11 மார்., 2011

பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் முதல் நமக்கு 3ஜி சேவை பல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு உள்ளது. தகவல் பரிமாற்றத்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப்படுவதே அதன் அடிப்படையான ஒரு செயல்பாடாகும். 3ஜி இதனைத் தருவதுடன், மிகத் தெளிவான ஒலி பரிமாற்றத்தையும் தருகிறது. மேலும் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் பரிமாற்றத்தை 3ஜி மூலம் மேற்கொள்ள முடியும். இந்தியாவில் அண்மைக் காலத்தில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமுதாய இணைய தள சேவைத் தளங்களால், டேட்டா பரிமாறப்படுவது அதிகரித்துள்ளது. அதே போல ப்ளிக்கர் மற்றும் யு–ட்யூப் போன்ற தளங்களால், வீடியோ, இமேஜ் தகவல்களும் பரிமாறப் பட்டு வருகின்றன. இவற்றுக்கு இன்னொரு காரணம், டாட்டா டொகோமோவில் தொடங்கி பல தொலைதொடர்பு நிறுவனங்கள், மிகக் குறைவான கட்டணத்தில் டேட்டா பரிமாறிக் கொள்வதற்கு அளித்து வரும் திட்டங்களாகும்.
பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடங்கி வைத்த 3ஜி சேவையினை, இனி பல தனியார் நிறுவனங்கள் தர இருக்கின்றன. 3ஜி சேவையில் பலப் பல புதிய தொழில் நுட்ப மாற்றங்களையும் பயன்பாடுகளையும் காண இருக்கிறோம். ஏற்கனவே முதன்மையான பயன்பாடுகளை இந்த மலரில் குறிப்பிட்டு எழுதி உள்ளோம். இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்.
1. லைவ் டிவி – கூடவே வரும் செய்திகள்: 3ஜி மூலம் மொபைல் போனில், ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடப்படுவதை லைவ்வாக, எங்கு சென்றாலும் பார்த்துக் கொண்டே செல்லலாம். அதே போல, டிவி ஒன்றை நாடித்தான், செய்திகளைப் பெற வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பப் படுவதனை, மொபைல் மூலம் பெறலாம்.
2. இமெயில் மற்றும் பைல் பெறுதல்: 3ஜி மூலம் நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகளை மொபைல் போன் வழியாக, எந்த நேரத்திலும் பெற முடியும். அதே போல அனுப்பவும் முடியும். நமக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பைல்களையும் இதே போலப் பெற முடியும். நாம் தயாரித்து வைத்துள்ள ஆவணங்களில், எந்த நேரத்திலும் எடிட் செய்து மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
3. மொபைல் ஒரு முனையமாக: மொபைல் போனை இனி ஒரு ஆன்லைன் டெர்மினல் போலப் பயன்படுத்த 3ஜி வழி தருகிறது. திடீரென நமக்குக் கிடைத்து வரும் இன்டர்நெட் இணைப்பு செயல்படாமல் போகும்போது, மொபைல் போனை நம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து, இணைய மோடம் போலப் பயன்படுத்தலாம். இதனால் எந்த நேரத்திலும் சூழ்நிலையிலும் நமக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும்.
4. வீடியோ ஸ்ட்ரீமிங்: நாம் நண்பர்களுடனும், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோ பைல்களை, எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப, காண முடியும். வேகமான பரிமாற்றத்தை 3ஜி மூலம் பெற முடியும். இவற்றைப் பதிந்து கொள்வதற்கும் 3ஜி உதவிடும்.
5. இணைய வழி அழைப்புகள் – வி.ஓ.ஐ.பி. (Voice Over Internet Protocol (VOIP): மிகப் பெரிய அளவில் பேண்ட்வித் எனப்படும் தகவல் பரிமாற்றத்திற்கான அலைவரிசையை, 3ஜி தருகிறது. ஏற்கனவே நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வரும் ஸ்கைப் போன்ற புரோகிராம்கள் மூலம், குறைந்த கட்டணத்தில் நம்மால் நம் நண்பர்களுடன், அவர்கள் எங்கிருந்தாலும் பேச முடியும். வீடியோ வழி உரையாடலையும் மேற்கொள்ள முடியும்.
6. அதிக வேகத்தில் கூடுதல் தகவல்: பல வேளைகளில் நாம் பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்து, பின்னர் படிக்கிறோம். அதிகமாக ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள், அதில் உள்ள லிங்க்ஸ் தரும் இணைப்புகளை இதே போல்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஜி.பி.ஆர்.எஸ். வழங்கும் வேகம் மிக மிகக் குறைவாக உள்ளதால் இவ்வாறு செயல்படுகிறோம். 3ஜி மூலம் இந்தக் குறை நிவர்த்தி ஆகும். வேகமாக டேட்டா கிடைப்பதால், லிங்க் இணைக்கும் அந்த வேளையிலேயே பைல்களைக் காண முடியும்.
7. துல்லிய ஒலி அனுபவம்: சிக்னல் கிடைக்கல, வாய்ஸ் விட்டு விட்டு வருது, பேசறது ஜாம் ஆகுது – போன்ற உரையாடல்களை நாம் 3ஜியில் சந்திக்க மாட்டோம். மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் ஒருவர் பேசுவதை இதன் மூலம் நாம் பெற முடியும். உங்கள் குழந்தையின் மழலையை, நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பக்கத்தில் இருந்து பேசுவது போலக் கேட்டு ரசிக்கலாம். மொத்தத்தில், இதுவரை தொழில் நுட்ப நீண்டநாள் கனவாக இருந்த 3ஜி சேவை, இப்போது கையில் வந்துவிட்டது. சிறிய வணிகர்கள் இதன் சேவையினை முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் வர்த்தகத்தினை மேம்படுத்தலாம். இன்னும் இன்டர்நெட் நுழையாத கிராமங்களில் உள்ள மக்கள், 3ஜி மூலம் அதனைப் பெறலாம். வலைமனைகளை இணையத்தில் உருவாக்கி செயல்பட்டு வருபவர்கள், இடைஇடையே இணைப்பு அறுந்து போகும் இன்டர்நெட்டை விட்டு, 3ஜி சேவை மூலம் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
பல துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு, 3ஜி ஒரு வரப்பிரசாதமாகக் கிடைத்துள்ளது. அனைவரும் இதனைப் பயன்படுத்தி நம்மையும் நாட்டையும் வளப்படுத்துவோம்.



போன்களுக்கு வரும், தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்., களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இம்மாதம் 21ம்தேதி வரை தள்ளி வைத்துள்ளது.

மொபைல் போன்களில் தினமும் தேவையற்ற அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியில் கடன் வேண்டுமா? உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா? உங்களுக்கு பல லட்சம் ரூபாயில் பரிசு காத்திருக்கிறது என்பது போன்ற, பல்வேறு விதமான விளம்பரங்கள், மொபைல் போன் வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்கின்றன. இப்பிரச்னைக்கு முடிவு கட்ட மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. தேவையில்லாத அழைப்புகளை விரும்பாதவர்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. டெலிமார்க்கெட்டிங்கில் ஈடுபடுபவர்களிடமிருந்து, வெறுப்படைச் செய்யும் அழைப்புகளும், குறுந்தகவல்களும் (எஸ்.எம்.எஸ்.,) வந்து கொண்டு தான் இருக்கின்றன. “அழைக்காதீர்’ பட்டியலில் தங்கள் மொபைல் எண்ணை வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பிறகும், டெலிமார்க்கெட்டிங் சேவை நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, கூறப்பட்டது. இதை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களோ, தொலைபேசி சேவை நிறுவனங்களோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே, அபராத தொகையை கணிசமாக உயர்த்த “டிராய்’ முடிவு செய்தது.

டிராய் விதித்த விதிமுறைகளின் விவரம் வருமாறு: டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளை விரும்பாதவர்கள், 1909 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அல்லது இதே எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, “என்னை அழைக்காதீர்’ என்று குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளலாம். டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் “700′ என்ற இலக்கத்தில் துவங்கும் எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிலிருந்து தான் விளம்பர எஸ்.எம்.எஸ்.,க்களை அனுப்ப வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, என்றால் சேவையை தொடரலாம். அவர்கள் இதை தொல்லை தரும் அழைப்பாகக் கருதி புகார் செய்தால், சம்பந்தப்பட்ட டெலிமார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை தேவையற்ற அழைப்பை அனுப்பினால் 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது அழைப்புக்கு 80 ஆயிரமும், நான்காவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரமும், ஐந்தாவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஆறாவது அழைப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சேவையை நடத்துவதற்க டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள், தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கணிசமான உத்தரவாத தொகையை முன்கூட்டியே செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தேவையற்ற அழைப்புகள் குறித்து பதிவு செய்யாத சந்தாதாரர் ஒருவரது மொபைல் போனில் இருந்து, வர்த்தக தொடர்பான விளம்பரங்களை அனுப்பினால், அவருக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். அடுத்த முறையும் தவறை செய்தால், அவரது தொடர்பு துண்டிக்கப்படும். டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் விளம்பரங்களை இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி தொந்தரவு செய்யக்கூடாது. டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் அனுப்பும் தகவல்கள், சேவை வழங்கும் மொபைல் நிறுவனம் வழியாக வர வேண்டும். அந்த தகவல்களை, அந்நிறுவனம் பரிசோதித்து தேவையற்றதை நீக்கவும் உரிமை உள்ளது. இவ்வாறு டிராய் விதிமுறைகளை வகுத்தது.

வேண்டாத அழைப்புகளை தவிர்க்க ஒதுக்கப்படும் எண் குறித்து, பல்வேறு குழப்பங்கள் நிலவுவதால் டிராய், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விதித்த கெடுவை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது. தேவையற்ற அழைப்புகளை தடுக்க ஒதுக்கப்பட்ட எண்ணுக்கும், எஸ்.டி.டி.,எண்ணுக்கும் இடையே சில இடங்களில் குழப்பம் காணப்படுகிறது. தொலை தொடர்புத் துறை இதற்கென இன்னும் உரிய எண்களை ஒதுக்கீடு செய்யாததால், நேற்றுடன் முடிவடைந்த கெடுவை வரும் 20ம் தேதி வரை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு நீட்டித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் வரும் 21ம்தேதி வரை தொல்லை தரும் அழைப்புகளையும், குறுந்தகவல்களையும் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.

என்னதான் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாத்தாலும், சில ஹேக்கர்கள் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்து, திருடுவதிலும், நாசம் செய்வதிலும் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு பாஸ்வேர்ட் திருடப்பட்ட கம்ப்யூட்டர் களை ஆய்வு செய்த போது மிகவும் பிரபலமான பாஸ்வேர்ட் ஒன்று பெரும்பா லானவர்களால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த பாஸ்வேர்ட் 1234356. 3 கோடியே 20 லட்சம் திருடப்பட்ட பாஸ்வேர்ட்களை ஆய்வு செய்திடுகையில் இந்த தகவல் தெரிய வந்தது. பாஸ்வேர்டை நினைவு வைப்பதில் உள்ள சோம்பேறித்தனமும், அதனை எளிதாக டைப் செய்திட வேண்டும் என்கிற ஆசையுமே இந்த பாஸ்வேர்டைப் பலர் பயன்படுத்த இடம் அளித்துள்ளது.
பொதுவாக சிறிய பாஸ்வேர்ட்கள், சிறிய பெரிய எழுத்துக்களையும் எண்களையும் கலந்திடாத பாஸ்வேர்ட், டிக்ஷனரியில் உள்ள சிறிய சாதாரண சொற்கள் ஆகியவை பாஸ்வேர்ட்களாக இருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றைக் கண்டறிந்து விடுகின்றனர். இந்த ஆய்வில் இன்னும் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
110 முறை முயற்சி செய்தால், நிச்சயம் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு பாஸ்வேர்டைக் கண்டறியலாம். ஆயிரம் அக்கவுண்ட்களை உடைத்தெறிய ஒருவருக்கு 17 நிமிடங்களே ஆயின. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் 30% பேர் மிகச் சிறிய, ஆறு எழுத்துக்களுக்கும் குறைவாக, பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகின்றனர். 60 சதவீதம் பேர் பயன்படுத்தும் எழுத்துக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.
50 சதவீதம் பேர் பெயர்கள், வழக்குச் சொற்கள், அகராதியில் உள்ள சில குறிப்பிட்ட சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் தான் ட்விட்டர் போன்ற தளங்கள் நூற்றுக் கணக்கான சொற்களை, பாஸ்வேர்ட்களாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது.
பாஸ்வேர்ட்களை எப்படி அமைக்க வேண்டும் என்ற அறிவுரையைப் பெற விரும்புகிறீர்களா! என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்

பிப்ரவரி 22 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7க்கான சர்வீஸ் பேக் 1 ஐ வெளியிட்டது. இதனைப் பெற விரும்புபவர்கள் என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதில் ஏற்கனவே வெளியிடப்பட்ட பாதுகாப்பிற்கான குறியீடுகள், திறன் கூட்டும் வசதிகள், நிலையாக இயங்குவதற்குத் தேவையான புரோகிராகள் மற்றும் சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாறா நிலையில், நாம் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், நம் கம்ப்யூட்டர் தானாகவே இந்த சர்வீஸ் பேக்கினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளும். தாங்களாகவே பெற்று இன்ஸ்டால் செய்திடும் வகையில் செட் செய்து வைத்துள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட தள முகவரி சென்று பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 30 நிமிடங்கள் வரை நேரம் எடுக்கும். நீங்கள் எந்த வகையில் இதனைப் பதிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில், இதற்கு 750 எம்பி முதல் 7400 எம்பி வரை உங்கள் ஹார்ட் ட்ரைவில் இடம் இருக்க வேண்டும். எனவே அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு இந்த பணியை மேற்கொள்ளவும்.
இந்த சர்வீஸ் பேக் வெளியிடுவதற்கு முன் வந்த தொகுப்பினை (prerelease version of SP1) இன்ஸ்டால் செய்திருந்தால், அதனை முழுமையாக அன்இன்ஸ்டால் செய்த பின்னர் இந்த பேக்கினை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். சில வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகள், இந்த சர்வீஸ் பேக்கினைச் சரியாக இன்ஸ்டால் செய்திட அனுமதிக்காது. வைரஸ் என்று எண்ணிக் கொண்டு தடை விதிக்கும். எனவே ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்குவதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நல்லது.
இத்தொகுப்பினை இன்ஸ்டால் செய்வது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அளித்துள்ள குறிப்புகளைப் படிக்க என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும்

இணையத்தில் இயங்கும் நூலகங்களில் இது ஒரு வியக்கத்தக்க பயனுள்ள டிஜிட்டல் மீடியா நூலகம். அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் மீடியாவில் பதிந்து தருகிறது. நம் வீட்டில் நம் தாத்தா அல்லது அவருடைய தாத்தாவின் அந்தக் காலத்து சிதிலமடைந்த போட்டோக்களைப் பார்க்கும் போது, அப்போதே டிஜிட்டல் மீடியாவாக இருந்தால் சேதம் இல்லாமல் இருந்திருக்குமே என்ற எண்ணம் எழுகிறது. பின் எப்படியாவது அதனைச் சரி செய்து, ஸ்கேன் செய்து நம் கம்ப்யூட்டரில் போட்டு வைக்கிறோம். அதே போல உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன. இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் உலா வருவதற்கும் பல வழிகள், பிரிவுகள் உள்ளன. இடம், காலம், பொருள்,பொருள் வகை, அமைப்பு நிறுவனங்கள் என உலா வரலாம். ஆங்கிலம் மட்டுமின்றி வேறு பல மொழிகள் மூலமும் தேடலாம். சிறிய திரைப்பட வீடியோக்கள், ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள் வாரியாகவும் தேடித் தகவல்களைப் பெறலாம்.
ஒருமுறை தேடிப் பார்க்கத் தொடங்கினால் நம் முன்னோருக்கு முன்னோரான ஒரு தாத்தாவைச் சந்தித்த சந்தோஷம் கிடைக்கிறது. மதுரை என்று போட்டு தேடியதில், இரண்டு போட்டோக்கள் கிடைத்தன. அதிலும் சாதி குறித்த தகவல்கள் கிடைக்கின்றன.தமிழ் என்று போட்டு தேடிய போது, வெகு காலத்திற்கு முன் எப்படி யெல்லாம் தமிழ் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது. போட்டோக்களின் கீழே, நூல்களின் முன் அட்டையில் தமிழில் பெயர், குறிப்புகளை அந்தக் காலத்தில் நமக்காக எழுதி வைத்த அந்த பெரியவர் எப்படி இருந்திருப்பார் என்ற சுகமான கற்பனை ஓடுகிறது. அவசியம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தளம் இந்த உலக டிஜிட்டல் மீடியா இணைய தளம். இதன் முகவரி:


ஒர்க்ஷீட் ஒன்றில் கிராபிக்ஸ் இணைப்பது பல வழிகளில் அதில் உள்ள டேட்டாவினை நமக்கு எடுத்துக் காட்டும். ஆனால் சில வேளைகளில் இந்த கிராபிக்ஸ் தேவையற்ற சமாச்சாரமாகத் தோன்றும். குறிப்பாக ஒர்க்ஷீட் பிரிண்ட் எடுக்கும் போது அது தேவையற்ற தாகத் தோன்றும். நாம் வேண்டும் போது இதனை வைத்துக் கொண்டு, வேண்டாதபோது மறைக்கும் வழியினை இங்கு காணலாம்.
நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 97 முதல் எக்ஸெல் 2003 வரையில் எதுவாக இருந்தாலும் கீழே கண்டுள்ள வழிகளைப் பின்பற்றவும்.
1. Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Options dialog box காட்டும்.
2. இதில் View என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும்.
3. பின்னர் Hide All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்தவுடன் கிராபிக்ஸ் ஒர்க்ஷீட்டிலிருந்து மறைக்கப்படும். அவை அங்குதான் இருக்கும். பார்வையிலிருந்தும் பிரிண்ட் செய்வதிலிருந்தும் மறைக்கப்படுகிறது.
நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. Office பட்டனை அழுத்தி அதில் Excel Options என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். Excel Options dialog box காட்டப்படும்.
2. பின் டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை ஸ்குரோல் செய்து பார்க்கவும். அங்கு Display Options என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம். இதில் உள்ள ட்ராப் டவுண் லிஸ்ட்டினைப் பயன்படுத்தி எந்த ஒர்க்புக் என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Nothing (Hide Objects) என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. ஓகே கிளிக் செய்தால் கிராபிக்ஸ் மறைக்கப்படும்.
இனி உங்கள் ஒர்க்ஷீட்டினை வழக்கமான முறையில் பிரிண்ட் செய்திடலாம். பிரிண்ட் செய்த பின் மீண்டும் கிராபிக்ஸ் படங்கள் ஒர்க்ஷீட்டில் காணப்பட வேண்டும் எனில் மேலே சொன்னபடி ஆப்ஷன்கள் பட்டியலில் சென்று Show All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
முழுத்திரையில் ஒர்க்ஷீட்
எக்ஸெல் பயன்படுத்துகையில் நீங்கள் தயாரித்த ஒர்க்ஷீட்டின் தகவல்கள் மட்டுமே மானிட்டரின் முழுத் திரையில் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்களா? View மெனு சென்று Full Screen என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பன் தரும் வியூ டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Workbook Views குரூப்பில் இருந்து Full Screen என்பதனைக் கிளிக் செய்திடவும்.
இவ்வாறு மாற்றியபின் உங்கள் பணியினை முழுத்திரையில் மேற்கொள்ளலாம். மேற்கொண்டு முடித்தபின் அதே பிரிவில் onscreen பட்டனை அழுத்தவும். இதனால் வழக்கமான தோற்றம் கிடைக்கும். அல்லது எஸ்கேப் (Escape) கீயையும் அழுத்தலாம்

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் திருட்டுத் தனமாக காப்பி எடுத்து பயன்படுத்தும் சாப்ட்வேர் தொகுப்பு எது எனக் கேட்டால் சற்றும் சிந்திக்காமல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு எனக் கூறிவிடலாம். உலக அளவில் பல நாடுகளில் இந்த தொகுப்பு தான் நகலெடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இது சட்ட ரீதியாகப் பல பிரச்னைகளைத் தரும் என்றாலும் சில அலுவலகங்களில் கூட திருட்டுத் தனமாக இதனைப் பயன்படுத்தும் பழக்கம் பரவி வருகிறது. சட்டப் பிரச்னைகளைக் காட்டிலும் நாம் நகல் தொகுப்புகளைப் பயன்படுத்தினால் மைக்ரோசாப்ட் இதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்காது. இலவச அப்டேட் தொகுப்புகள் கிடைக்காது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு தரும் அனைத்து பயன்களையும் தரும் இலவச ஆபீஸ் தொகுப்புகள் பல இருக்கும் போது ஏன் நாம் இது போல திருட்டு தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். ஒன்றல்ல பல ஆபீஸ் தொகுப்புகள் நாம் பயன்படுத்த இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. இவை குறித்து இங்கு காணலாம்.
1. லோட்டஸ் சிம்பனி: கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தொடக்க காலத்திலேயே தன் தடம் பதித்த ஐ.பி.எம். நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இடத்தினைக் காலி செய்திட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சிகளில் ஒன்றுதான் லோட்டஸ் சிம்பனி என்ற சாப்ட்வேர் தொகுப்பாகும். இதில் ஒரு வேர்ட் ப்ராசசர், ஸ்ப்ரெட் ஷீட் மற்றும் பிரசன்டேஷன் சாப்ட்வேர் ஆகியன இணைந்து தரப்பட்டுள்ளன. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை இலவசமாய் இறக்கிக் கொள்ள என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த இலவச சாப்ட்வேர் தொகுப்பு எந்தவித பிரச்சினையும் இன்றி சிறப்பாக இயங்குகிறது. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் அனைத்து தொகுப்புகளுடன் இணைந்து இயங்குகிறது. அதாவது ஆபீஸ் தொகுப்பில் உருவான அனைத்து பைல்களையும் இதில் திறந்து பயன்படுத்தலாம். இதில் பயன்படுத்தி மீண்டும் எம்.எஸ். ஆபீஸ் பார்மட்டில் சேவ் செய்து அந்த பைலை எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் மீண்டும் பயன்படுத்தலாம். இந்த லோட்டஸ் சிம்பனி தொகுப்பில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. அது இதன் டவுண்லோடிங் நேரம் தான். பொதுவாக எந்த ஆபீஸ் தொகுப்பும் சற்று ஹெவியாகத் தான் இருக்கும். அதே போல இந்த தொகுப்பும் உள்ளது. இந்தியாவில் பொதுவாக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு பயன்படும் விதத்தை வைத்துப் பார்க்கையில் இதனை டவுண்லோட் செய்திட மணிக்கணக்கில் நேரம் எடுக்கும். ஆனால் நம் மக்கள் திரைப்படங்களையே மணிக் கணக்கில் டவுண்லோட் செய்வதால் இது போன்ற சாப்ட்வேர் தொகுப்பு களையும் டவுண்லோட் செய்திடலாம். எந்தவிதச் சட்ட சிக்கல் இன்றி சுதந்திரமாக ஒரு தொகுப்பினைப் பயன்படுத்த இன்டர்நெட் கட்டணம் செலுத்துவதில் தவறில்லை. ஒருமுறை டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டால் இது ஒரு அதிகப் பயனுள்ள புரோகிராம் என்பதனை உணரலாம். மேலும் இதன் பைல்கள் ஓப்பன் டாகுமெண்ட் பார்மட்டில் இருப்பதால் இந்த பைல்களை எந்த வரையறையும் கட்டுப்படுத்தாது. எனவே அனைத்து வகைகளிலும் சுதந்திரமாய் இயங்க இந்த சாப்ட்வேர் தொகுப்பு வழி வகுக்கிறது. 2. ஓப்பன் ஆபீஸ்: எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள வழி வகுக்கும் இன்னொரு தொகுப்பு ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு. இதுவும் இலவசமே. என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இதனை இலவசமாய் டவுண்லோட் செய்திடலாம். இதே தொகுப்பினை சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் வெப்சைட்டிலும் பெற்றுக் கொள்ளலாம். இதன் முகவரி: இந்த தொகுப்பும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் முழுமையாக இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு தொகுப்புகளிலும் மாற்றி மாற்றி பைல்களை செயல்படுத்தலாம். அது மட்டுமின்றி ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ், லினக்ஸ், சோலாரிஸ், மேக் ஓ.எஸ். எக்ஸ், ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இது இயங்குகிறது. ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட மொழிகளில் இது கிடைக்கிறது. நீங்கள் சாப்ட்வேர் புரோகிராமராக இருந்தால் இந்த தொகுப்பின் சோர்ஸ் கோட் பெற்று நீங்களும் இதனை மேம்படுத்த கோடிங் வழங்கலாம். இந்த தொகுப்பின் பெரும்பான்மையான வடிவமைப்பு சி ப்ளஸ் ப்ளஸ் மொழியில் அமைக்கப்பட்டுள்ளது. 3. ஸ்டார் ஆபீஸ்: இந்த தொகுப்பு இலவசமல்ல. ஆனால் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பின் விலையுடன் ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவுதான். ரூ.5,000க்கும் குறைவான விலையில் இது சன் மைக்ரோ சிஸ்டத்தால் விற்பனை செய்யப்படுகிறது. தொடக்கத்தில் இது முற்றிலும் இலவசமாக சிடிக்களில் பதிந்து வழங்கப்பட்டது. அந்த பழைய தொகுப்புகள் இருந்தால் இப்போதும் அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தொகுப்பு +2 மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. கட்டணம் செலுத்தி இதனைப் பெற விரும்புபவர்கள் செல்ல வேண்டிய தள முகவரி: இங்கு சென்றபின் 69.95 டாலர் பணம் செலுத்தினால் இந்த தொகுப்பினை டவுண்லோட் செய்து கொள்ளலாம். வேர்ட் ப்ராசசர், ஸ்ப்ரெட் ஷீட், பிரசன்டேஷன், டிராயிங், டேட்டா பேஸ் பயன்பாடு ஆகியவற்றில் பெரிய அளவில் வசதிகளைக் கொண்டு இந்த தொகுப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் இணைந்து செயல்படுகிறது.
4. கூகுள் டாக்ஸ்: வேர்ட் ப்ராசசிங் அல்லது ஸ்ப்ரெட் ஷீட் புரோகிராம்களில் இயங்க இப்போதெல்லாம் பெரிய அளவிலான ஆபீஸ் தொகுப்புகளைப் பதிந்து இயக்க வேண்டியதில்லை. இணைய வெளியில் இந்த ஆபீஸ் தொகுப்புகளை கூகுள் டாக்ஸ் என கூகுள் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. இதுவும் கூட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பிற்கு போட்டியானது என்று கூறலாம். ஒருமுறை இதனைப் பயன்படுத்தியவர்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். இதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள், ஸ்ப்ரெட் ஷீட்கள் அல்லது பிரசன்டேஷன் பைல்களை எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பிலும் பயன்படுத்தலாம். மேலும் கூகுள் டாக்ஸ் மூலம் உருவாக்கப்படும் பைல்கள் பாதுகாப்பாக சர்வரிலும் சேவ் செய்து வைக்கலாம். இதனால் எந்த வித வைரஸ் தாக்குதலும் இருக்காது. மேலும் ஆன்லைனில் சேவ் செய்து வைப்பதால் குறிப்பிட்ட கம்ப்யூட்டரில் தான் பைல் உள்ளது. அங்கு சென்று பைலை எடுக்க வேண்டும் என்ப தெல்லாம் இல்லை. எந்த ஊரி லும் சென்று இணைய இணைப் பின் மூலம் கூகுள் சர்வர் இணைப்பு பெற்று உங்கள் பைல்களை நீங் கள் கையாளலாம். தொடர்ந்து இணைய பயன்பாடு அதிகரித்து வருவதாலும், அதற்கான கட்டணம் குறைந்து வருவ தாலும் இனிமேல் கூகுள் டாக்ஸ் போன்ற ஆபீஸ் தொகுப் புகளின் பயன்பாடுதான் அனை வராலும் விரும்பப்படும் என்றுரைக் கலாம்.
5. திங்க் ப்ரீ: இலவசமாய்க் கிடைக்கும் ஒன்னொரு ஆபீஸ் புரோகிராம் திங்க் ப்ரீ (ThinkFree) இதனைப் பெற என்ற முகவரியில்உள்ள தளத்தை அணுகவும். இந்த தொகுப்பு உங்கள் பைல்களை ஸ்டோர் செய்து வைக்க 1 ஜிபி இலவச இடம் வழங்குகிறது. இந்த தொகுப்பைப் பயன்படுத்த இதன் வெப்சைட் சென்று பதிந்து கொள்ள வேண்டும். அதன்பின் கூகுள் டாக்ஸ் தளம் தருவது போல ஆன்லைனில் இந்த ஆபீஸ் தொகுப்பைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். இதன் ஒரு சிறப்பு இதன் இன்டர்பேஸ் அனைத்தும் (ஐகான், மெனு, செயல்பாடு) எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ளது போலவே உள்ளன. 6. ஸோஹோ – ஒர்க் ஆன்லைன்: ஆன்லைனில் கிடைக்கும் இலவச ஆபீஸ் சாப்ட்வேர் தொகுப்புகளில் மிகச் சிறந்தது இதுதான் என்று இதனைப் பயன்படுத்துபவர்கள் சத்தியம் செய்து கூறுவார்கள். அதிகம் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது இந்த தொகுப்பு. எந்த பார்மட்டிலும் ஆபீஸ் டாகுமெண்ட் பைல்களை இதில் கொண்டு வந்து இயக்கலாம். இதிலும் உருவாக்கலாம். கூகுள் டாக்ஸ் போலவே இதில் பதிந்து இயங்க வேண்டும். இந்த தளத்தின் முகவரி : http://www.zoho.com. இன்னும் இது போல பல ஆபீஸ் தொகுப்புகள் இணைய வெளியில் கிடைக் கின்றன. பல சாப்ட்வேர் வல்லுநர்கள் ஆபீஸ் தொகுப்பு உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இடத்தைத் தகர்க்கும் எண்ணத்துடனும், மக்களுக்கு இலவசமாய் இந்த சமாச்சாரங்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் உழைக்கின்றனர் என்பது தெளிவாகிறது. Abi Word, Jarte Word Processor, Yeah Write for Windows, Gnome Office, NeoOffice, neoOffice/J மற்றும் Koffice ஆகியவை இந்த வகையில் வெளியாகி இணைய வெளியில் கிடைக்கின்றன. இவை அனைத்தும்இயக்கத்தில் இயங்குவதில்லை. மேக், லினக்ஸ் இயக்கத்தில் இயங்குபவையும் இந்த பட்டியலில் உள்ளன. இவற்றை சர்ச் இஞ்சினில் தேடி அதன் தளம் சென்று பார்த்து இவற்றையும் டவுண்லோட் செய்து இயக்கித்தான் பாருங்களேன்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget