மெலிவான மேனியழகு…! மறைந்திருக்கும் ரகசியங்கள்
ஒல்லியான உடலழகை விரும்பாத பெண்களே இல்லை. தனது உடல் கொஞ்சம் குண்டாக இருந்தாலும் நம்மை கண்டுகொள்ள மாட்டார்களோ, கேலி செய்வார்களோ என்று அஞ்சுகிறார்கள். பசியும், பட்டினியுமாக கிடக்கிறார்கள். உடற்பயிற்சி எந்திரங் களுடன் அன்றாடம் மல்லுக்கட்டி வருகிறார்கள்.
உண்மையில் ஒல்லி உடல்தான் அழகா? மெலிவான மேனியைப் பெற பெண்கள் கடைப்பிடிக்கும் வழிகள் சரிதானா? என்பது பற்றி இங்கே சில பிரபலங்கள் பேசுகிறார்கள்.
ஒல்லியாக இருப்பதுதான் அழகா? என்ற கேள்விக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அஞ்சலி பதிலளிக்கிறார்…
“மேலைநாட்டுப் பெண்கள் இயல்பாகவே ஒல்லியாக இருப்பார்கள். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளைப் பார்த்து நம்நாட்டுப் பெண்களும் ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று நினைக்கின்றனர்.
பிரபலமான கம்பெனிகளின் விளம்பர மாடல்கள், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகள் மட்டுமன்றி சாதாரண குடும்பப் பெண்கள்கூட ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்று நினைத்து வருகின்றனர். மெலிவான உடலைப் பெறுவதற்காக தங்களுடைய அன்றாட உணவைக் கட்டுப்படுத்துவதும், பசியில்லை என்று கூறும் அனோரெக்ஸியா என்கிற மனோவியாதிக்கு ஆளாவதும் தற்போது சகஜமாகிப் போயிருக்கிறது.”
“உணவின்றி அதிகமாகப் பட்டினி கிடப்பதும் ஒல்லியாக எலும்புந்தோலுமாக இருப்பதும் நமக்கு உகந்தது அல்ல. ஏனென்றால் நமது உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும், எலும்பு வளர்ச்சிக்கும், மலட்டுத்தன்மை இல்லாதிருப்பதற்கும் 12 சதவீத கொழுப்புச்சத்து அவசியம் தேவை. எனவே ஒல்லி உடல் வேண்டுமென்று பட்டினி கிடப்பது உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து” என்று எச்சரிக்கையும் செய்கிறார் டாக்டர் அஞ்சலி.