயரைக்கூட படிக்க முடியவில்லை.
படத்தின் துவக்கத்தில் நண்பர்கள் ஒவ்வொருவராக காரில் வந்து ஏறி காட்டுக்குள் புறப்படுகையில் ஒருவருக்கொருவர் ஆத்மார்த்தமான நண்பர்கள் என்று காட்டாமல், சின்ன சின்ன உரசல்கள் உள்ளவர்களாக இயக்குநர் சித்திரித்திருப்பது ஏன் எனப் புரியவில்லை. அதேபோல் காட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும் இன்னும் அதிக சம்பவங்களை உருவாக்கியிருந்தால் படத்தில் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்குமே!
நண்பர்கள் அனைவரும் திறந்தவெளியில் ஒரே பகுதியில் தங்கியிருக்க உடன் வந்த கைடு கொல்லப்படும் சத்தம் பக்கத்தில் படுத்திருக்கும் மற்றவர்களுக்கு கேட்கவில்லை என்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சி நம்பும்படியாக இல்லையே!
ஆங்கிலப் படங்களை "உல்டா' பண்ணுகிறோம் பேர்வழி என்று அபத்தமான அரைவேக்காட்டுப் படங்களை எடுக்கும் இயக்குநர்கள் மத்தியில் 90 நிமிடங்களே ஓடும் வகையில் ஆங்கிலப் பட பாணியில் ஒரு தமிழ் படத்தைத் தந்த இயக்குநர் பண்டி சரோஜ் குமாரின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும்.