எங்கள் வீட்டில், எனது மகன்களுக்குள் ஒருபோதும் பிரச்சினை வந்ததே இல்லை. இரண்டு பேரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அண்ணன் சொல்வதை தம்பி அப்படியே கேட்பான். புதுசாக ஏதாவது பொருள் வாங்கினால், அண்ணன் கையினால் பிரித்துக் கொடுத்த பிறகுதான் தம்பி எடுத்துக் கொள்வான். இப்போது மூத்தவன் பச்சைக்கொடி காட்டிய பிறகுதான் இளையவன் நடிக்க வருகிறான்
என்று தனது பிள்ளகைள் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவராகவும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும், நடிகராகவும் இருக்கும் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா தம்பதிக்கு 2 மகன்கள்.
மூ்த்தவர் விஜய பிரபாகரன். இளையவர் சண்முகப் பாண்டியன். இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். விஜய பிரபாகரன், சென்னை எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில், பி.இ. மூன்றாம் வருடம் படிக்கிறார். சண்முக பாண்டியன், சென்னை லயோலா கல்லூரியில், விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்து படித்து வருகிறார்.
இவர்களில் சண்முகப் பாண்டியன் தற்போது நடிகராக அவதாரம் எடுக்கிறார். இதுகுறித்து 'தினத்தந்தி'க்கு விஜயகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
என் இரண்டு மகன்களில் சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இதற்காக நடனம் மற்றும் சண்டை பழகி வருகிறான்.
அவனை கதாநாயகனாக நடிக்க வைத்து, சொந்த படம் தயாரிக்க முடிவு செய்து இருக்கிறோம். மூன்று நான்கு கதைகள் தயாராக உள்ளன. அதில், ஒரு கதையை தேர்வு செய்து படமாக்க இருக்கிறோம். இந்த படத்தில், நான் கவுரவ வேடத்தில் நடித்து தருவதாக சொல்லியிருக்கிறேன்.
படத்தை வேறு ஒரு டைரக்டர் இயக்குவார். டைரக்டர் தேர்வு நடக்கிறது. நான் தனியாக இன்னொரு படத்தை டைரக்ட் செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்.
வீட்டில், இரண்டு மகன்களும் அம்மா செல்லங்கள். நான், கொஞ்சம் கண்டிப்பாக இருப்பேன். எந்த விஷயமாக இருந்தாலும் இரண்டு பேருமே அம்மா மூலம்தான் என்னை அணுகுவார்கள்.
எங்க வீட்டில் அண்ணன்-தம்பிக்கு இடையே பிரச்சினை இல்லை. இரண்டு பேரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அண்ணன் சொல்வதை தம்பி அப்படியே கேட்பான். புதுசாக ஏதாவது பொருள் வாங்கினால், அண்ணன் கையினால் பிரித்துக் கொடுத்த பிறகுதான் தம்பி எடுத்துக் கொள்வான்.
மூத்தவன் பச்சைக்கொடி காட்டிய பிறகுதான் இளையவன் நடிக்க வருகிறான் என்று பெருமை பொங்கக் கூறியுள்ளார் விஜயகாந்த்.