மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இல்லாத இரண்டு வசதிகளை, இதன் பதிப்பு 10ல் அறிமுகப் படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், ஸ்பெல் செக்கர் மற்றும் ஆட்டோ கரெக்ட் வசதி களை இணைத்துள்ளது.
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இணைய தள வலைமனையில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்திலும், இன்டநெட் எக்ஸ்புளோரர் 10 உட்பட, இந்த இரண்டு வசதிகளையும் தந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் ஸ்பெல் செக்கர் வசதி இல்லை. பல மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்கள், இதனாலேயே இந்த பிரவுசரைப் பயன் படுத்துவதில்லை என்று தெரிவித் திருந்தனர். எனவே தான், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனைத் தன் புதிய புரோகிராம்களில் தந்துள்ளது.
ஸ்பெல் செக்கருடன், ஆட்டோ கரெக்ட் வசதியும் தரப்படுகிறது. இதன் மூலம் வேர்ட் தொகுப்பில் நாம் எந்த சொற்களில் உள்ள பிழைகள் எல்லாம் தானாக திருத்தப்படுகின்றனவோ, அவை எல்லாம், இன்டர்நெட் எக்ஸ்புலோரர் பதிப்பு 10ல் தானாகவே திருத்தி அமைக்கப் படும்.
இந்த புதிய வசதிகளுடன் கூடிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எப்போது வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் இன்னும் அறிவிக்கவில்லை. வெளி யானவுடன், இந்த இரண்டு வசதிகளும் எத்தனை வாடிக்கையாளர்களை இழுக்கும் என நாம் காணலாம்.