லட்சுமியின் காலில் சரஸ்வதியா...? - ரவுடிகள் எல்லாத்துறையிலும் கை வைத்துவிட்டனர். தயவு செய்து கல்வித்துறையில் கால் வைக்க வேண்டாம் என கடுமையான கருத்துக்களை சொல்லி, மிகவும் எளிமையாக வெளிவந்திருக்கும் படம் தான் "விஜயநகரம்"!
கதைப்படி, ஹீரோ சிவன் எனும் சிவாவின் அப்பா பானுசந்தர் ஒரு கல்லூரி பேராசிரியர். படிக்காமல் பாஸ் பண்ண நினைக்கும் ஒரு மாணவனின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதால் தீர்த்து கட்டப்படுகிறார். கூடவே சிவனின் காதலி கம் கதாநாயகி ஹாசினியும் படுகாயம் அடைகிறார். இதில் வெகுண்டெழும் ஹீரோ, தம்பியின் பெயருக்குப் பின் பட்டம் போட நினைக்கும் ரவுடி பிரதர்ஸை தீர்த்து கட்டுவதுதான் "விஜயநகரம்" படத்தின் மொத்த கதையும்! இந்த அழகான கதையை ஆழமான குளத்தில் கல்விட்டு சேறும், சகதியுமாக்கிய கதையாக குழப்பிவிட்டுருப்பது தான் "விஜயநகரம்" படத்தின் பலவீனம்!
புதுமுகம் சிவன் என்கிற சிவா, கதாநாயகி ஹாசினி, தம்பியாக வரும் சசி, பானுசந்தர், அனுராதா, ஆர்யன், காந்தராஜ், ஜீனத், தோரா, அர்ச்சனா எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட முயற்சித்திருக்கின்றனர். ஆனால் முழுதாக முடியவில்லை பாவம்!
ஆர்.ஹெச்.அசோக்கின் ஒளிப்பதிவு, அருணகிரி - ராகவனின் இசை, புதியவர் தன்வீரின் எழுத்து-இயக்கம் என ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும் அடிதடி, வெட்டுகுத்து, ரத்தகளரி, ரவுடிசம் என சலிப்புதட்டுவதும், சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறு எங்கோ கதை பிரயாணிப்பதும் சலிப்பு தட்டுகிறது. அவற்றை இயக்குனர் மேலும் கவனமாக கையாண்டிருந்தால் தவிர்த்திருக்கலாம்.
சென்னை வேளச்சேரியில் ஒரு விஜயநகரம், வேலூர் அருகே ஒரு விஜயநகரம், இன்னும் மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் உள்ள விஜயநகரங்கள் போன்று இல்லாமல் நிஜமான விஜயநகர பேரரசு போன்று படம் இருந்திருக்குமேயானால் மேலும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த "விஜயநகரம்", "பேரரசு அல்ல - சிற்றரசு"!!