‘சிறுவயது முதல் இன்றுவரை கணக்கில்லா காதலிகளிடம் சொதப்பி இருக்கிறேன்’ என்றார் சித்தார்த். சித்தார்த், அமலா பால் நடிக்கும் படம் ‘காதலில் சொதப்புவது எப்படி?’ இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந் தது. அப்போது சித்தார்த் கூறியதாவது: யூ டியூபில் குறும்படங்களை பார்த்தபோது பாலாஜி மோகன் இயக்கிய படம் என்னை கவர்ந்தது. அவரை தொடர்பு கொண்டு இந்த கதையில் நான்தான் நடிப்பேன். வேறு ஹீரோவிடம் இக்கதையை கொண்டு சென்றால் கொன்றுவிடுவேன்
என்று உரிமையோடு சொன்னேன். 10 நிமிட படம் 2 மணி நேர கதையாக்க முடியும் என்பது இதில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் காதலில் எப்படியெல்லாம் சொதப்புகிறார்கள் என்பதுதான் இதன் கதை.
காதலர் தினத்தில் படம் ரிலீஸ். நிஜவாழ்க்கையில் என்னைப்போல் காதலில் சொதப்பியது இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. பள்ளி பருவத்தில் இருந்தே இந்த சொதப்பலை தொடங்கிவிட்டேன். சமீபத்தில்கூட இப்படியொரு சொதப்பல் நடந்தது. ஷூட்டிங்கில் பங்கேற்றதால் கடந்த 4 மாதமாக ‘சொதப்பலுக்கு’ இடைவெளி விட்டிருக்கிறேன். எவ்வளவு முறை காதலில் சொதப்பினேன் என்பதை விரல்விட்டு எண்ண முடியாது. கணக்கில்லாமல் சொதப்பி இருக்கிறேன். ‘தமிழில் அதிகம் நடிப்பதில்லையே?’ என்கிறார்கள். தமிழில் யாரும் எனக்கு வாய்ப்பு தருவதில்லை. நான் நன்றாக தமிழ் பேசுவேன். எப்போதும் தெலுங்கு, இந்தியில்தான் பேசிக்கொண்டிருப்பேன். தமிழில் பேசவோ, நடிக்கவோ வாய்ப்பு கிடைத்தால் உடனே ஓடிவந்துவிடுவேன். இவ்வாறு சித்தார்த் கூறினார். பேட்டியின்போது தயாரிப்பாளர் சசிகாந்த், இயக்குனர் பாலாஜி மோகன் உடனிருந்தனர்.